Published:Updated:

`மதிய சாப்பாட்டு பட்ஜெட் வெறும் 30 ரூபாய்தான்; ஆனாலும்..!' - தேர்தல் களத்தில் தன்னம்பிக்கை பெண்

தேர்தல் பிரசாரத்தில் ஆர்த்தி
தேர்தல் பிரசாரத்தில் ஆர்த்தி

''என்னோட ரெண்டாவது மகன், அந்த நேரத்துல கைக்குழந்தை. கடுமையான வறுமை. அவனை தூக்கிக்கிட்டு பொதுக்கூட்டம், போரட்டங்கள்ல எல்லாம் கலந்துக்கிட்டிருக்கேன். கஜா புயல் நிவாரணப் பணிகள்ல என் தீவிரத்தை பார்த்து எங்க கட்சிக்காரங்களும், மக்களும் ஆச்சர்யப்பட்டாங்க.''

``தேர்தலில் நிற்பதற்கும், மக்களை ஈர்ப்பதற்கும் பணம் அவசியமல்ல. தன்னம்பிக்கையும், போராட்ட குணமும், கொள்கைப் பிடிப்பும் இருந்தாலே போதும்... ஒட்டுமொத்த தொகுதி மக்களையும் திரும்பிப்பார்க்க வைக்க முடியும்’’ என மிகுந்த உற்சாகத்தோடும், துடிப்புடனும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் பட்டதாரிப் பெண் ஆர்த்தி அப்துல்லா.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ளது அந்தக் குடிசை வீடு. இந்த சின்னஞ் சிறு குடிசையில், பரந்து விரிந்து வியாபித்திருக்கிறது ஏழ்மையின் வெளிப்பாடு. சுவர், மேற்கூரை என அனைத்தும் சிதிலமடைந்து மோசமான நிலையில் கிடக்கிறது. ஆனால் ஆர்த்தி அப்துல்லாவின் பேச்சில் கொள்கைப் பிடிப்பு நிறைந்திருக்கிறது.

ஆர்த்தி
ஆர்த்தி

``நான் பி.ஏ., பி.எட். படிச்சிருக்கேன். என்னோட கணவர் ஆட்டோ ஓட்டுறார். 18 வருசத்துக்கு முன்னாடி காதல் திருமணம் செஞ்சிக்கிட்டோம். எங்களுக்கு ரெண்டு பசங்க. என் கணவர் ஆட்டோ ஓட்டுறதுல கிடைக்குற கொறைஞ்ச வருமானத்தை வெச்சிதான் வாழ்க்கை ஓடுது. இந்தக் குடிசை வீடும்கூட எங்களுக்குச் சொந்தமானதில்ல. வாடகை வீடுதான்.

நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டதுல இருந்தே நான் அதுல தீவிரமா இயங்கிக்கிட்டு இருக்கேன். என் ரெண்டாவது மகன், அந்த நேரத்துல கைக்குழந்தை. கடுமையான வறுமை. ஆனாலும் அவனை தூக்கிக்கிட்டு பல பொதுக்கூட்டம், மாநாடு, போரட்டங்கள்ல எல்லாம் கலந்துட்டிருக்கேன்.

கஜா புயல் நேரத்துல நிவாரணப் பணிகள்ல நான் தீவிரமா ஈடுபட்டதை பார்த்து, எங்க கட்சிக்காரங்களும், இந்தப் பகுதி மக்களும் ஆச்சர்யப்பட்டாங்க. டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிரா போராட்டங்கள் நடத்தியிருக்கேன். இந்தச் செயல்பாடுகளை எல்லாம் பார்த்துத்தான் எங்கண்ணன் சீமான், என்னை வேட்பாளரா அறிவிச்சிருக்கார்.

தேர்தலுக்காக என்னால ஒரு சின்ன செலவுகூட செய்ய முடியாது. தன்னம்பிக்கையும் கொள்கையும்தான் எனக்கு பலம். பிரசாரத்துக்கு அஞ்சு பேர்ல இருந்து அதிகபட்சம் பத்து பேர்தான் போவோம்’’ எனச் சொல்லும் ஆர்த்தி, பிரசார செலவுகளை மிகவும் எளிமையாகச் சமாளிக்கிறார். காலையில் பிரசாரத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஆர்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் ஃபோன் செய்கிறார்கள். `தம்பி, உங்க வீட்லயே சாப்பிட்டு வந்துடுங்க. மத்த தம்பிகள்கிட்டயும் சொல்லிடுங்க. வெயிலுக்கு இதமா பழைய சோறு சாப்பிட்டுட்டு, நான் ரெடியா இருக்கேன்’ என்கிறார்.

