Published:Updated:

`பெண் காவலர்களும் இனி காவல்துறை வாகனங்களை ஓட்டலாம்!' - எஸ்.பியின் புதிய முயற்சி

ஓட்டுநர் பயிற்சியில் பெண் காவலர்
ஓட்டுநர் பயிற்சியில் பெண் காவலர்

காவல்துறை வாகனங்களின் ஓட்டுநராக, ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இது சவாலான பணி என்ற ஒரு பொதுவான பார்வை உள்ளது. ஆம், இது சவாலானதுதான். பெண் காவலர்களும் அந்தச் சவாலை ஏற்பார்கள், சாதிப்பார்கள்.

பெண் காவலர், ஸ்டைலாக ஜீப் ஓட்டி வந்து, கம்பீரமாக அதிலிருந்து இறங்குவதை சீனிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும். நிஜத்தில் அரிது. காரணம், தமிழ்நாடு காவல்துறையின் வாகனங்களுக்கு ஆண் காவலர்கள் மட்டுமே ஓட்டுநராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள், இந்நிலையில்தான் இதில் பெண்களுக்கும் சமமாக வாய்ப்பளிக்கும் விதமாக, முதன்முறையாக, திருவாரூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்து, காவல்துறை வாகனங்களில் ஓட்டுநராக நியமனம் செய்ய திருவாரூர் எஸ்.பி சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் அசத்தி வருகிறார்கள். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற எண்ணத்தை உடைத்து பல்வேறு பணிகளிலும் பெண்கள் திறம்பட பணியாற்றி சாதித்து வருகிறார்கள். ஆனாலும் கூட காவல்துறை வாகனங்களின் ஓட்டுநராக, ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இது சவாலான பணி என்ற ஒரு பொதுவான பார்வை உள்ளது. ஆம், இது சவாலானதுதான். பெண் காவலர்களாலும் அந்தச் சவாலை ஏற்க முடியும், இதில் சாதிக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையோடு இதற்கு ஏற்பாடு செய்துள்ளார், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன்.

எஸ்.பி சீனிவாசன்
எஸ்.பி சீனிவாசன்

``திருவாரூர் மாவட்டத்துல 5 காவல் உட்கோட்டங்கள், 29 காவல் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருக்கு. இங்கயிருக்குற வாகனங்களை ஓட்ட, குறைந்தபட்சம் 70 ஓட்டுநர்கள் தேவை. இதுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. பொதுவாக, ஆண் காவலர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுத்து இந்தப் பணியிடங்களுக்கு நியமிக்கிறதுதான் வழக்கம், எல்லா பணிகள்லயுமே ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்பு கொடுக்கணும்னு முடிவு பண்ணி, முதல் கட்டமாக இதுல ஆர்வமுள்ள 10 பெண் காவலர்களைத் தேர்ந்தெடுத்து, ஆயுதப்படை மைதானத்துல பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்கோம். மேலும், 20 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கோம்’’ எனத் தெரிவித்தார் சீனிவாசன்.

இப்பணியை ஒருங்கிணைக்கும் ஆயுதப்படை டி.எஸ்.பி சலீம் ஜாவீத், ``முன்னயெல்லாம் போலீஸ் வேலையை பெரும்பாலும் பெண்கள் விரும்ப மாட்டாங்க. ஒரு சிலருக்கு இதுல ஆர்வம் இருந்தாலுமே கூட, `இதெல்லாம் ஆம்பளைங்களுக்குத்தான் சரியா வரும். உனக்கெல்லாம் ஒத்து வராது'னு பெரும்பாலான குடும்பங்கள்ல தடுத்துடுவாங்க. ஆனால் இப்போ, படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு, பெண்களும் காவல்துறை பணிகள்ல ஆர்வம் காட்டுறாங்க.

ஓட்டுநர் பயிற்சியில் பெண் காவலர்
ஓட்டுநர் பயிற்சியில் பெண் காவலர்
`கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் சிறப்பு விடுப்பு!' - விழுப்புரம் எஸ்.பி

இருந்தாலும் கூட காவல்துறையில் ஒருசில பணிகளைப் பெண்களால் செய்ய முடியாதுங்கிற தவறான கண்ணோட்டம் இருக்கு. குறிப்பாக, காவல்துறை வாகனங்களை ஓட்டுறது ரொம்பவே சவாலானது, ஆண் காவலர்களால் மட்டும்தான் இது சாத்தியம்ங்கிற ஒரு கருத்து இருக்கு. பெண் காவலர்களாலும் இந்தப் பணியைச் செய்ய முடியும்னு காட்டத்தான் எங்க எஸ்.பி இதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. இதுமட்டுமல்ல. ஆண்கள் மட்டுமே காவல்துறை ஆயுதங்களை பிரிச்சு மறுபடியும் மாட்ட முடியும்ங்கிற எண்ணத்தை, தகர்த்து, அதுலயும் பெண் காவலர்களுக்குப் போட்டி வைத்து பரிசு கொடுத்திருக்கார்’’ எனத் தெரிவித்தார்.

ஒட்டுநர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களில் ஒருவரான செங்கொடி, ``இது எங்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்பு. நான் காவல்துறையில் சேர்ந்து 12 வருஷமாகுது. ஜீப், கார் ஓட்டணும்ங்கிறது என்னோட நீண்ட நாள் ஆசை. ஆனால், அது நிறைவேறாமலே இருந்துச்சு. என்னை மாதிரி இன்னும் பல பெண் காவலர்களுக்கு இதுல ஏக்கம் இருந்தாலும்கூட, அதுக்கு வாய்ப்பு இல்லாமலே இருந்துச்சு. எங்க மாவட்ட எஸ்.பி-யின் புதிய முயற்சியால் இப்ப இது சாத்தியமாகி இருக்கு. இங்கவுள்ள ஆயுதப்படை மைதானத்துல ஓட்டுநர் பயிற்சி எடுத்துக்கிட்டு, லைசென்ஸ் வாங்கிடுவோம்.

ஓட்டுநர் பயிற்சியில் பெண் காவலர்
ஓட்டுநர் பயிற்சியில் பெண் காவலர்

அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்ல மட்டுமல்லாமல், மற்ற பொதுவான காவல்நிலையங்கள், சிறப்புப் பிரிவுகள்லயும் பெண் காவல்துறை அதிகாரிகள் இருக்காங்க. அவங்களுக்கு ஆண் காவலர்கள்தான் டிரைவராக இருந்துக்கிட்டு இருக்காங்க. முதல் கட்டமாக அவங்களுக்குத்தான் எங்களை ஓட்டுநராக நியமிக்கப் போறாங்க. பெண் போலீஸ் அலுவலர்களுக்கு, பெண் காவலர்களே டிரைவாக இருக்குறதுங்கிறது பல வகைகள்லயும் பரஸ்பரம் உறுதுணையாக இருக்கும். உடல் உபாதைகள் ஏற்பட்டால், அதைப் பகிர்ந்துக்க வசதியா இருக்கும். இரவு நேரங்கள்ல பாதுகாப்பாகவும் உணர்வாங்க. பெண்கள் ஜீப், கார் எல்லாம் ஓட்ட கத்துக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். எங்களுக்கும் அதிகரிச்சிருக்கு. எனக்கு இந்த வாய்ப்பளிச்ச எங்க எஸ்.பி சாருக்கு நன்றி'' என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு