Published:Updated:

நான்கு ஆண்டுகளாக அமைக்கப்படாத துணை மின் நிலையம்... திருமுல்லைவாயில் அவதி!

மின் நிலையம்
மின் நிலையம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நிலம் வாங்கியபோதிலும் இன்னும் துணை மின் நிலையம் அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கோடு செயல்படுவதாக அந்தப் பகுதி மக்கள் மின்வாரியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்காக 1.35 கோடி ரூபாய் செலவில் நிலம் வாங்கிய மின் வாரியம், 4 ஆண்டுகள் ஆகியும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல், மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா 144 தடை உத்தரவு... சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் பகுதி ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தப் பிரச்னை நிலவி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை குறைவான பகுதியாக இருந்த திருமுல்லைவாயிலில் தற்போது மக்கள் தொகை வெகுவாக உயர்ந்துள்ளது.

தென்றல் நகர், அம்பேத்கர் நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர், அய்யப்பன் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்தப் பயனாளர்களுக்கு ஆவடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையம் மூலமாகத்தான் பல ஆண்டுக்காலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமுல்லைவாயில் பகுதியில் குறைந்த அளவிலான வீடுகளே இருந்தன. அதனால் சத்தியமூர்த்தி நகர், துணை மின் நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் இந்தப் பகுதிக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது திருமுல்லைவாயில் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு போதுமானதாக இல்லை.

அறிவிப்புப் பலகை
அறிவிப்புப் பலகை

மின் தேவை அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த சில வருடங்களாக தங்கள் பகுதிக்குத் தனி துணை மின் நிலையம் அமைத்துத்தரக் கோரி மின்வாரியத்திடம் முறையிட்டு வந்தனர். பல முறை கேட்டும் பயன் இல்லாததால் பல போராட்டங்கள் செய்து மின்வாரியத்தை தங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வைத்தனர். பின்னர், திருமுல்லைவாயிலுக்குத் தனி துணை மின் நிலையம் அமைப்பதற்குச் சம்மதித்த மின்வாரியம் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமுல்லைவாயில் தென்றல் நகர் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான 50 சென்ட் நிலத்தை சுமார் 1.35 கோடி கொடுத்து வாங்கியது.

ஆனால், அதன்பின் மின்வாரியம், துணை மின் நிலையம் அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கோடு செயல்படுவதாக பகுதி மக்கள் மின்வாரியத்தைக் கடுமையாகச் சாடுகின்றனர்.

திருமுல்லைவாயில் ரயில்நிலையம்
திருமுல்லைவாயில் ரயில்நிலையம்

இது குறித்து நம்மிடம் பேசிய தென்றல் நகர் பகுதிவாசிகள் "திருமுல்லைவாயில் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. எங்கள் பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். கோடைக்காலம் வேறு வருகிறது, இந்தக் குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டில் குழந்தைகளை வைத்து எங்களால் சமாளிக்க முடியாது. நிலம் கையகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரையும் மின் வாரியம் துணை மின் நிலையம் அமைப்பதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. வருடா வருடம்போல் இந்த வருடமும் தொடர்கதையாகி விடக் கூடாது. இதற்கு மேலும் மின்வாரியம் தாமதப்படுத்தினால், மிக வீரியமான பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும்'' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

அச்சுறுத்தும் அமைதி, கொட்டிக்கிடந்த அன்பு... சுய ஊரடங்கு சென்னையில் எப்படி இருந்தது? #ChennaiQuarantineRounds

இந்தக் குற்றச்சாட்டு குறித்து திருமுல்லைவாயில் பகுதியின் துணை மின் பொறியாளர் மோகனைச் சந்தித்துப் பேசினோம். "திருமுல்லைவாயில் பகுதிக்கு ஆவடி சத்தியமூர்த்தி நகர் துணை மின் நிலையத்தில் இருந்துதான் இத்தனை ஆண்டுக்காலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சில ஆண்டுகளாக திருமுல்லைவாயில் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்குத் தனி துணை மின் நிலையம் அமைத்துத் தரக்கோரி வலியுறுத்தி வந்தனர். அதனால் மின் வாரியமும் தென்றல் நகர் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்காக சுமார் 50 சென்ட் நிலத்தை வாங்கியது. அதன் பின் அங்கு துணை மின் நிலையம் அமைப்பதற்கு டெண்டர் விடுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் கொஞ்சம் தாமதமாகி விட்டது. இப்போது டெண்டர் முறையாக விடப்பட்டு துணை மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி விடும்" என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு