Published:Updated:

திருமழிசை: `வண்டிக்கு 50 ரூபாய்; டோக்கன் கொள்ளை?!’ - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்

போராட்டத்தில் திருமழிசை வியாபாரிகள்
போராட்டத்தில் திருமழிசை வியாபாரிகள்

திருமழிசை சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோயம்பேடு மார்க்கெட் மூலமாகக் கொரோனா தொற்று அதிகமாகப் பரவத் தொடங்கியதுடன், மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கனி சந்தை திறக்கப்பட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் வரும் திருமழிசை துணைக்கோள் நகரத்தில் இந்தச் சந்தை 200 கடைகளுடன் செயல்படுகிறது. அதேபோல, பழங்கள் மற்றும் பூச்சந்தைகள் மாதவரத்தில் செயல்படுகின்றன. திருமழிசை சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, வியாபாரிகள் நேற்று (ஜூலை19) நள்ளிரவு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், ``சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3,000 வாகனங்கள் காய்கனி ஏற்றிச் செல்வதற்காகவும் இறக்குவதற்காகவும் திருமழிசை சந்தைக்கு வருகின்றன. ஒரே நேரத்தில் 250 வாகனங்கள் மட்டுமே மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. காய்கனிகளை ஏற்றிக்கொண்டு அந்த வண்டிகள் கிளம்ப குறைந்தது மூன்று மணிநேரம் பிடிக்கிறது. ஐந்து ஐந்தாக வண்டிகள் வெளியேறிய பின்னரே, புதிய வாகனங்களை அனுமதிக்கிறார்கள். இதனால், ஏறத்தாழ ஆறு மணிநேரத்துக்குக் குறையாமல் ஒவ்வொருவரும் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.

கோயம்பேட்டில் இரண்டு மணிநேரத்தில் முடியக் கூடிய வேலை, இங்கு 12 மணி நேரமாகிறது. மாலை 6 மணிக்கு சந்தைக்குள் நுழைந்தால், அடுத்தநாள் காலை 6 மணிக்குத்தான் காய்கனியை கொள்முதல் செய்துவிட்டு கிளம்புகிறோம். இதனால், ஓய்வே கிடைக்காமல் பல வியாபாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். வாகனத்தை ஒழுங்குபடுத்துதற்காக நிற்கும் போலீஸார் டிரைவர்களை அடிப்பது, தரக்குறைவாகப் பேசுவது என அவமானப்படுத்துகிறார்கள். வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 ரூபாய் வரை டோக்கன் போடப்படுகிறது. அரசாங்க இடத்தில் போடப்பட்டுள்ள இந்தச் சந்தையில் டோக்கன் வசூலிக்கச் சொல்லி யாரும் உத்தரவிடவில்லை. ஆனாலும், தினமும் மூன்று லட்ச ரூபாய்க்கு குறையாமல் டோக்கன் கொள்ளையடிக்கிறார்கள். இந்தப் பணம் யாருக்குச் செல்கிறது?

கே.எஸ்.எம்.கார்த்திகேயன்
கே.எஸ்.எம்.கார்த்திகேயன்

சந்தைக்குப் பின்புறமுள்ள இடத்தில் தான் காய்கனியை ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகள் நடைபெறும். இங்கு சாலை அமைக்கப்படாததால், வண்டிகள் சகதியில் சிக்கிக் கொள்கின்றன. இவற்றை மீட்டெடுக்க ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். குட்டி யானை போன்ற டாடா ஏஸ் வண்டிகளை மீட்கும் போது, வண்டியின் சேஸ் அடிவாங்குகிறது. இதனால் எங்களுக்கு ஏகப்பட்ட செலவாகிறது. கோயம்பேட்டில் 4,000 கடைகளில் கொள்முதல் செய்த இடத்தில், இப்போது 200 கடைகளில்தான் கொள்முதல் செய்கிறோம். கழிப்பறை வசதி என்பதே இல்லை. நெருக்கடி எப்படி இருக்கும் என்பதை யூகித்துப் பாருங்கள்.

``எப்படியிருக்கிறது கோயம்பேடு மார்க்கெட்?'' - விவரிக்கும் சிறு வியாபாரிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயம்பேட்டிலுள்ள கடைகளை ஐந்து கடைகளுக்கு ஒன்றாகத் திறக்க அரசு அனுமதிக்கலாம். சுழற்சி முறையில் தினமும் 1,000 கடைகள் செயல்பட அனுமதித்தால், யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளிடம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். முதற்கட்டமாக, வாகனங்கள் சிக்கிக்கொள்ளாத வகையில் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள். ஆனாலும், பிரச்னை முடிந்தபாடில்லை” என்றார்.

மண் சாலையில் சிக்கிக் கொண்ட வாகனங்கள்
மண் சாலையில் சிக்கிக் கொண்ட வாகனங்கள்

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை உயரதிகாரிகளிடம் பேசினோம், “வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை இன்னும் இரண்டு நாள்களில் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். டோக்கன் விவகாரம் குறித்து விசாரிக்க வீட்டு வசதி வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு