Published:Updated:

`6,000 காவலர்கள்; ஜி.எஸ்.டி, ஓ.எம்.ஆர் சாலைகள்!' - தமிழ்நாடு போலீஸின் மாஸ்டர் பிளான் #ModiXiSummit

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

110 சப்-இன்ஸ்பெக்டர்ஸ் தலைமையில் 200 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 35 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில், ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரணை நடத்தியது.

மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு, எந்தவொரு பிரச்னையுமின்றி நடைபெற, பாதுகாப்புக் காரணங்களுக்காக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. எந்தவொரு பாதுகாப்புக் குறைபாடுமின்றி, வெற்றிகரமாக முடிந்த இந்தச் சந்திப்புக்கு பக்கபலமாக இருந்த காவல்துறையினருக்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்கு முன், என்ன மாதிரியான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது என்பதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``சமீப காலத்தில் எந்தவொரு பெரிய தலைவரும் சாலை மார்க்கமாக, இவ்வளவு நீண்டதூரத்தில் பயணித்ததில்லை. இதற்காக, முழு பந்தோபஸ்து கொடுக்கவேண்டிய கட்டாயம் இருந்தது.

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

அதற்காகப் பல முன்னேற்பாடுகள் செய்யபடவேண்டியிருந்தது. முதலில், இப்போது இருக்கும் சாலைகளின் நிலையை அறிந்துகொள்வதற்காக, 110 சப் இன்ஸ்பெக்டர்ஸ் தலைமையில் 200 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 35 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரணை நடத்தியத். இதற்கு முன்னதாக, பிரைன் ஸ்டார்மிங் ஆபரேஷன் ஒன்றை நடத்தினோம். அதில், விவிஐபி பயணத்தின்போது என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்று ஆராய்ந்தோம்.

அச்சுறுத்தல் என்னும்போது, போராட்டம் தொடங்கி தாக்குதல் வரை என்னமாதிரியான அச்சுறுதலுக்கு வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ந்தோம். அதிலிருந்து ஒரு செக் லிஸ்ட் தயாரித்தோம். அதில் ஒவ்வொன்றையும் தவிர்க்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும், அதற்கான தகவல்களைத் தயாரிப்பதுதான் மேற்கண்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவின் பணி. 15 நாள்களாக சீன அதிபர் செல்லும் பாதையான ஓம்.எம்.ஆர் சாலை, ஜி.எஸ்.டி சாலை குறித்து பல்வேறு தகவல்களைச் சேகரித்தோம்.

இந்தப் பகுதிகளில் எத்தனை சிசிடிவி கேமிராக்கள் உண்டு, ஹோட்டல்ஸ், மேன்ஷன்கள், ஐ.டி.கம்பெனிகள், எத்தனை கட்டடங்கள் இருக்கின்றன், எத்தனை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. உயரமான கட்டடங்கள், எத்தனை காலியிடங்கள் இருக்கின்றன, டிரான்ஸ்ஃபார்மர்கள், ரயில்வே டிராக்ஸ் என அத்தனையும் நுணுக்கமாக ஆராய்ந்தது இந்தக் குழு. இவர்கள் கொண்டுவந்து கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது, இதற்கு இவ்வளவு போலீஸார் தேவை, இங்கே இவ்வளவு போதும் என்று முடிவுசெய்தோம். வெடிகுண்டு நிபுணர்கள், பல்துறை வல்லுநர்கள் கொண்ட ஆன்டிஸ்பாஸ்மோடிக் டீம் (antispasmodic team) எனப்படும் 35 குழுக்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினோம். சென்னை போலீஸில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தக் குழுக்கள் அழைத்துவரப்பட்டன.

சுதாகர்
சுதாகர்

அடுத்தகட்டமாக, இந்தக் குழுக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சீனியர் ஆஃபீஸர்களை எங்கே பணியமர்த்துவது என முடிவுசெய்தோம். இதற்காகப் பல மாவட்டங்களிலிருந்த உயர் அதிகாரிகளையும் இங்கே வரவழைத்தோம். ஹோட்டல்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட குழுக்கள் ஆய்வுசெய்தன. அவர்கள் யார்? எங்கே தங்கியிருந்தார்கள் என விசாரித்தோம். சீனப் பிரதமர் இதற்கு முன்பாக இந்தியா வந்தபோது, என்ன மாதிரியான ஆர்ப்பாட்டங்கள், பிரச்னைகள் இருந்தன என்பதைத் தெரிந்துகொண்டோம். அதைத் தொகுத்து, நாங்கள் ஒரு வீடியோ உருவாக்கி, பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாருக்கு அனுப்பினோம். அசம்பாவிதங்களைத் தடுக்க என்ன வழி என்பதைத் திட்டமிட்டோம். ஃபேஸ்புக், ட்விட்டர், டிரெண்டிங் என அனைத்தையும் கண்காணித்தோம். யாரால் பிரச்னை வரும் என அறிந்துகொண்டு, அவர்களை அழைத்துப் பேசினோம்.

மற்ற மாநில போலீஸார் மூலம் அங்கு தங்கிருப்பவர்களிடம் பேசினோம். ஒரேநேரத்தில் குழுவாக புறப்பட்டு யாராவது சென்னை வருகிறார்களா என ஆராய்ந்தோம். கோயம்பேடு, ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையத்தில் குழுக்களை இறக்கி விசாரித்தோம். சென்னைக்கு எந்தெந்த இடத்திலிருந்தெல்லாம் வரமுடியுமோ, அந்தந்த இடங்களிலெல்லாம் விசாரணை குழுக்கள் அமைத்தோம். கிருஷ்ணகிரி டோல்கேட்டிலிருந்து இந்த விசாரணை குழுக்களை அமைத்து, தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினோம். சந்திப்பு நிகழ்ந்த அன்று, மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் ஒரு போலீஸை வைத்து கண்காணித்தோம். போக்குவரத்தை சரிசெய்வது குறித்து ஆலோசித்தோம்.

காவல்துறை
காவல்துறை

போக்குவரத்தை எப்போது அனுமதிக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆராய்ந்தோம். சென்னை மக்கள், நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி. சீன அதிபர் பயணித்த பாதையை முழுவதுமாக நாங்கள் புகைப்படம் எடுத்தோம். சென்னை போலீஸ் மட்டுமல்ல, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த போலீஸாரும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டனர். `எங்களைக் கஷ்டப்படுத்துறாங்க’ என்ற சின்ன முணுமுணுப்புகூட அவர்களிடம் இல்லை. இதை நாங்கள் ஒரு சவலாக எடுத்துக்கொண்டோம். 5 ஆயிரம் காவலர்கள், 1,000 ஊர்க்காவல்படை போலீஸார் பணியில் ஈடுபட்டனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு