Published:Updated:

`இந்த ரேஷன் கடையை எப்போதான் திறப்பாங்க?' - 12 ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கும் கிராம மக்கள்

ரேஷன் கடை

``திமுக ஆட்சிக்கு வந்துடுச்சுன்னா, உடனடியா இந்த ரேஷன் கடையை திறந்துடுவாங்கனு நாங்களும் ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு வருசம் நெருங்கப்போகுது. ஆனால் எங்க ஊர் மக்களோட எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமலே இருக்கு.” கிராமவாசிகள்

`இந்த ரேஷன் கடையை எப்போதான் திறப்பாங்க?' - 12 ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கும் கிராம மக்கள்

``திமுக ஆட்சிக்கு வந்துடுச்சுன்னா, உடனடியா இந்த ரேஷன் கடையை திறந்துடுவாங்கனு நாங்களும் ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு வருசம் நெருங்கப்போகுது. ஆனால் எங்க ஊர் மக்களோட எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமலே இருக்கு.” கிராமவாசிகள்

Published:Updated:
ரேஷன் கடை

பொதுமக்களின் மிகவும் அத்தியாவசியத் தேவைகளில் முதன்மை இடம் வகிப்பது ரேஷன் கடை. குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைகளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களைத்தான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை, இதுவரை திறக்கப்படாததால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள்.

திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் ஊராட்சியில் அமைந்துள்ளது, கடுவங்குடி கிராமம். இங்கு ரேஷன் கடை இல்லாததால் இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று, திருநெய்ப்பேர் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வாங்கும் நிலை இருந்தது. இதனால் பலவிதமான சிரமங்களைச் சந்திக்க நேர்ந்ததால், தங்களது ஊரில் ரேஷன் கடை திறக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்திருக்கிறார்கள். அதன் பலனாக, 12 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ரேஷன் கடை திறப்பதற்காக, புதிய கட்டடம் கட்டப்பட்டது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் , உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இதுவரையிலும் இந்த ரேஷன் கடை திறக்கப்படாமலேயே இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இது குறித்துப் பேசும் கடுமங்குடி கிராமவாசிகள், ‘’எங்க ஊருக்குனு ஒரு ரேஷன் திறக்கப்படணும்கறது இந்தப் பகுதி மக்களோட நீண்டகால கோரிக்கை. இந்த நிலையில்தான் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திமுக-வின் ஏ.கே.எஸ்.விஜயன், எங்களது கோரிக்கையை நிறைவேற்ற, 2010-ம் ஆண்டு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பிட்டில், ரேஷன் கடைக்கான கட்டடம் கட்டிக் கொடுத்தார். இதுல ரேஷன் கடை திறப்படும் சமயத்துல தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்துடுச்சு.

திமுக எம்.பி நிதியில் கட்டப்பட்டதாலேயோ என்னவோ, உணவுத்துறை அதிகாரிகள், இங்கே ரேஷன் கடையைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையுமே எடுக்கலை. இப்ப திறப்பாங்க.... அடுத்த மாசம் திறப்பாங்கனு 12 வருசம் ஓடிடுச்சு. புழக்கம் இல்லாமல், இந்தக் கட்டடம் பயனற்ற நிலையில் கிடந்ததால், பழுதடைஞ்சுக்கிட்டே இருக்கு. இந்த ஊர் மக்கள், நீண்ட தூரம் நடந்து போயி, திருநெய்ப்பேர்ல உள்ள ரேஷன் கடையில பொருள்கள் வாங்குறதுங்கறது அத்தனை எளிதான விஷயமில்லை.

அங்கே ஏற்கெனவே கூட்டம் அதிகம். நாங்களும் அங்கே போறதுனால, கூட்டம் நிரம்பி வழியும். எங்க ஊர் மக்கள்ல பெரும்பாலானவங்க, கூலித் தொழிலாளர்கள். ரேஷன் பொருள்கள் வாங்கப் போனால், அன்னைக்கு முழுக்க பொழப்பு அதுலயே போயிடும். அதுவும் தீபாவளி, பொங்கல் சமயங்கள்ல ரொம்ப சிரமப்படணும். திமுக ஆட்சிக்கு வந்துடுச்சுன்னா, உடனடியா இந்த ரேஷன் கடையைத் திறந்துடுவாங்கனு நாங்களும் ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு வருசம் நெருங்கப்போகுது. ஆனால் எங்க ஊர் மக்களோட எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமலேயே இருக்கு. மக்களின் நலன் கருதி உடனடியாக இதைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கணும்’’என வலியுறுத்தினார்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism