முன்பெல்லாம், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பெரும்பாலும் தங்களுடைய வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்தே சென்று வருவார்கள். ஆனால், சமீபகாலமாக தூரத்தைப் பற்றியெல்லாம் பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. நீண்ட தூரத்தில் இருந்தாலும் மிகவும் பிரபலமான பள்ளிகளிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இதனால் பள்ளி வாகனங்களில் சென்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டால்தான், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அவ்வப்போது இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் இருக்கும்போதுதான் பள்ளி வாகனங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.

இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டதோடு, உடனடியாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. அவற்றில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ஒவ்வொரு வாகனமாக ஆய்வு செய்தார்.

அப்போது வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வெளியேறும் வசதி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி ஆகிய வசதிகள் சரிவர உள்ளனவா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனங்களை இயக்கிட வேண்டும் என வாகன ஒட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ஆய்வு தொடர்பாகப் பேசிய ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ``திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூர், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில், பள்ளி வாகனங்களில் அவசரக்கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். கருவி செயல்பாடுகளை உறுதி செய்தும், மற்றும் இருக்கைகள் வசதி குறைபாடுகளுடன் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

50 வாகனங்களில் சிறு குறைபாடுகள் இருந்ததால் அதையெல்லாம் சரிசெய்த பிறகு, அவர்கள் உரிமம் புதிப்பித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதைப் பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு டிரைவர்கள் எழுத்துபூர்வமந்த் தெரியப்படுத்த வேண்டும். மேலும், பள்ளி வாகனங்கள் விதிமுறை மீறி இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார். ஆய்வின்போது உதவி ஆட்சியர் சங்கீதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன், வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.