Published:Updated:

ஆயுள் எக்ஸ் கேப்சூல்; வெளிநோயாளிகளின் பட்டியல்! -திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்த பின்னணி

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறிய திருத்தணிகாசலம் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் ரத்னா சித்த மருத்துவமனையை நடத்திவந்தவர் திருத்தணிகாசலம். சென்னை கே.கே.நகரில் குடியிருந்துவந்தார். இவர் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவு செய்தார். அதில் சவால்விடும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருத்தணிகாசலம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளிக்கப்பட்டது.

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீஸ் டீம், திருத்தணிகாசலத்தைக் கைது செய்தது. தொடர்ந்து, போலீஸ் காவலில் எடுத்து அவரை விசாரித்தனர். இதற்கிடையில் திருத்தணிகாசலம், சித்த மருத்துவம் படிக்கவில்லை எனவும் போலி மருத்துவர் எனவும் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதுதொடர்பான ஆவணங்கள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

`90 வீடியோக்கள்; கொரோனாவுக்கு மருந்து!' -சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சிக்கிய கதை

இதற்கிடையில் திருத்தணிகாசலத்திடம் சிகிச்சை பெற்ற சுரேஷ், குருநாதன் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் புதியதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளிலும் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அவரின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் எழும்பூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் திருத்தணிகாசலத்தைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது முக்கியத் தகவல்கள் கிடைத்தன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக அவர் வீடியோவில் பேசினார். அதுதொடர்பாகக் கேட்டபோது அவர், குறிப்பிட்ட சில மருந்துகளின் பெயர்களைத் தெரிவித்தார். இதற்கிடையில் வெண்புள்ளி, பக்கவாதம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு திருத்தணிகாசலத்திடம் சிகிச்சை பெற்றவர்கள் தங்களை ஏமாற்றியதாகவும் புகாரளித்துள்ளனர்.

அதன்பேரிலும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். திருத்தணிகாசலம், வெளிநாட்டில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அவர்களும் ஆன்லைன் மூலம் எங்களிடம் புகாரளித்துள்ளனர். இதற்கிடையில் திருத்தணிகாசலத்தின் கிளினிக்கில் ஆய்வு நடத்தியபோது நோயாளிகள் குறித்த விவரங்கள் கிடைத்தன. அந்தப் பட்டியல் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. வெளிநாட்டினர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அவரின் மனைவி வங்கி அக்கவுன்ட்டில் பணம் பெற்ற ஆதாரமும் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

திருத்தணிகாசலம்
திருத்தணிகாசலம்

திருத்தணிகாசலத்தின் மனைவி, சித்த மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். அதனால் அவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அவரின் வங்கி விவரங்களை சேகரித்துள்ளோம். ஏற்கெனவே திருத்தணிகாசலம் மீது மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று நிலுவையில் உள்ளது. அந்தப் புகாருக்கு திருத்தணிகாசலம் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

வெளிமாநிலத்தில் அவர் சித்த மருத்துவம் படித்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் திருத்தணிக்காசலம், ஆயுள் எக்ஸ் என்ற கேப்சூலை நோயாளிகளுக்குக் கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார். அந்த ஆயுள் எக்ஸ் கேப்சூல் குறித்த பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறோம். திருத்தணிகாசலத்தைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளதால் அவரால் ஓராண்டுக்குச் சிறையிலிருந்து வெளிவர முடியாது. அதற்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிடுவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு