Published:Updated:

தூய்மைப்பணியாளர்களை டூருக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்த டிராவல்ஸ் உரிமையாளர்... குவியும் பாராட்டு!

"தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உரிய அனுமதி பெற்றேன். மொத்தம் 200 பேரை 4 பஸ்களில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தேன். நாங்கள் கொடைக்கானல் கிளம்பிய அன்று கனமழை பெய்தது." டிராவல்ஸ் உரிமையாளர் பிரேம் நசிர். 

கோடைகாலம் மட்டுமல்ல எப்போது சோர்வாகத் தோன்றினாலும் சுற்றுலா தலங்களுக்கு பைக்கிலும், கார்களிலும் கிளம்பிவிடுகிறோம். ஆனால் கோடைகாலமோ, குளிர்காலமோ எப்போதும் தங்கள் வாழ்வின் பெரும்பாலான நேரங்களை ஊரைச் சுத்தப்படுத்துவதற்காகவே செலவிட்டு கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை 'வாங்க ஜாலியா ஒரு டூர் போலாம்' என அழைத்துச்சென்று வந்துள்ளார் கம்பத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் பிரேம் நசிர்.

அவரிடம், தூய்மைப்பணியாளர்களை சுற்றுலா அழைத்துச் சென்றது குறித்து பேசினோம்.

"கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களின் சேவை அளப்பரியது. வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் நாம் முடங்கிக்கிடந்தபோதும், வீதியில் இறங்கித் தூய்மைப்பணியில் ஈடுபட்ட அவர்களைக் கெளரவிக்க நினைத்தேன். அதுவெறும் விளம்பரம்போல ஆகிவிடும் என்பதால் கொடைக்கானலுக்கு ஒரு ட்ரிப் அழைத்துச் சென்று மகிழ்விக்கலாம் எனத் தோன்றியது.

ட்ரிப்
ட்ரிப்

இதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உரிய அனுமதி பெற்றேன். மொத்தம் 200 பேரை 4 பஸ்களில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தேன். நாங்கள் கொடைக்கானல் கிளம்பிய அன்று கனமழை பெய்தது. இதனால் தாமதமாகக் கிளம்பினோம். இருப்பினும், 70 பெண்கள் 30 ஆண்கள் என மொத்தம் 100 தூய்மைப் பணியாளர்களை 2 பஸ்களில் கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்ல முடிந்தது. காலை 7 மணிக்குப் புறப்பட்டு வெள்ளியருவி, ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்வாக் ஆகிய இடங்களை சுற்றிக்காட்டினேன். மதியம் பிரியாணி உணவு வழங்கினேன். கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்திடம் ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டதால், தூய்மைப்பணியாளர்களுக்கு எந்த இடங்களிலும் அனுமதி கட்டணம் வசூலிக்கவில்லை. இந்தச் சுற்றலாவை தூய்மைப்பணியாளர்கள் மிகவும் அனுபவித்து கொண்டாடினர்" என்றார்.

தூய்மைப் பணியாளர் சாந்தியிடம், சுற்றுலா சென்றுவந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம். "கடந்த 5 ஆண்டுகளாகத் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வருகிறேன். வேலை செய்வோம், வீட்டிற்குச் சென்றும் வேலை செய்வோம். எங்களுக்கென்ற பொழுதுபோக்கு டிவி மட்டுமே. ஆனால் அதையும் பார்க்க நேரமில்லை. நான் மட்டுமல்ல என்னுடன் பணியாற்றும் பலரும் சுற்றுலா என எங்கும் சென்றதில்லை. முதல் முறையாகக் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற அனுபவத்தை வாழ்வில் மறக்க முடியாது. இப்படியான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த பிரேம் அவர்களுக்கு நன்றி" என்றார்.

பிரேம்
பிரேம்

டிராவல்ஸ் நடத்தும் பிரேம் நசிருக்கு இவ்வாறு கட்டணம் இல்லாமல் சுற்றுலா அழைத்துச் செல்வது புதிதானது இல்லையாம். கடந்த 2010 முதல் கம்பம், உத்தமபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் என மொத்தம் 80 பேரை ஆண்டுதோறும் ஒரு நாள் சுற்றுலாவாக கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று வருகிறாராம். 2011-இல் மட்டும் அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களை சென்னைக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.

இயன்றதைச் செய்வோம் இயாலதவருக்கே என்பார்கள். அதேபோல தன் தொழில் மூலம் இயன்றதைச் செய்துவரும் பிரேம் நசிரைக் கம்பம் பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு