Published:Updated:

``சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அஞ்சலி செலுத்துகிறேன்!''- நிர்வாகி மகள் மரணத்தால் கலங்கிய திருமாவளவன்

தனக்காகக் காத்திருந்து, இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மிகவும் வருத்தத்தில் உறைந்திருக்கிறார் திருமாவளவன். மருத்துவமனையில் உடனிருந்ததோடு மட்டுமல்லாமல், இறுதிச் சடங்கிலும் கடைசிவரை உடனிருந்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தன்னிடம் வாழ்த்து பெறுவதற்காகக் காத்திருந்த தன் கட்சி நிர்வாகியின் மகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் உடனிருந்ததோடு மட்டுமல்லாமல், அவர் இறப்புக்கு மிகவும் உருக்கமாக அஞ்சலி தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.

திருமாவளவன்
திருமாவளவன்

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்கிற கார்வண்ணன். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரைக் கிழக்கு தொகுதிச் செயலாளராக உள்ளார். அவரின் மனைவி எழிலரசி தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், வி.சி.க சார்பில் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்டு மதுரை மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார்.

``பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவா?அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது.
தொல்.திருமாவளவன்.

இந்தநிலையில், நேற்று மதுரை வந்த திருமாவளவனை வரவேற்று, வாழ்த்து பெறுவதற்காக, சிட்டம்பட்டி சுங்கச்சாவடிக்குத் தன் குடும்பத்தோடு வருகை தந்திருக்கிறார் கார்வண்ணன். அப்போது, சாலையைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். அவரின் இடுப்பிலிருந்த குழந்தை யாழினி, அவர் பிடியிலிருந்து சிதறி சில அடி தூரம் மேலேதூக்கி எறியப்பட்டு தரையில் விழுந்துள்ளது.

`பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவா இது?’ - பி.ஜே.பி-யுடன் தொடர் மோதலில் உத்தவ் தாக்கரே!

உடனடியாக, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தந்தையும் குழந்தையும் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கார்வண்ணனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், குழந்தை யாழினியைக் காப்பாற்ற முடியாது எனக் கைவிரித்திருக்கின்றனர். இந்தநிலையில் இந்தச் சம்வத்தை அறிந்த திருமாவளவன், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். மருத்துவர்களிடம் சிகிச்சைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தியிருக்கிறார். ஆனாலும், யாழினி பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் சொல்லவே, அங்கிருந்து ராஜாஜி மருத்துவனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்திருக்கிறார் யாழினி.

திருமாவளவன்
திருமாவளவன்

தனக்காகக் காத்திருந்து, இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மிகவும் வருத்தத்தில் உறைந்திருக்கிறார் திருமாவளவன். மருத்துவமனையில் உடனிருந்ததோடு மட்டுமல்லாமல், இறுதிச் சடங்கிலும் கடைசிவரை உடனிருந்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தன் முகநூல் பக்கத்தில் மிகவும் உருக்கமாக ஒரு பதிவிட்டு யாழினிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், நடந்த சம்பவம் தொடர்பாக மிக விரிவாக விவரித்துள்ளார். இறுதியாக,

“பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவா?அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது.

“பெரிய பெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக்குப் `பாடிகார்டாக’ பாதுகாப்புக்குச் செல்வேன்” என்று யாழினி சொன்னதாக, யாழினியின் தமக்கை கவினி கூறியபோது என் கண்கள் கலங்கின. கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அன்புமழலை யாழினிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.