Published:Updated:

கொரோனாவால் உயிரிழந்த பெண், கைவிட்ட உறவினர்கள்... முன்வந்து அடக்கம் செய்த ஊராட்சித் தலைவர்!

அடக்கம் செய்யும் ஊராட்சிமன்றத் தலைவர்
அடக்கம் செய்யும் ஊராட்சிமன்றத் தலைவர்

பொன்னேரியில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் முன்வந்து முறைப்படி அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவருக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து, அந்தப் பெண்னுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை ஊழியர்கள், அந்தப் பெண் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால் உடலை உறவினர்களிடம் நேரடியாக ஒப்படைக்காமல், மயானத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வருவதாகவும், அங்கு வந்து பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்து கொள்ளுமாறும் கூறியிருக்கின்றனர்.

இறுதிச் சடங்கில் பாபு மற்றும் சமூக ஆர்வலர்கள்
இறுதிச் சடங்கில் பாபு மற்றும் சமூக ஆர்வலர்கள்

பெண்ணின் உறவினர்களும் மயானத்திலேயே உடலைப் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதையடுத்து, பெண்ணின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி பொன்னேரியை அடுத்த திருவேங்கடபுரம் மயானத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்தபடி, உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தபோது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால் பெண்ணின் உறவினர்கள் அடக்கம் செய்வதற்குத் தயக்கம் காட்டி இணைப்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

சடலத்தை அடக்கம் செய்ய தயக்கம் காட்டி உறவினர்கள் முன்வராத நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடலை ஆம்புலன்ஸில் வைத்துக்கொண்டு திருவேங்கடபுரம் மயானத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவமனை ஊழியர்கள் காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்து மயானத்துக்கு விரைந்த தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பாபு தன் சொந்த செலவில் ஜே.சி.பி இயந்திரத்தை அழைத்து வந்து மயானத்தில் 10 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டினார். பின்னர் ஊராட்சி தலைவர் பாபு மற்றும் அவர் உடன் இருந்த சமூக ஆர்வலர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டு ஆம்புலன்ஸில் இருந்து பெண்ணின் உடலைக் கயிறு கட்டி குழியில் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் பாபு
ஊராட்சி மன்றத் தலைவர் பாபு

கொரோனா நோயாளியின் உடல் என்பதால் உறவினர்களும், மாயான ஊழியர்களுமே அடக்கம் செய்ய முன்வராத நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு முன்வந்து களத்தில் இறங்கி முறைப்படி அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பாபு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இக்கட்டான சூழலில் களத்தில் இறங்கி உதவிய ஊராட்சிமன்றத் தலைவர் பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு