Published:Updated:

`பொறுமையை இழந்துட்டேன்;திங்கள்கிழமை என் யுத்தம் ஸ்டார்ட்!'-அதிகாரிகளை தெறிக்கவிடும் தி.மலை கலெக்டர்

கலெக்டர் கந்தசாமி
கலெக்டர் கந்தசாமி

`இன்றைக்கு நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான புகார்கள் வந்திருக்கு. திங்கள்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம்.'

திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அந்த மாவட்ட மக்கள் மத்தியில் அதிக பிரபலம். மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டிவருவதால் அவர்மீது பொதுமக்கள் அதிக அளவு நேசம் வைத்து பேசிவருகின்றனர். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலையின் ஆட்சியராகப் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தை மேம்படுத்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்துவந்தார். குறிப்பாக ஏழைகள், பெண்கள் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்திவந்ததாக அவர்குறித்து பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள் திருவண்ணாமலை மக்கள்.

ஆட்சியர் கந்தசாமி
ஆட்சியர் கந்தசாமி

இதற்கிடையே, தற்போது ஆட்சியர் கந்தசாமி அதிகாரிகளின் செயல்பாடு குறித்து பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பிரதமரின் வீடு கட்டும்திட்டம் மற்றும் பசுமை வீடு திட்டத்துக்கு பயனாளிகளைத் தேர்வு செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தத் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அதிகாரிகளின் இந்த மெத்தன போக்கைக் கடுமையாக எச்சரித்து அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் தான் பேசிய ஆடியோவை பதிவிட்டுள்ளார் ஆட்சியர் கந்தசாமி. அதில், ``அனைவருக்கும் வணக்கம், நான் கலெக்டர் பேசுறேன்.

Vikatan

ஏற்கெனவே கடந்த மீட்டிங்கில் பசுமை வீடு திட்டம், மற்ற திட்டங்கள் எல்லாம் தொய்வாக இருக்குதுனு பேசினோம். அரசு இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள். நாங்க அதுக்குப் பதில் சொல்லிட்டு இருக்கோம். ஏழைகளுக்கான வீடு திட்டங்கள் பற்றி நாம் கடந்தமுறை அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தோம். தகுதியுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வீடு ஆகிய டேட்டாக்களை நம் கையில் வைத்திருக்கிறோம். ஆனாலும், ஏன் வீடுகள் ஒதுக்கப்படலைனு அதிக அளவு புகார் வந்துகிட்டே இருக்கு. இன்றைக்கு நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான புகார்கள் வந்திருக்கு. திங்கள்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம்.

ஆட்சியர் கந்தசாமி
ஆட்சியர் கந்தசாமி

ஒண்ணு நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா, இல்ல நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கணும். திங்கள்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கலைன்னா அன்னைக்கு எத்தனை பேரை வேணும்னாலும் சஸ்பெண்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அது ஒரு பஞ்சாயத்து செயலரோ... அது சம்பந்தப்பட்ட பி.டி.ஓ அல்லது டெபுடி பி.டி.ஓ யாராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க. எப்படிச் செய்யுறீங்களோ செய்யுங்க. திங்கள்கிழமை இந்த யுத்தத்தை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

Vikatan

நான் மிகவும் சீரியஸாக இதைச் சொல்கிறேன். என்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்துவிட்டேன். நீங்கள் பண்ணுகிற தவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க நான் இங்கு பணிக்கு வரவில்லை. தவற்றைக் காவல்காப்பவன் நான் கிடையாது. தவற்றை சரி செய்ய வந்துள்ளேன். இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து பிடிஓவும் பஞ்சாயத்து செயலர்களும் இதை கவனத்துடன் மிகவும் தீவிர விஷயமாகக் கருதி முடிக்க வேண்டும்.

ஆட்சியர் கந்தசாமி
ஆட்சியர் கந்தசாமி

திங்கள்கிழமை காலையில் வேலைக்கு வந்துவிட்டு, பின்னர் மாலையில் நீங்கள் அனைவரும் வேலையுடன் செல்கிறீர்களா, இல்லை வேலை இல்லாமல் போகிறீ்ர்களா? என்பதை முடிவு பண்ணிக்கோங்க. இந்தச் சவாலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்” எனக் கடுமையான தொனியில் பேசி முடிக்கிறார். கலெக்டரின் இந்த எச்சரிக்கை ஆடியோவால் திருவண்ணாமலை அதிகாரிகள் வட்டாரம் சற்று ஆடிப்போயிருக்கிறது.

`12 வருஷ துயரத்தை 10 நிமிஷத்துல போக்கிட்டார்!' - ஏழை பெற்றோரை நெகிழவைத்த திருவண்ணாமலை கலெக்டர்
அடுத்த கட்டுரைக்கு