Published:Updated:

தாயின் இறுதிச்சடங்கு: காணாமல் போன மகனைத் தேடிய கிராம மக்கள்... மன்னார்குடி அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

மக்கள் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தங்களது ஊரில் வாழ்ந்த ஒரு விவசாய பெண் தொழிலாளரின் இறுதிச்சடங்கில், அவரின் மகனைக் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உடல்நலக் குறைவால் இறந்துபோன பெண்மணிக்கு இறுதிச்சடங்கு செய்ய, பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துசென்ற அவரது ஒரே மகனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அக்கிராம மக்கள் இறங்கினர். சமூக வலைதளங்களின் மூலம் உருக்கமானதொரு வேண்டுகோளை விடுத்து அவரைத் தேடியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வல்லூர் நடேசபுரம் பகுதியில் வசித்துவந்தவர் விஜயா. சுமார் 55 வயது மதிக்கத்தக்க அவர், விவசாய வேலைகளுக்குச் சென்று தனது வாழ்க்கையை நகர்த்தி வந்திருக்கிறார். இவரது கணவர் ராஜேந்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஒரே மகனான அருணகிரி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் விஜயாவிடம் கோபித்துக் கொண்டு மன வருத்தத்தில் பிரிந்து எங்கோ சென்றுவிட்டார்.

அருணகிரி
அருணகிரி

தனது மகன் அருணகிரி எங்கு இருக்கிறார் என்பது விஜயாவுக்கு தெரியவில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்த விஜயா, கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் உடல்நிலை மேலும் நலிவடைந்து, தற்போது விஜயா மரணமடைந்து விட்டார். விஜயாவுக்கு வேறு மகனோ, மகளோ இல்லாததால், அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய, பத்தாண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவரது ஒரே மகனான அருணகிரியை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் இறங்கினர்.

மயிலாடுதுறை: சொந்த செலவில் வாகனத்தில் ஸ்மார்ட் டிவி... வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்!
இறந்துப்போன தாய் விஜயா
இறந்துப்போன தாய் விஜயா

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், விஜயா மற்றும் இவரது மகன் அருணகிரியின் புகைப்படங்களோடு... "திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வல்லூர் நடேசபுரம் பகுதியில் வசித்து வந்த விஜயா அம்மையார் இயற்கை எய்தினார். அம்மையாரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இவரின் ஒரே மகன் அருணகிரி என்பவர் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, தனது அன்னையிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்றவர் எங்கு இருக்கிறார் என்பது இன்றுவரை அறியப்படவில்லை. அவரின் புகைப்படம் பின்னூட்டத்தில் உள்ளது. எனவே நண்பர்கள் இப்பதிவை முடிந்தவரை பகிருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என ஓர் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார்கள்.

மக்கள் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தங்களது ஊரில் வாழ்ந்த ஒரு விவசாய பெண் தொழிலாளரின் இறுதிச்சடங்கில், அவரின் மகனைக் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த முயற்சியை எடுத்தவர்களில் ஒருவரான கண்ணனிடம் பேசியபோது, ‘’ராஜேந்திரன் - விஜயா தம்பதியர். இவங்க இரண்டு பேருமே விவசாய கூலித்தொழிலாளர்கள். விஜயா கர்ப்பிணியாக இருக்கும்போதே, ராஜேந்திரன் இறந்துவிட்டார். விஜயா, விவசாய வேலைகளுக்கு போயி, தன்னோட ஒரே மகனான அருணகிரியை வளர்த்து, மிகவும் கஷ்டப்பட்டு, 12-ம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்தார். அருணகிரிக்கு எந்த ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது. சிங்கப்பூர் போயி, வேலைப் பார்த்து, சொந்தமா ஒரு இடம் வாங்கி, சின்னதாக ஒரு விடும் கட்டினார். அதுக்கு முன்னாடி புறம்போக்கு இடத்துல வாழ்ந்து வந்தாங்க.

அருணகிரியின் மற்றொரு புகைப்படம்
அருணகிரியின் மற்றொரு புகைப்படம்

சிங்கப்பூர்ல இருந்து திரும்பி வந்து சொந்த ஊரில் தனது அம்மா விஜயாவோடு அருணகிரி வசித்து வந்தார். இந்த நிலையில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தனது அம்மாவிடம் ஏதோ மனம் வருத்தம் ஏற்பட்டு எங்கோ சென்றுவிட்டார். தனது மகன் எங்கு இருக்கிறார் என விஜயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கயாவது ஜோசியம் பார்த்துட்டு, 'என் மகன் உயிரோடுதான் இருக்கான். ஆனால் எங்க இருக்கான்னுதான் தெரியலை. அவனுக்குக் கல்யாணம் ஆகி, குழந்தைகள் எல்லாம் இருக்குனு ஜோசியர்கள் சொல்றாங்கனு' விஜயா ஊர்க்காரங்கக்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

தன்னோட மகனை பிரிந்த ஏக்கம், அவங்கக்கிட்ட இருந்துக்கிட்டேதான் இருந்துச்சு. இந்த நிலையில்தான், விஜயாவுக்கு சிறுநீரக பாதிப்பு வந்து இறந்துப் போயிட்டாங்க. இவரோட இறுதிச்சடங்கிலாவது, இவரோட மகன் அருணகிரியை கலந்துகொள்ள வச்சிடணும்ங்கற முயற்சியில் இறங்கினோம். இதுதான் இந்த அம்மாவோட ஆத்மாவுக்கு நாங்க செய்ற மரியாதையா இருக்கும்னு நினைச்சோம்" எனத் தெரிவித்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அருணகிரி கடைசிவரை தாயின் உடலைக் காண வராததால், வேறு வழியின்றி நேற்று மாலை விஜயாவின் இறுதிச் சடங்குகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பிற சடங்குகளுக்கேனும் அவரது மகன் வந்துவிடுவார் என்பதே ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு