Published:Updated:

`மாட்டுச்சாணத்தில் மின் உற்பத்தி; 100 விளக்குகளுக்கு மின்சாரம்!' - முன்மாதிரியாகத் திகழும் கிராமம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கால்நடை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கிராமம்!
கால்நடை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கிராமம்!

தடைக் கற்களை படிக்கற்களாய் மாற்றி முன்னேறியிருக்கும் வரதராஜபுரம், திடக்கழிவு மேலாண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தின் முன்னோடி கிராமமாகத் திகழ்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது வரதராஜபுரம் ஊராட்சி. சென்னையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் 200-க்கும் அதிகமான குடும்பங்கள் கறவை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பை முழு நேரத் தொழிலாகச் செய்யும் இந்தக் குடும்பங்கள் சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்குப் பால் விநியோகம் செய்து வருகின்றன. ஆடு மாடு வளர்ப்பில் ஈடுபடுவது நல்லதுதான் என்றாலும், இந்தாண்டு ஜனவரி மாதம் வரையில் தெருக்களிலும், குளம் குட்டை என நீர்நிலைகளிலும் கொட்டப்பட்டு வந்த மாட்டுச் சாணத்தால் வரதராஜபுரத்தில் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.

வரதராஜபுரம் பயோ கேஸ் ஆலை
வரதராஜபுரம் பயோ கேஸ் ஆலை

மாட்டுச் சாணத்தை முறையாக அப்புறப்படுத்தி, சுகாதார சீர்கேட்டை போக்குவது எப்படி எனத் தெரியாமல் அவதிப்பட்டு வந்த கிராம மக்களின் தவிப்புக்குப் புதுமையான முறையில் யோசித்து முடிவு கட்டியிருக்கிறார் அந்தக் கிராமத்தின் தலைவர். ஊராட்சி, ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நிதி உதவியுடன் மாட்டுச் சாணத்திலிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் கிராமத்தின் தெரு விளக்குகளை ஒளிர வைத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் கலையரசு.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பயோ கேஸ் ஆலை அமைத்து கிராமத்தின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கும் ஊராட்சித் தலைவர் கலையரசுவிடம் பேசினோம்.

``எங்க ஊரோட மிக முக்கியமான அடிப்படை பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருந்துச்சு. என்னோட நண்பர் ஒருத்தர் மாட்டு சாணத்துல இருந்து பயோ கேஸ் தயாரிக்குற நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருக்காரு. அவர்கிட்ட இது தொடர்பா பேசும் போதுதான் இந்த `பயோ கேஸ் ஆலை' பத்தி தெரிஞ்சது. ஊராட்சி மன்றத் தேர்தல்ல ஜெயிச்சு நான் தலைவர் பதவிக்கு வந்ததும், கையோட இந்தச் சுகாதார சீர்கேட்டுக்கு ஒரு முடிவு கட்டணும்னு யோசிச்சு ஊராட்சி மன்றத்துல எல்லாரையும் அழைத்துப் பேசி அவங்க ஒத்துழைப்போட ஊராட்சி மன்ற நிதியை இந்தத் திட்டத்துக்கு ஒதுக்குறதா தீர்மானம் கொண்டு வந்தேன்.

வரதராஜபுரம் ஊராட்சித் தலைவர் கலையரசு
வரதராஜபுரம் ஊராட்சித் தலைவர் கலையரசு

அதே போல, ஒன்றிய நிர்வாகத்திடமும் இந்தத் திட்டம் குறித்துக் கூறி நிதி கேட்டிருந்தேன். அங்கேயும் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்குனாங்க. பயோ கேஸ் பிளான்ட் அமைக்க மொத்தம் 60 லட்சம் ரூபாய் செலவாகும்னு தனியார் நிறுவனத்துல சொல்லிட்டாங்க. ஆனா, எங்ககிட்ட மொத்தமே 30 லட்சம் ரூபாய்தான் கையிருப்பு இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால, நான் இதுக்கு முன்னாடி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரா இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் மேடம்கிட்ட எங்க திட்டத்தைப் பத்தி விளக்கிச் சொல்லி நிதி கேட்டிருந்தேன். அவங்களும், எங்களோட முயற்சியைப் பாராட்டி அரசாங்க இடத்தை ஒதுக்கிக் கொடுத்து, திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிச்சாங்க. வேலைகளும் ரொம்ப துரிதமா நடந்து முடிஞ்சு போன ஜனவரி மாசம் இந்த ஆலையைத் திறந்தோம். இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம். அதனால, ஒரு நாளைக்கு 500 கிலோ மாட்டுச் சாணம்தான் பயன்படுத்திட்டு இருக்குறோம். எங்களுக்கு இப்ப ஒரு நாளைக்கு 250 - 300 யூனிட் மின்சாரம் கிடைக்குது.

மலைக் கிராம மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியைகள்!

இந்த அளவு மின்சாரம் எங்க கிராமத்துல இருக்குற மொத்த 200 தெரு விளக்குகள்ல 100 விளக்குகளை ராத்திரி முழுவதும் எரிய விட போதுமானதா இருக்கு. பொதுவாகவே, தெரு விளக்குகள் எல்லாமே அரசாங்கத்தோட மின்சாரத்துலதான் இயங்கிட்டு இருக்கும். ஆனா, இந்தத் திட்டத்தின் மூலமா எங்க கிராமத்துல நாங்க தயாரிச்ச மின்சாரத்துல தெரு விளக்குகள் எரியுறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என்றார் கலையரசு, தன் கிராமத்தின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்திவிட்ட மன நிறைவுடன்.

தடைக் கற்களை படிக்கற்களாய் மாற்றி முன்னேறியிருக்கும் வரதராஜபுரம், திடக்கழிவு மேலாண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தின் முன்னோடி கிராமமாகத் திகழ்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு