திமுக-வின் துணைப் பொதுச் செயலாளராகவும், உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருப்பவர் பொன்முடி. இவரின் சகோதரர் தியாகராஜன், இன்று அதிகாலை 2:30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர், பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணராக இருந்துவந்தவர். விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணராகப் பணியாற்றிவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றார். மேலும், இவருக்குச் சொந்தமாக விழுப்புரம் காந்திசிலை அருகே மருத்துவமனை ஒன்றும் இருக்கிறது. பேரறிவாளனுக்கு சிறுநீரகப் பிரச்னை தொடர்பான சிகிச்சை அளித்துவந்தவரும் இவரே.

பேரறிவாளன் சிறையிலிருந்த சமயத்தில், சிறுநீரக சிகிச்சை தொடர்பாக பரோலில் வெளியில் வரும்போதெல்லாம், விழுப்புரத்திலுள்ள இவரின் மருத்துவமனைக்கு வந்துதான் சிகிச்சை பெறுவார். இந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று அதிகாலை 2:30 மணியளவில் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, தியாகராஜனின் உடலானது விழுப்புரத்திலுள்ள அவரின் மருத்துவமனையில் உறவினர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஸ், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சிவ.கணேசன் உள்ளிட்டோரும்; அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்; துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி; சட்டமன்ற உறுப்பினர்கள், பேரறிவாளன், அவரின் தாயார் அற்புதம்மாள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திமுக-வின் முக்கியப் புள்ளிகள், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை தியாகராஜனின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.