Published:Updated:

ஊக்கம்.. பரிசு.. மாற்றுத்திறன் மாணவியை கௌரப்படுத்திய திருச்செந்தூர் பள்ளி!

பாரதமாதா வேடத்தில் மாணவி சாய்பாலா
பாரதமாதா வேடத்தில் மாணவி சாய்பாலா

திருச்செந்தூரில் பாரதமாதா வேடமணிந்த மாற்றுத்திறனாளி மாணவியை தேசியக் கொடியேற்ற வைத்து கெளரவித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ளது திரு இராமையா பாகவதர் செந்தில்முருகன் நடுநிலைப்பள்ளி. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 157 மாணவர்கள், 180 மாணவிகள் என மொத்தம் 337 பேர் கல்வி பயின்று வருகின்றனர். வழக்கமாகப் பள்ளிகளில் தியாகிகள், தலைவர்கள், பேச்சாளர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து தேசியக் கொடியை ஏற்றவைப்பார்கள்.

கொடியேற்றும் மாணவி சய்பாலா
கொடியேற்றும் மாணவி சய்பாலா

பின்னர் சொற்பொழிவு, சிறப்புரை ஆற்றப்படும் நிகழ்ச்சி போன்றவை நடைபெறுவது வழக்கம். நாடு முழுவதும் 71வது குடியரசு தினவிழா இன்று கோலாகலாமாகக் கொண்டாடப்பட்ட நிலையில் இப்பள்ளியில், 7-ம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறன் உடைய மாணவி சாய்பாலாவை தேசியக் கொடி ஏற்றவைத்து ஊக்கப்படுத்தியுள்ளது பள்ளிநிர்வாகம்.

சிறப்புவிருந்தினருக்கு அளிக்கப்படும் வரவேற்பும், அனைத்து மரியாதையும் அளிக்கப்பட்டு உதவி தலைமையாசிரியை உமாவின் உதவியுடன் கொடியை ஏற்றிய மாணவி சாய்பாலாவிற்குப் பிற மாணவிகள் பரிசுகளும் இனிப்புகளும் வழங்கினர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை உமாவிடம் பேசினோம், ``கடந்த 1955-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி, திருச்செந்தூரிலுள்ள பழைமையான பள்ளிகளில் ஒன்று. 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சாய் பாலவால் சராசரி மாணவர்களைப் போல சரளமாகப் பேச இயலாது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

அதிக தூரம் நடக்க முடியாது. மாற்றுத்திறன் உடைய இம்மாணவிக்குப் படிப்பில் ஆர்வம் உண்டு. பாடங்களைத் தொடர் கற்பித்தல் மூலம் கற்பித்து வருகிறோம். பிற மாணவர்களிடமிருந்து தானாகவே தன்னை விலக்கியும், விலகியும் செல்லும் இம்மாணவியை ஆசிரியைகள், மாணவர்கள் இணைந்து பல வழிகளில் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு தேசியக் கொடி ஏற்றிட சிறப்பு அழைப்பாளராக மாணவி சாய்பாலாவை அழைக்க முடிவெடுத்தோம். அம்மாணவியின் தாயாரிடம் இதைச் சொன்னபோது நெகிழ்ந்தே போனார். சிறப்பு அழைப்பாளரான மாணவியை `பாரதமாதா’ வேடமணிந்து வரச் சொல்லிக் கூறினோம்.

பரிசளிப்பு
பரிசளிப்பு

மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற மாணவியின் பெற்றோர், பாரதமாதா வேடமணிந்து காலையில் 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கு அழைத்து வந்தார். மாணவி சாய்பாலா, பாரதமாதா வேடமணிந்து வந்ததைப் பார்த்த பிற மாணவர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். கொடியேற்றுகையில் அம்மாணவிக்கு உதவியாக நின்றேன்.

கொடியேற்றிய மாணவி சாய்பாலாவிற்குப் பரிசு வழங்கப்பட்டது. அவருக்குப் பதிலாக 8-ம் வகுப்பு மாணவன் அனந்த சுப்பிரமணியன் அப்துல்கலாம் அவர்களைப் பற்றிச் சிறப்புரை நிகழ்த்தினார். மாற்றுத்திறன் உடைய மாணவியைத் தேசியக் கொடியேற்ற வைத்ததில் பெருமை கொள்கிறோம்”என்றார்.

மாணவர்கள்
மாணவர்கள்

இதே திருச்செந்தூரில், முதன்முதலில் தொடங்கப்பட்ட பழைமையான ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு, சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவன் அல்லது மாணவியைக் கொடியேற்ற வைத்து கெளரப்படுத்தி வருவது வழக்கம். தற்போது இப்பள்ளியில், மாற்றுத்திறனுடைய மாணவியைக் கொடியேற்ற வைத்த நிகழ்ச்சி நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு