Published:Updated:

திருவாரூர்: மரம் வளர்ப்பு, புத்தக வாசிப்பு, பாரம்பரியக் கலைகள் கற்றுத்தரும் குழந்தைகள் கற்றல் மையம்!

குழந்தைகள் கற்றல் மையம்
குழந்தைகள் கற்றல் மையம்

"இந்த மையத்துல உறுப்பினராக இடம்பெறக்கூடிய மாணவர்கள்கிட்ட இருந்து எந்த ஒரு கட்டணமும் வாங்கமாட்டோம். வழிநடத்துநராகச் செயல்படக்கூடிய பட்டதாரி இளைஞருக்கு, ஊக்கத்தொகையாக, மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டிருக்கோம்."

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடப்பதால், இரண்டாண்டுகளாக மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இந்நிலையில்தான் கிராமப்புற மாணவர்களிடம் சிறுவயதிலிருதே மரம் வளர்ப்பு, புத்தக வாசிப்புப் பழக்கம், பாரம்பரியக் கலைகள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை ஊக்கப்படுத்தவும், கல்வி மற்றும் தனித்திறனில் இவர்களை மேம்பாடு அடைய வைப்பதற்காகவும் திருவாரூரில் குழந்தைகளுக்கான கற்றல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வனம் தன்னார்வ அமைப்பினர் இந்த அற்புத சேவையில் இறங்கியுள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 கிராமங்களில் இத்தகைய மையங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
குழந்தைகள் கற்றல் மையம்
குழந்தைகள் கற்றல் மையம்

"'குழந்தைகளுக்கான கற்றல் மையம்' (Centre for Children Learning-CCL) பொதுமக்களின் பங்களிப்போடு செயல்படும் எனவும் இம்மையம் குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் கல்வி, பாரம்பரியக் கலைகள், விளையாட்டுகள், வாசிப்புப் பழக்கம், தனித்திறன் மேம்பாடு போன்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளைச் செய்திடும்” என்கிறார்கள் வனம் அமைப்பினர்.

மரக்கன்றுகள் நடுதலுடன், திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமத்தில் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனம் கலைமணி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் வனம் கீர்த்தி சின்னா, வனம் ஆகாஷ், வனம் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். விளமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கற்றல் மையத்தின் வழிநடத்துநராக, புவனேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய, வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனம் கலைமணி, ”பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடக்குறதனால, கிராமப்புறப் பள்ளி மாணவர்கள் படிப்பையே மறந்து கிடங்குறாங்க. தான் இப்ப எத்தனாவது படிக்குறோம்னே பலருக்குத் தெரியலை. இப்படியே போனால், கிராமப்புற ஏழைமாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். டி,வி, ஸ்மார்ட்போன் பார்க்குறதைத் தவிர வேற எதுலேயுமே இவங்க கவனம் செலுத்துறதில்லை, படிப்பு, மரம் வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள், புத்தக வாசிப்பு, தனித்திறன் மேம்பாடு இவற்றை வளர்த்தெடுக்கத்தான் இந்த மையத்தை உருவாக்குறோம். ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களை இந்த மையத்துல சேர்த்து, தினமும் மாலை ஒன்றரை மணிநேரம் பயிற்சி கொடுக்குறோம்.

குழந்தைகள் கற்றல் மையம் - மரம் வளர்ப்பு
குழந்தைகள் கற்றல் மையம் - மரம் வளர்ப்பு
ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம்... பல்கலைக்கழகத்துக்கு ஒரு வேண்டுகோள்!

ஒரு மையத்துக்கு அதிகபட்சம் 25 குழந்தைகள் வரை சேர்க்குறோம். அந்தந்த கிராமங்கள்ல உள்ள பொது இடங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான பகுதிகள்ல வகுப்புகள் நடக்கும். அந்தக் கிராமத்துல உள்ள பட்டதாரி இளைஞர் வழிநடத்துநராகச் செயல்படுவார். பள்ளிக்கூடப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்துட்டு, மரம் வளர்ப்பு, புத்தக வாசிப்பு, தனித்திறன் உள்ளிட்டவை இடம்பெறும். ஞாயிற்றுக்கிழமைகள்ல மாணவர்களின் ஆர்வத்துக்கு ஏற்ப, அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த சிறப்பு வல்லுநர்கள் பயிற்சி கொடுப்பாங்க. குழந்தைகளின் அன்றாடச் செயல்பாடுகளை, பெற்றோர்கள் அறிந்துக்கொள்ள, நாட்குறிப்பு கடைப்பிடிக்கப்படும். மாணவர்களுக்கு எதுல உண்மையாகவே ஆர்வம் இருக்கோ, அதுக்கு ஏற்ப அவங்களை வளர்த்தெடுக்கவும் அந்தத் துறைகள்ல அவங்களை சாதனையாளர்களாக பிரகாசிக்கச் செய்வதற்கும், இந்த மையம் பேருதவியாக இருக்கும்.

இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் கூட, சின்ன வயசுல இருந்தே மரம் வளர்ப்பு, புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குறதுதான் எங்களோட முதன்மையான நோக்கம். இந்த மையத்துல உறுப்பினராக இடம்பெறக்கூடிய மாணவர்கள்கிட்ட இருந்து எந்த ஒரு கட்டணமும் வாங்கமாட்டோம். வழிநடத்துநராகச் செயல்படக்கூடிய பட்டதாரி இளைஞருக்கு, ஊக்கத்தொகையாக, மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டிருக்கோம். கொரோனாப் பிரச்னை முடிஞ்சி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டாலுமேகூட, குழந்தைகள் கற்றல் மையம் செயல்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு