Published:Updated:

`15 வருஷமா முடங்கியிருந்தான்; ஆனால் இனி..!' - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய போலீஸ்

மூன்று சக்கர வாகனத்துடன் மாற்றுத்திறனாளி ஹரிஹரன்
News
மூன்று சக்கர வாகனத்துடன் மாற்றுத்திறனாளி ஹரிஹரன்

``அவர் மூளைத்திறன் மாற்றுத்திறனாளியும்கூட. வெளிய போயிட்டு வந்தா அவருக்கு மன இறுக்கம் கொஞ்சம் தளரும். ஆனா அவரை வெளியில எங்கயும் அழைச்சிக்கிட்டுப்போக மூன்று சக்கர சைக்கிள் இல்லை. அந்தளவுக்கு இவங்க குடும்பம் வறுமையில் இருக்கு. உடனடியா இதுக்கு ஏற்பாடு பண்ணனும்னு முடிவெடுத்தேன்."

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர், குடும்ப ஏழ்மையின் காரணமாக, மூன்று சக்கர சைக்கிள் வாங்க வழியில்லாததால், 15 வயது வரையிலும் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கிக் கிடந்திருக்கிறார். அவர் துயர நிலையை அறிந்து, காவல்துறை அதிகாரி ஒருவர் மனிதநேயத்துடன் எடுத்த முயற்சி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் கிராமத்தில் வசித்து வருபவர், தியாகராஜன். விவசாயக் கூலித் தொழிலாளி. இவரின் மகன் ஹரிஹரன். மாற்றுத்திறனாளியான ஹரிஹரனுக்கு தற்போது 15 வயதாகிறது. அன்றாட ஜீவனத்துக்கே அல்லல்படக்கூடிய மிகவும் ஏழ்மையான சூழலில் வசித்து வந்ததால், இதுவரையிலும் அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்க முடியாமல் இருந்திக்கிறது. இதனால் ஹரிஹரன் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளி ஹரிஹரன்
மாற்றுத்திறனாளி ஹரிஹரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெரும்பாலான நேரங்கள் வீட்டுக்குள்ளேயேதான் முடங்கிக் கிடந்திருக்கிறார். இந்நிலையில்தான் அவரின் துயர நிலையை அறிந்த, திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், அவருக்கு உடனடியாக, மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுக்க முயற்சி எடுத்திருக்கிறார். கொடையுள்ளம் படைத்த தன்னார்வலர்கள் செய்த உதவியினால், சிறுவன் ஹரிகரனுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. தான் பிறந்து வளரும் தனது சொந்த ஊரில் 15 வயது வரையிலும் கூட, பெரும்பாலான இடங்களை பார்த்திடாத ஹரிஹரன், தனது தாய்-தந்தை மற்றும் காவல்துறையினரோடு மகிழ்ச்சியுடன் மூன்று சக்கர சைக்கிளில் உலா வந்தது, பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடம் பேசினோம். ``என்னோட பணி நிமித்தமா இந்த கிராமத்துக்கு நான் போயிருந்தப்பதான், ஹரிகரனோட துயரமான சூழல் எனக்குத் தெரிய வந்துச்சு. மூன்று சக்கர சைக்கிள் இல்லாததால, கடந்த 15 வருசமா பெரும்பாலான நேரம் வீட்டுக்குள்ளேயேதான் முடங்கிக் கிடக்குறாருனு தெரிஞ்சதும், எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சி.

அவர் மூளைத்திறன் மாற்றுத்திறனாளியும்கூட. வெளிய போயிட்டு வந்தா அவருக்கு மன இறுக்கம் கொஞ்சம் தளரும். ஆனா அவரை வெளியில எங்கயும் அழைச்சிக்கிட்டுப்போக மூன்று சக்கர சைக்கிள் இல்லை. அந்தளவுக்கு இவங்க குடும்பம் வறுமையில் இருக்கு. உடனடியா இதுக்கு ஏற்பாடு பண்ணனும்னு முடிவெடுத்தேன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சிலர் இதுமாதிரியான உதவிகள் செய்றாங்கனு ஏற்கெனவே எனக்குத் தெரியும். காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரோட மகன் ஒருத்தர் அந்த கட்சியில் முக்கியப் பொறுப்புல இருக்கார். அவரை தொடர்பு கொண்டு ஹரிஹரன் விஷயத்தை சொன்னேன். அவர் தொண்டு நிறுவனம் மூலம் உடனடியாக, ஹரிகரனுக்கு மூன்று சக்கர சைக்கிள் கிடைக்க ஏற்பாடு செஞ்சார். இப்பதான் ஹரிஹரன் முதல் முறையாக தன்னோட சொந்த ஊரை சுத்திப் பார்த்தார். இனிமே ஹரிகரனோட பெற்றோர், தாங்கள் நினைச்ச இடங்களுக்கு எல்லாம் கூட்டிக்கிட்டு போவாங்க. நான் செஞ்சது ஒரு சின்ன உதவினுகூட சொல்ல முடியாது. இது ஒரு சின்ன முன் முயற்சி’’ என தன்னடக்கத்துடன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி ஹரிஹரன்
மாற்றுத்திறனாளி ஹரிஹரன்

நம்மிடம் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசிய ஹரிஹரனின் தாய் ஜெயலட்சுமி , ``ஹரிஹரன் பிறக்கும்போதே கால்ல பிரச்னையோடதான் பிறந்தான். சீல அடி தூரம் வரைக்கும் சிரமப்பட்டு தத்தி தத்தி நடப்பான். அதுக்குப் பிறகு அவனால நடக்க முடியாது. இதனாலயே அவனை வெளியில எங்கயும் கூட்டிக்கிட்டுப் போக முடியாம இருந்தோம். இப்படி இருக்குற எத்தனையோ பேர், மூணு சக்கர சைக்கிள்ல ஊர் உலகமே சுத்தி வர்றாங்க. ஆனா ஹரிஹரனுக்கு இதை வாங்கிக் கொடுக்க, எங்களுக்கு வசதி இல்லை. எங்க பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிக்கூடத்துக்கு இவனை தினமும் அழைச்சிக்கிட்டு போயிட்டு வர ரொம்பவே சிரமப்படுவோம். ஒவ்வொரு நாளும் ரணப்படுவான். பள்ளிக்கூடம் இல்லாத நேரங்கள்ல வீட்டுலயேதான் முடங்கிக் கிடப்பான். 15 வருசமா இதான் நிலைமை. இதை நினைச்சி நாங்க வேதனைப்பட்டுக்கிட்டு இருந்தோம்.

ஆனா இனிமே இந்தக் கவலை இல்லை. நினைச்ச இடங்களுக்கு அழைச்சிக்கிட்டு போவோம். இது எங்களுக்கு தற்காலிகமான நிம்மதியை கொடுத்திருக்கு. ஹரிஹரனுக்கு கால்ல ஒரு ஆபரேஷன் பண்ணினா, நடக்க வாய்ப்பிருக்குனு டாக்டர்கள் சொல்றாங்க. ஆனா அதுக்கு எங்களுக்கு வசதி இல்லை. ஆபரேஷனுக்கு யாராவது உதவி பண்ணினா நாங்க, காலமெல்லாம் நன்றிக்கடனோடு இருப்போம்’’ என கண்ணீர் துளிகளால் வேண்டுகோள் வைத்தார்.