ஆர்த்தி
ஆர்த்தி

கட்சி உறவுகள் சிலர், டூ வீலரில் ஆர்த்தியின் வீட்டின் முன் வந்து நிற்கிறார்கள். கட்சிக் கொடியை அதில் கட்டி, டபுள்ஸ் கிளம்புகிறார் ஆர்த்தி. வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்பவர், ’மதுக்கடைகளால, பெண்கள்தான் பாதிக்கப்படுறோம். நம்மோட அண்ணன், தம்பிங்கள இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பலி கொடுக்குறது? சிந்திச்சிப் பாருங்க. இதையெல்லாம் மாத்தணும்னா, எங்களுக்கு ஓட்டுப்போங்க’ என்கிறார். இப்படியாக பிரசாரம் தொடர்கிறது.

``ஹாரன், பிரசார வேனுக்கு எல்லாம் நிறைய செலவாகும். போலீஸ் பர்மிஷனுக்கு அலையணும். எங்க இயக்கத்துல உள்ள அண்ணன், தம்பிங்க சொந்தக் காசுலதான் பெட்ரோல் போட்டு, டூ வீலர்ல வர்றாங்க. அவங்களும் பொருளாதார ரீதியா கஷ்டப்படக்கூடியவங்க. ஏன் அவங்களுக்கு சிரமம் கொடுக்கணும்னு சில ஊர்களுக்கு நான் பஸ்லேயே போயி இறங்கியிருக்கேன். மதியான நேரத்துல நாங்க யாரும் பெரும்பாலும் சாப்பிடுறதில்ல. சமோசா, வடை, பிஸ்கட் சாப்பிட்டு சமாளிச்சிக்குவோம்.

என்னோட மதிய சாப்பாட்டுக்கான பட்ஜெட் 30 ரூபாய்தான். அதுக்கு மேல செலவு செய்றதில்ல. நாங்க பிரசாரத்துக்குப் போற பகுதியில எங்க கட்சி உறவுகள், கரும்புச்சாறு, தேநீர் எல்லாம் வாங்கிக் கொடுப்பாங்க. நேத்து எங்கண்ணன் ஒருத்தர், வாழைத்தார் கொடுத்துட்டுப் போனாரு. அதைச் சாப்பிட்டு சமாளிச்சிக்கிட்டோம். சில நேரங்கள்ல சாப்பாடும் ரெடி பண்ணுயிருப்பாங்க.

மோசமான முன்னுதாரணம் ஜீன்ஸ் அணிந்த பெண்கள் அல்ல; நீங்கள்தான் தீரத் சிங் ராவத்! #VoiceOfAval

திருத்துறைப்பூண்டி தொகுதியைப் பொறுத்தவரைக்கும், குடிக்க நல்ல தண்ணி கிடையாது. குளிக்கக் குளம் கிடையாது. இந்தக் கஷ்டத்தை எல்லாம் நானே நேரடியா அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன். இதையெல்லாம் மாத்தணும்னா, எனக்கு ஓட்டுப்போடுங்கனு மக்கள்கிட்ட நேரடியா எடுத்துச் சொல்றேன். இதுக்கு எதுக்கு பணம்? மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிற நல்ல மனசு இருந்தாலே போதும். யாரு வேணும்னாலும் தேர்தல்ல போட்டியிடலாம். குறிப்பா பெண்கள் நிறைய பேர் அரசியலுக்கு வரணும். அரசியல் பின்புலம், பண பலம் இல்லாத பெண்களாலும் அரசியல்ல சாதிக்க முடியும்னு நிரூபிச்சிக் காட்டணும்'' - உள்ளத்தில் உறுதியுடன் சொல்கிறார் ஆர்த்தி.

அடுத்த கட்டுரைக்கு