Election bannerElection banner
Published:Updated:

முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவாக்ஸினா? - தடுப்பூசி குளறுபடியால் திருவாரூரில் சர்ச்சை

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

``இது மாதிரி அலட்சியமாக இருந்தால், ஏதேனும் விபரீதம் நடக்க வாய்ப்புகள் இருக்கு. இனிமேலாவது இவங்க கவனமாக இருக்கணும்."

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்களும் பணியாளர்களும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் கவனக்குறைவுடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு ஏற்பட்ட ஒரு குளறுபடியால் பதறிப் போயிருக்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த டி.பி.கே.ராஜேந்திரன் என்பவர்.

பராவாக்கோட்டை ராஜேந்திரன்
பராவாக்கோட்டை ராஜேந்திரன்

தனக்கும் தன் நண்பருக்கும் ஏற்பட்ட அனுபவம் குறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய பரவாக்கோட்டை ராஜேந்திரன், ``நானும் என்னோட நண்பர் ராமமூர்த்தியும் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, கொரோனா தடுப்பூசி போடுறதுக்காக, பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போனோம். எங்களை பரிசோதனை செஞ்ச பணியாளர்கள், பிரிஸ்கிரிப்ஷன்ல, சில விவரங்களை எழுதி அங்கயிருந்த மருத்துவர்கிட்ட அனுப்பினாங்க. அவரோட ஒப்புதலோடு, ஒரே மருந்து பாட்டில்ல இருந்து எனக்கும் என் நண்பர் ராமமூர்த்திக்கும் தடுப்பூசி போட்டாங்க. அந்த பிரிஸ்கிரிப்ஷன்ல என்ன எழுதியிருந்துச்சுனு அந்த சமயத்துல நாங்க படிச்சுப் பார்க்கலை. ரெண்டாவது டோஸ் போடுறதுக்காக, என்னோட பிரிஸ்கிரிப்ஷனை நேத்துதான் படிச்சிப் பார்த்தேன். கோவாக்ஸின் போட்டதா அதுல எழுதியிருந்துச்சு.

ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் ஆகாஷை தொடர்பு கொண்டு, ரெண்டாவது டோஸ் போட நான் வரலாமா, கோவாக்ஸின் இருக்கான்னு கேட்டேன். `நாளைக்கு வந்துடும் வாங்க’னு அந்த டாக்டர் சொன்னார். இன்னைக்கு காலையில அங்க போனேன். அங்கயிருந்த பணியாளர்கள் என்னை பரிசோதனை செஞ்ச பிறகு, ஏற்கெனவே கொடுத்த அந்த பிரிஸ்கிரிப்ஷன்ல, இன்னைய தேதியைக் குறிப்பிட்டு, சில விவரங்களை எழுதி டாக்டர்கிட்ட அனுப்பினாங்க. முதல் டோஸ் போட்டப்ப இருந்த டாக்டர் ஆகாஷ் இல்லை. அவரோட ஜூனியர் டாக்டர்தான் இருந்தார். அவர் என்னோட பிரிஸ்கிரிப்ஷனை படிச்சிப் பார்த்து, கையெழுத்து போட்டுட்டு, தடுப்பூசி போட்டுக்கச் சொன்னார். நான் வரிசையில காத்திருந்தேன்.

முதல் டோஸ் கோவிசீல்டு என எழுதப்பட்ட  பிரிஸ்கிரிப்ஷன்
முதல் டோஸ் கோவிசீல்டு என எழுதப்பட்ட பிரிஸ்கிரிப்ஷன்

அந்த சமயம் பார்த்து, ஏற்கெனவே என்னோட சேர்ந்து 23-ம் தேதி முதல் டோஸ் போட்ட என்னோட நண்பர் ராமமூர்த்தியும் அங்க வந்தார். அவரோட பிரிஸ்கிரிப்ஷ்னை படிச்சிப் பார்த்த பணியாளர்கள், ``உங்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு போட்டிருக்கோம். அந்த மருந்து இப்ப இல்லை. இப்ப கோவாக்ஸின் மட்டும்தான் இருக்கு.

வந்ததும் தெரியப்படுத்துறோம்னு சொன்னதும் நாங்க ரெண்டு பேரும் அதிர்ச்சி அடைஞ்சிட்டோம். 23 -ம் தேதி எனக்கும் என்னோட நண்பர் ராமமூர்த்திக்கும் ஒரே மருந்துதான் போட்டாங்க. ஆனால், பிரிஸ்கிரிப்ஷன்ல எனக்கு கோவாக்ஸின் போட்டதாகவும், ராமமூர்த்திக்கு கோவிஷீல்டு போட்டதாகவும் எழுதியிருக்கு. அப்படினா, முதல் டோஸ் எங்களுக்கு எந்த மருந்தைப் போட்டாங்கனு தெரியலை.

ஒருவேளை எனக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு போட்டிருந்து, இன்னைக்கு இரண்டாவது டோஸ், கோவாக்ஸின் போட்டிருந்தால், ஏதாவது விபரீதம் ஆயிடும்னு பயந்துட்டேன்.

அங்க இருந்த டாக்டர் கிரிபிரசாத்கிட்ட கேட்டதுக்கு, அவருக்கு எதுவுமே தெரியலை. ஏற்கெனவே இங்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டுப்போன, 10 பேருக்கு போன் பண்ணி, எந்த மருந்து போட்டோம்னு குழப்பத்தோடு கேட்குறாங்க. இது மாதிரி அலட்சியமா இருந்தா, ஏதேனும் விபரீதம் நடக்க வாய்ப்புகள் இருக்கு. இனிமேலாவது இவங்க கவனமா இருக்கணும்’’ என்றார்.

Vaccination - Representational image
Vaccination - Representational image
Manish Swarup

இக்குற்றச்சாட்டு குறித்து பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் நிலை மருத்துவர் ஆகாஷிடம் கேட்டபோது ``23-ம் தேதி, எங்களோட சென்டர்ல எல்லாருக்குமே கோவிஷீல்டுதான் போட்டோம். தினமும் எங்களோட ஹெல்த் சென்டருக்கு ஏகப்பட்ட கூட்டம் வருது. எங்களோட பணியாளர்கள் பணிச்சுமையின் காரணமாக, மாத்தி எழுதியிருப்பாங்க. ஆனாலும்கூட தவறு நடக்க வாய்ப்பில்லை. ரெஜிஸ்ட்டர்ல முதல் டோஸ் என்ன எழுதியிருக்கோ, அதைப் பார்த்துட்டுதான், ரெண்டாவது டோஸுக்கு அதே மருந்தை போடுவோம். இப்ப எங்க சென்டர்ல கோவாக்ஸின் மட்டும்தான் வந்திருக்கு. நாலு நாள் கழிச்சுதான் கோவிஷீல்டு வரும்’’ என்றார். பரவாக்கோட்டை ராஜேந்திரனிடம் மீண்டும் தொடர்புகொண்டு பேசியபோது ``ரெஜிஸ்ட்டரை செக் பண்ணிப் பார்த்துட்டுதான் இரண்டாவது டோஸ் போடுவோம்னு சொல்றது பொய். இன்னைக்கு எனக்கு கோவாக்ஸின் போட ரெடி பண்ணிட்டாங்க. நல்லவேளையா நான் சுதாரிச்சுகிட்டேன்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு