Published:Updated:

மாற்றுத்திறனாளிகளின் வீட்டை ஏலத்துக்கு விடும் வங்கி... கலங்கும் குடும்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடும்பத்தினருடன் கூலித்தொழிலாளி ஸ்ரீகுமார்
குடும்பத்தினருடன் கூலித்தொழிலாளி ஸ்ரீகுமார்

''கல்யாணத்துக்குப் பெறவு மொத பையன் பெறக்கிற சமயத்தில டெஸ்ட் எடுத்தப்ப நார்மலாத்தான் இருந்தான். அப்புறம் நடக்கிற பிராயத்தில அவனுக்கு கால் அம்மாவைப்போல வளைஞ்சிடுச்சு. இதனால நான் சங்கடப்பட்டேன். அடுத்தப் பிள்ளைங்களையாவது கடவுள் நல்லபடியா தருவார்னு நினைச்சேன். ஆனா...''

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார். எலக்ட்ரிக்கல் வேலை, மண்டபத்தில் உதவியாளர் பணி என தினக்கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிந்து கலா, மகன் சிவ பிரசாத் (18), இரட்டைக் குழந்தைகளான மகள்கள் நயனா மற்றும் நந்தனா (15) ஆகிய நால்வரும் கால் வளைந்த நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.

ஸ்ரீகுமாருக்கு இரண்டே முக்கால் சென்ட் நிலம் உள்ளது. அதில் ஏற்கனவே இருந்த பழைய ஓட்டுவீடு இடிந்து விழும் நிலையில் இருந்தது. மழைக்காலங்களில் ஒழுகும் வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே பஞ்சாயத்து வீட்டுக்காக அதிகாரிகளை சந்திக்க அரசு அலுவலகப் படிகளில் ஏறி இறங்கியுள்ளார். ஆனாலும், இவருக்கு அரசுத் திட்டத்தில் வீடு கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் இவரது இடத்தை வைத்து களியக்காவிளையில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் கடந்த 2016-ம் ஆண்டு 6 லட்சத்து 35 ஆயிரத்தி 400 ரூபாய் வீட்டு கடன் பெற்றுள்ளார். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் வீசிய புயலால் இன்று வங்கிக்கடனை செலுத்த முடியாமல் நிற்கிறார். இதுபற்றி ஸ்ரீகுமாரிடம் பேசினோம். "எனக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்கத் தொடங்கினப்ப முதல்ல பார்த்தது சிந்து கலாவைத்தான். கால் வளைந்த நிலையில் மாற்றுத்திறனாளியா இருந்த சிந்துகலாவின் நிலைமையைப் பார்த்து அவங்களையே கல்யாணம் பண்ண நான் முடிவு செஞ்சேன். இதுக்காக வீட்ல உள்ளவங்ககிட்ட பேசி சம்மதிக்க வெச்சேன்.

ஸ்ரீகுமாரின் மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்கள்
ஸ்ரீகுமாரின் மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்கள்

கல்யாணத்துக்குப் பெறவு மொத பையன் பெறக்கிற சமயத்தில டெஸ்ட் எடுத்தப்ப நார்மலாத்தான் இருந்தான். அப்புறம் நடக்கிற பிராயத்தில அவனுக்கு கால் அம்மாவைப்போல வளைஞ்சிடுச்சு. இதனால நான் சங்கடப்பட்டேன். அடுத்தப் பிள்ளைங்களையாவது கடவுள் நல்லபடியா தருவார்னு நினைச்சேன். ஆனா ரெட்டை பொம்பிளை பிள்ளைங்களையும் கால் வளைஞ்ச மாற்றுத்திறனாளி நிலையில்தான் கடவுள் தந்தார். அந்த பிள்ளைங்களையும் நல்லபடியா வளர்த்துட்டு வந்தேன். எனக்க மனைவி அண்டியாப்பீசுக்கு (முந்திரி தொழிற்சாலை) போய் வேல செய்வா. அதனால எந்த பிரச்னையும் இல்லாம ஜீவிதம் கழிஞ்சது. ஆனா, மழ சமயத்துல வீட்டுல கெடந்து ஒறங்க முடியாத அளவுல தண்ணி ஒழுவும். அதனால பிள்ளைங்க கஷ்டப்படுறதைப் பார்த்துத்தான் வீடு கட்டணும்னு ஆசைப்பட்டேன்.

கவர்மென்ட் ஸ்கீம்ல வீடு கிட்டாததுனால பேங்க்ல கடன் வாங்கி வீடு வெச்சேன். அந்த சமயத்துலதான் அண்டியாப்பீசுக்கு போன எனக்க வீட்டுகாரி விழுந்து நடு முதுவுல அடிப்பட்டுது. திருவனந்தபுரத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனதுல லெச்சக்கணக்கில செலவு ஆச்சுது. இப்ப அவளால தனியா நடக்க முடியாது, இருந்த எடத்துல இருந்து எழும்புறக்கே தொணைக்கு ஆளு வேணும்ங்கிற நெலம ஆயிட்டு. இப்ப நான் மட்டும்தான் கூலி வேலைக்குப்போறேன். இதுல வீட்டுச் செலவும், மருந்து செலவும் பாக்கணும். அதுலயும் கொரோனா வந்ததுனால வேலையும் இல்லாத நெலம. அதனால வீடு வைக்கிறதுக்கு பேங்க்ல இருந்து வாங்குன பணத்துக்கு வட்டியும், மொதலும் கட்டமுடியாத நெலம ஆச்சுது. இப்ப பேங்கில இருந்து வீட்ட ஏலம் விடுறதுக்கு நோட்டீஸ் ஒட்டிட்டு போயிருக்காங்க. எனக்க ரெண்டு மகளுங்களும் பத்தாம் கிளாஸ் படிக்கிறாங்க.

வங்கி நோட்டீஸ்
வங்கி நோட்டீஸ்

மகன் கோணத்தில அரசு ஐ.டி.ஐ-ல படிச்சுட்டு இருக்கான். ஐ.டி.ஐ முடிச்சபிறவு எதாவது வேலை கிடைச்சதும் பணத்த தாறோம்னு சொன்னப்பெறவும் பேங்க்காரங்க கேக்கல. வீட்ட வித்து கடத்த தீத்திரலாம்னு பாத்தா, மாற்றுத்திறனாளியா இருக்கிற நாலுபேரயும் வேற எங்க தங்க வைக்கிறதுன்னு தெரியல" என கலங்கினார். இது பற்றி களியக்காவிளை ஐ.ஓ.பி வங்கி கிளை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "எங்களால் எதுவும் செய்ய முடியாது. கால அவகாசம் அல்லது ஏதாவது உரிய உதவிகளுக்கு வங்கியின் பிராந்திய அதிகாரிகளை பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக சென்று பார்த்து பேசினால் ஒருவேளை சாதகமான தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு