Published:Updated:

கொரோனா தடுப்பூசி, திடீர் மூச்சுத்திணறல், பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி; நடந்தது என்ன?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த புதூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரின் மனைவி லாவண்யா (25). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தபோது காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஒரு வருட காலமாகும் நிலையில், லாவண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். 9 மாத கர்ப்பிணியான அவருக்கு அவரது குடும்பத்தினர் செப்டம்பர் 30-ம் தேதி சீமந்தம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருத்தணி நகராட்சி சார்பாக புதூர் மேடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டார். ஏற்கெனவே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்றிருக்கிறார். சீமந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போது, லாவண்யா உடல் சோர்வாக இருப்பதாகக் கூறி படுக்கைக்குச் சென்றிருக்கிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த கர்ப்பிணி பெண் லாவண்யா
உயிரிழந்த கர்ப்பிணி பெண் லாவண்யா

அதையடுத்து, லாவண்யாவின் உறவினர்கள் அவரை உடனடியாக அருகிலுள்ள பட்டறை பெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு மருத்துவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு, ஊசி ஒன்று செலுத்தி, வீட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்குத் திரும்பிய கர்ப்பிணி லாவண்யாவுக்கு மீண்டும் சில மணி நேரங்களிலேயே அதீத மூச்சை திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் பயந்துபோன உறவினர்கள், அவரை மீண்டும் பட்டறை பெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு, லாவண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், `லாவண்யாவுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. இது ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால் இங்கு அதற்கான வசதிகள் இல்லை. எனவே, உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறி ஆம்புலன்ஸும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர்.

Representational Image)
Representational Image)

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், லாவண்யாவின் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் திருவள்ளூரை அடைவதற்குள்ளாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கனகம்மாசத்திரம் போலீஸார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம்பெண் லாவண்யாவின் தந்தை விஜயகுமார் கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான் உயிரிழந்து விட்டதாகவும் போலீஸாரிடம் புகார் அளித்தார். உயிரிழந்த இளம்பெண்ணுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முழுமையாக நிறைவடையாததால், விசாரணை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மாற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், நேற்று மாலை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளம்பெண்ணின் உறவினர்கள், ``நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவருக்குத் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட தடுப்பூசிதான் காரணம். மருத்துவர்கள் லாவண்யாவின் மரணம் குறித்து உண்மையான தகவலை அளிக்காத பட்சத்தில், உடலை வாங்க மாட்டோம்" என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

முற்றுகை
முற்றுகை

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ``தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மருத்துவக் குழு அமைக்கப்பட்டு முறையாக விசாரணை மேற்கொள்ளப்படும். உடற்கூறு ஆய்வு செய்த ஆய்வறிக்கை நோய்த் தடுப்புக்குப் பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். அவர் எதனால் உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆய்வுக் குழு அறிவிக்கும். அதே போல், மூச்சுத்திணறலால் உயிரிழந்த கர்ப்பிணி லாவண்யாவிற்கு ஊசி மட்டும் செலுத்தி விட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரை செய்யாத காரணத்தால், பட்டறை பெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது துறை ரிதீயான நடவடிக்கை எடுக்கப் பொது சுகாதாரத்துறைக்கு உத்தரவிடுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவஹர்லால் பட்டறை பெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜெயஜோதி என்பவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு