Published:Updated:

வரதட்சணைக்காக மனைவியைக் கொன்ற கணவர்; ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

தண்டனை பெற்ற ஜெயபால்
தண்டனை பெற்ற ஜெயபால்

சொந்தமாக தொழில் தொடங்க, ஜெயபால் தன் மனைவியிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என்னதான் இந்தச் சமூகம் நாளுக்கு நாள் நாகரிக வளர்ச்சி அடைந்துகொண்டே இருந்தாலும், பெண்ணுரிமைக்கான குரல்கள் ஒருபக்கம் ஓங்கி ஒலித்தாலும், மறுபக்கம் வரதட்சணை கொடுமைகள் போன்ற நிகழ்வுகள் கொண்டேதான் இருக்கின்றன. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கடந்த 2018-ம் ஆண்டு வரதட்சணை கேட்டு மனைவியைக் கொலை செய்ததாக அவரது கணவர் மீது எழுந்த குற்றச்சாட்டு, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கானத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பில் மனைவியை அடித்துக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு, ஆயுள்தண்டனையும், ரூ.5,000 அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் காவல் நிலையம்
திருவாரூர் காவல் நிலையம்
வரதட்சணை பிரச்னை: கர்ப்பிணி மனைவியை துண்டு துண்டாக வெட்டி புதைத்த கணவர்; பீகார் அதிர்ச்சி!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள காக்காகோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரின் மனைவி இந்திரா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த ஜெயபால் சொந்த ஊர் திரும்பி கங்களாஞ்சேரியில் உள்ள ஓர் உணவகத்தில் வேலைசெய்து வந்தார். சொந்தமாக தொழில் தொடங்க, ஜெயபால் தன் மனைவியிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி தன் மனைவி இந்திராவிடம் பணம் கேட்டு தகராறு செய்த ஜெயபால், ஒரு கட்டத்தில் இரும்புக் கம்பியால் இந்திராவை தாக்கியிருக்கிறார். அதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த இந்திரா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா உயிரிழந்தார். அது தொடர்பாக, நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர்.

ஜெயபால்
ஜெயபால்

திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதனை விசாரித்த விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தராஜன், இதில் கொலை குற்றத்துக்காக ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

`நகைகளை உன் பெற்றோரிடமே கொடுத்துவிடு!' - கேரள மணமக்களின் வரதட்சணை மறுப்பு திருமணம்

இத்தீர்ப்பை தொடர்ந்து, நன்னிலம் காவல்துறையினர், ஜெயபாலை சிறையில் அடைத்தார்கள். இதில் விரைவாக புலன் விசாரணை மேற்கொண்டு ஜெயபாலுக்கு தண்டனை பெற்று தந்த, நன்னிலம் காவல்துறையினருக்கு திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு