Published:Updated:

ஏசி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை; தனியார் பள்ளிகளிலிருந்து வந்து குவியும் அட்மிஷன்; அசத்தும் அரசுப்பள்ளி!

அரசு நடுநிலைப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளி

புதிதாக 250 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளியிலிருந்து விலகி இங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே 150. புதுக்கோட்டையில் வேறெந்த நடுநிலைப்பள்ளியிலும் இல்லாத வகையில் மாணவர் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில், நகர் மன்றம் அருகே (அரசு உயர் துவக்கப்பள்ளி) நடுநிலைப்பள்ளி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் செயல்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மிகவும் பழைமையான பள்ளிகளில் இதுவும் ஒன்று. இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் ஒருவர் உட்பட 9 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், ஏசி வசதிகளுடன் தனியார்ப் பள்ளிக்கு நிகராகச் செயல்படக்கூடிய இந்தப் பள்ளியில் தற்போது பெற்றோர்கள் பலரும் தங்களது பிள்ளைகளைப் போட்டிப் போட்டுச் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏராளமான மாணவர்கள் தனியார் பள்ளியிலிருந்து விலகி அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.

வடக்கு ராஜ வீதி நடுநிலைப்பள்ளி
வடக்கு ராஜ வீதி நடுநிலைப்பள்ளி
`அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், ₹1000 பரிசு!' - அசத்தும் தலைமை ஆசிரியர்

இந்த 2021-22 கல்வியாண்டில் மட்டும் இதுவரை 250 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதில், தனியார் பள்ளிகளிலிருந்து விலகி அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 150. மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, தலைமையாசிரியரின் குழந்தை உட்பட ஏராளமான அரசு ஊழியர்களின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் அதிகபட்ச மாணவர்களைக் கொண்ட ஒரே பள்ளி என்ற பெருமையையும் வடக்கு ராஜ வீதி நடுநிலைப்பள்ளி பெற்றிருக்கிறது.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேலிடம் பேசினோம். ``ஏசி வசதி, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைன்னு எல்லா வசதிகளும் கொண்டு வந்தோம். சுவர் முழுக்க வண்ண ஓவியங்கள் வரைந்து இருக்கிறோம். அறிவியல் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிககளை அவ்வப்போது நடத்தி மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறோம். கற்றல் தாண்டி விளையாட்டு, உடற்பயிற்சி என மாணவர்களின் தனித்திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். என் மகளும் மகனும் இந்த நடுநிலைப்பள்ளியில்தான் படிக்கிறாங்க. என்னைப் போல அரசு ஊழியர்கள் 60 பேர் வரையிலும் எங்கள் பள்ளியில் அவர்களின் பிள்ளைகளைச் சேர்த்திருக்கிறாங்க.

கடந்த வருடம் வரையிலும் 516 மாணவர்கள் வரை பள்ளியில் இருந்தாங்க. இந்தாண்டு இதுவரையிலும் 250 பேர் புதிதாகச் சேர்ந்திருக்காங்க. மொத்தமா இதுவரையிலும் 750 பேர் வரையிலும் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. இந்த மாத இறுதிக்குள் 800-ஐ தொட்டுவிடும்.

ஸ்மார்ட் கிளாஸ்
ஸ்மார்ட் கிளாஸ்
அட்மிஷன் போட்டால் ₹1,000 ஊக்கத்தொகை, வகுப்பறையில் உண்டியல்; அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்!

அதுவும் தனியார் பள்ளியிலிருந்து டிசி வாங்கி வந்து, எங்க பள்ளியில சேர்க்கிறதா பல பெற்றோர்கள் சொன்னாங்க. அவங்ககிட்ட, ``எங்க பள்ளியை நம்பி சேர்க்கிறீங்க, ரொம்ப நன்றி. அதே நேரத்துல கட்டமைப்பு வசதிகள் இப்போதைக்குக் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கு''னு சொல்லி அட்மிஷன் போடுறோம். எல்லா வசதியும் ஏற்படுத்தித் தருவாங்கங்கிற நம்பிக்கையில் அவங்க ஆர்வமாகச் சேர்க்கிறாங்க.

மாணவர்களின் எண்ணிக்கை கூடிய நிலையில், பள்ளியில் குறைவான கட்டமைப்பு வசதிகளே இருக்கு. 20 ஆசிரியர்கள் வரையிலும் தேவைப்படும் இடத்தில், 8 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறைகள் அமைக்கணும். பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், சில ஆண்டுகளில் மாவட்டத்தின் சிறந்த நடுநிலைப்பள்ளியாக எங்கள் பள்ளியை மாற்றுவோம். மாணவர்களின் பெற்றோர்களைப் போல், நாங்களும் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவிடும் நம்பிக்கையில் அட்மிஷன் போட்டுக்கொண்டிருக்கிறோம்" என்கிறார்.

நல்லன நிறைவேறட்டும்!

அடுத்த கட்டுரைக்கு