Published:Updated:

`வள்ளுவர் படத்தை இங்குதான் வரைய வேண்டுமா?!' -குன்னூர் ரயில்வே அதிகாரிகளிடம் கொந்தளித்த மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தின் கழிவறைச் சுவரில் திருவள்ளுவரை ஓவியமாக வரையப்பட்டு வந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது.

painting
painting

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே நூற்றாண்டுகளைக் கடந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூர், ரன்னிமேடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தற்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம், மலை ரயில் நிலைய சுவர்களில் மலைத்தொடர்கள், வன விலங்குகள், பழங்குடிகள் என இயற்கைக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வருகின்றன.

painting
painting

குன்னூர் மலை ரயில் நிலையத்தில் தமிழக கலாசாரங்களைப் பறைசாற்றும் விதமான ஓவியங்களை வரையும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, களரி உள்ளிட்டவையும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்தநிலையில் ரயில் நிலைய கழிவறைச் சுவரில் திருவள்ளுவர் உருவமும் ஓவியமாக வரையப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த உள்ளூர் மக்கள், `இந்த இடத்தில்தான் திருவள்ளுவரை வரைய வேண்டுமா?' என நிலைய அதிகாரிகளிடம் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். மக்களின் எதிர்ப்பு காரணமாக ஓவியம் வரையும் பணி நிறுத்தப்பட்டது.

painting
painting

இதுகுறித்து, குன்னூர் ரயில்வே நிலைய அதிகாரியிடம் கேட்டபோது, ``இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ரயில்வே பொதுப்பணித்துறையினர்தான் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் மக்களிடம் அதிருப்தி இருந்தால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

`உள்ளூர் மக்களும் இந்த ஓவியத்தை உடனடியாக அழிக்க வேண்டும்' என ரயில்வே அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.