Published:Updated:

ரிமோட் கார் வாங்க வைத்திருந்த ₹1,400 பணம்; கொரோனா நிதிக்குக் கொடுத்த சிறுவன்! #SpreadPositivity

மாவட்ட ஆட்சியருடன் மாணவன்.
மாவட்ட ஆட்சியருடன் மாணவன்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு சிறுவன், தான் ரிமோட் கார் வாங்குவதற்கு வைத்திருந்த ரூ.1,400 பணத்தை கொரோனா நிவாரண நிதியில் சேர்த்து விடும்படி மாவட்ட ஆட்சியரை சந்தித்துக் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகராட்சியில் திருவூடல் தெருவில் வசிப்பவர்கள் மோகன்குமார் - ஞானசௌந்தரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் ஞானசம்பந்தன் (17), பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறார். இளையவர் மாணிக்கவாசகம், ஆறாம் வகுப்புப் படித்து வருகிறார். 11 வயதேயான மாணிக்கவாசகம், தான் ரிமோட் கார் வாங்குவதற்கு சேர்த்து வைத்திருந்த ரூ.1,400 பணத்தை கொரோனா நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளார்.

மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதே சேமிக்கும் பழக்கத்தையும் தொடங்கியுள்ளார் மாணிக்கவாசகம். அவரின் அம்மா, அப்பா, மாமா மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சிறு, சிறு தொகையை தான் வைத்திருக்கும் உண்டியலில் சேர்த்து வைத்து வந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

அந்தக் காசுகளை கொரோனா நிவாரண நிதிக்குக் கொடுக்கப் போவதாகத் தன் பெற்றோரிடம் ஒரு வாரத்துக்கு முன்பாகத் தெரிவித்துள்ளார் மாணிக்கவாசகம். பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் தன் அண்ணன் ஞானசம்பந்தன் உதவியுடன் சைக்கிளில் பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்த இச்சிறுவன், கொரோனா நிவாரண நிதிக்கு தான் சேமித்து வைத்துள்ள தொகையை கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். தொகை சேமித்து வைக்கப்பட்டுள்ள உண்டியலை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.

அதில் இருந்த காசுகளை எண்ணியபொழுது, கடந்த வருடம் மாணிக்கவாசகத்தின் பிறந்தநாளின்போது, அவரின் தந்தை கொடுத்த ரூ.200 உட்பட ரூ.285 தாள்களாகவும்,10, 5, 2, 1 ரூபாய்கள் நாணயங்களாக ரூ.1,115 இருந்துள்ளது. அவற்றை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாணவனுக்கு வாழ்த்துகளைக் கூறினார்.

மாணவர் மாணிக்கவாசகம்.
மாணவர் மாணிக்கவாசகம்.
`என்னால முடிஞ்ச உதவி இது!' - கொரோனா நிதி வழங்கி நெகிழ வைத்த மூன்றாம் வகுப்பு மாணவன்

இது தொடர்பாக மாணவர் மாணிக்கவாசகத்திடம் பேசினோம். ``ரிமோட் கார் வாங்குவதற்காக சேமித்து வைக்கத் தொடங்கினேன். போன வருஷம் ரிமோட் கார் வாங்கலாம்னு நினைச்சேன். அப்போதான் கொரோனா பரவ தொடங்குச்சு. அதனால வாங்க முடியாம போச்சு. தொடர்ந்து சேமிச்சு வெச்சுக்கிட்டே வந்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி எங்க பகுதியில ஒரு பாட்டி கொரோனா வந்து இறந்துட்டாங்க. அப்போதான் தோணுச்சு... கொரோனா நிவாரண நிதிக்கு நாமும் காசு கொடுக்கணும்னு. இனிமே யாரும் கொரோனாவால சாகக்கூடாது. நான் சேர்த்து வைச்சிருந்த காசு அவ்ளோதான். எனக்குக் கொடுக்கணும்னு தோணுச்சு. அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு, கலெக்டர் சார் கிட்ட இன்னிக்கி கொடுத்துட்டேன்" என்றார் மழலை குரலில்.

சேவை மனது வளரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு