Published:Updated:

மன உளைச்சலில் மாணவர்கள்... கண்டிஷன் போடும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி!

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்

ஶ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி
ஶ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ( ramkumar )

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள ஶ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில், ''அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்'' என அந்தக் கல்லூரியின் மாணவர் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்.

“நான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் படித்துவருகிறேன். என் பெயரைச் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. நான் படிக்கும் கல்லூரி பற்றிய உண்மை ஒரு மெல்லியக் குரலாக வெளியே வந்தாலும், அந்தக் குரல் எழுப்பியவர் வாழ்க்கையை இவர்கள் அழித்துவிடுவார்கள். அதனால்தான் இந்த பயம். நான் ஒரு நல்ல மருத்துவராக வேண்டும் என்று எனக்கு விருப்பம். இவர்கள் என் வாழ்க்கையை, என் கனவை அழிக்க நான் விடமாட்டேன். ஆகையால்தான் என் பெயரை மறைத்துக்கொண்டு இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்'' என்று நமக்கு ஒரு கடிதம் வந்தது.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

இதையடுத்து, கடிதம் அனுப்பிய மாணவரை நேரில் சந்தித்துப் பேசினோம். ''நாங்கள் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வருகிறோம். வருடத்துக்கு நான்கு லட்ச ரூபாய் பீஸ் கட்டுவதற்கே கஷ்டம்தான். ஆனால், இந்தக் கல்லூரியில், அனைவரையும் கட்டாயமாக ஹாஸ்டலில் தங்கவைக்கிறார்கள். அதே ஊரைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும், கட்டாய ஹாஸ்டல்தான். அதற்குத் தனியாக இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஹாஸ்டல் சாப்பாட்டுக்காகத் தனியாக 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்கள். நாங்கள் தனித் தனியாகக் கட்டும் தொகைக்கும், மேனேஜ்மென்ட் சீட்டில் படிப்பவர்கள் மொத்தமாகக் கட்டும் தொகைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நடுத்தரக் குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்க வருபவர்களின் கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்துவருகிறது கல்லூரி நிர்வாகம். மேலும், ரசீது இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் வருடாவருடம் வசூலிக்கிறார்கள். இதற்கான காரணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்கள்.

ஹாஸ்டலில் தனித்தனி ரூம் கொடுத்திருக்கிறார்கள். அங்கே லேப்-டாப்கூடப் பயன்படுத்த முடியாது. பெற்றோரிடம் பேச வேண்டும் என்றாலும் பணம் கொடுத்துதான் லேண்ட்லைன் மூலமாகப் பேச வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரம்தான். கல்லூரியில் ஆண், பெண் பேசக்கூடாது. முறையாகச் சாப்பாடு கிடையாது. 10 நிமிடம் தாமதமானாலும் சாப்பாடு கிடையாது. பட்டினியாகக் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். கல்லூரிக்குப் பட்டினியாகச் செல்கிறோம். இதற்கு நாங்கள் வருடம் இரண்டரை லட்ச ரூபாய் கட்டாயமாகத் தர வேண்டியிருக்கிறது. இந்திய மெடிக்கல் கவுன்சில் ஆய்வுக்கு வந்தபோது, இதுகுறித்து எடுத்துக் கூறினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மற்ற கல்லூரி மாணவர்களைவிட நாங்கள் வெளிமருத்துவ உலகே தெரியாமல்தான் இருக்கிறோம். இதுபோன்ற விதிமுறைகளால் எங்களால் பேப்பர் பிரசன்டேஷனுக்குச் செல்ல முடியவில்லை. வெளிமாணவர்களோடு போட்டிபோட முடியவில்லை. விடுமுறை நாளில்கூட வெளியில் செல்ல முடியாது. வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கிறார்கள். மெரிட் சீட்டில் படிக்கும் மாணவர்களைப் பாரபட்சத்தோடு நடத்துகிறார்கள்.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

விடுதியில் சேரும்போது இவர்கள் சொன்ன எந்த வசதியும் இல்லை. காலை 10 நிமிடமும் இரவு 10 நிமிடமும்தான் குளியலறையில் தண்ணீர் வருகிறது. இதில் துணி துவைத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த நீரும் சுத்தமாக இருக்காது. லாண்டரி இருக்கும் என்று சொன்னார்கள். அதுவும் இல்லை. மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. மீறினால் 50,000 ரூபாய் அபராதம். அதேபோல், மாலை 5 மணிக்கு மேல் அறையைவிட்டு வெளியே செல்லக்கூடாது. மீறினால் அடியோடு சேர்த்து அபராதம். ஜெயில் வாழ்க்கைபோல் இருக்கிறது. இதனால் பலரும் மனம் பாதித்திருக்கிறார்கள். எங்கள் பெற்றோர் விடுதிக்கு வர அனுமதி இல்லை. பெற்றோர்களுடனும் பேச முடியாததால் மன அழுத்தம் காரணமாகச் சில மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். வார்டனால் பலர் நிம்மதியை இழந்து, கல்லூரியைவிட்டே சென்றிருக்கிறார்கள். இவர்களைப்போல் நான் இருக்க விரும்பவில்லை. இந்தக் கல்லூரியில் நடப்பவற்றை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த நினைக்கிறேன். நான் நல்ல முறையில் மருத்துவம் படிக்க வேண்டும். அதற்கு நல்ல சூழ்நிலை வேண்டும். அது, இந்தக் கல்லூரியில் இல்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும்'' என்று கண்ணீருடன் பேசி முடித்தார் அந்த மாணவர்.

இதுகுறித்து குலசேகரம் மூகாம்பிகா மெடிக்கல் காலேஜ் பி.ஆர்.ஓ பிரசாத்திடம் பேசினோம், "ஹாஸ்டலில் அனைத்தும் தனித்தனி அறைகள்தான். நன்றாக உள்ளன. ஹாஸ்டல் எங்களுக்கு அவசியம். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காகவே நாங்கள் அப்படி வைத்திருக்கிறோம். இதன் அவசியம் குறித்துப் பெற்றோரிடமும் கூறியிருக்கிறோம். ஹாஸ்டலில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. போன் பேசுவதற்காகத் தனி பூத் வைத்துள்ளோம். அனைத்து மாணவர்களுக்கும் ஹாஸ்டலில் கம்ப்யூட்டர் அறை வைத்துள்ளோம். அந்த அறையில் கம்ப்யூட்டர், லேப்-டாப் எல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதலாக கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டும் என்றால்கூட, நூலகத்தில் அதற்கான வசதி செய்துள்ளோம். மாணவர்கள் லேப்டாப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதால் இந்தத் தடை. மெடிக்கல் கவுன்சில் கூறிய நாம்ஸ்படிதான் கம்ப்யூட்டர் வசதி செய்துள்ளோம். இதற்காக அதிகக் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆண்களும் பெண்களும் பேசக்கூடாது என நாங்கள் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது" என்றார்.

மாணவர்களின் அதீத மன அழுத்தம் குறித்து தெரிந்துகொள்ள மனநல மருத்துவர் அசோகனைத் தொடர்புகொண்டு பேசினோம். ''வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள், கட்டுப்பாடுகளோடு வளர்க்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், கட்டுப்பாடுகளுக்கென்று ஓர் எல்லை இருக்கிறது. எல்லை தாண்டிய கட்டுப்பாடுகள் யாவும், மனநலம் சார்ந்த பாதிப்புகளை நிச்சயமாக ஏற்படுத்தக்கூடும். வளர் இளம் பருவத்தினரைப் பொறுத்தவரையில், மேற்பார்வையோடுகூடிய சுதந்திரத்தை (Supervised Freedom) அவர்களுக்குக் கொடுப்பது அவசியம். அப்போதுதான் அவர்கள், தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து செயலாற்றத் தொடங்குவர். ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் இதுபோன்ற மேற்பார்வை இருக்காது. அதனால், இப்படியான கல்வி நிலையங்களின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, கல்லூரிகளில் விதிக்கப்படும் 'கட்டுப்பாடுகளுக்கு' ஆதரவு தெரிவிக்கும் பெற்றோர்கள் இன்றளவும் இருக்கின்றனர். ஆனால், இவை ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களிடம் சொல்லக்கூட முடியாத நிலைக்கு மாணவர்கள் இருந்தால், மனச்சிதைவுக்கு உள்ளாவார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மாணவர்களைக் கூண்டுக்குள் அடைத்து வைக்காமலிருந்தாலே அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்'' என்று அதிர்ச்சியூட்டினார் மனநல மருத்துவர்.

மன அமைதியோடு மாணவர்கள் படிப்பதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?