Published:Updated:

`சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சுக்கு முன்னேறிய தூத்துக்குடி!’-ஆக்‌ஷன் பிளானை விவரித்த ஆட்சியர்

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வேலம்மாள்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வேலம்மாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில், மூதாட்டி ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேறியுள்ளது தூத்துக்குடி.

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வரும் நிலையில், சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மேலும் ஊரடங்கு நீட்டிகப்படுமா, தளர்த்தப்படுமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் 22 பேரும், நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், கடந்த 10-ம் தேதி 71 வயதான ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மீதமுள்ள 25 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடந்த 13 நாள்களாக எந்தவித புதிய நோயாளியும் அடையாளம் காணப்படாத நிலையில், சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரான ஓய்வுபெற்ற ஆசிரியையும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவரை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி ஆகியோர் பழக்கூடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். இதனால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக, சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம். ``தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மார்ச் 30-ம் தேதி செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தவுடன் உடனடியாக நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டிஸ்சார்ஜ் சான்றிதழ் வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
டிஸ்சார்ஜ் சான்றிதழ் வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

அவருடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் சேகரித்தோம். மருத்துவக்குழுவினர் அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினார்கள். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தினோம். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டதுதான் கொரோனா பரவலைத் தடுக்க மிகவும் உதவியாக இருந்தது.

அத்துடன், அவர்களது வீடுகளைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதேபோல கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பகுதிகளைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து போலீஸார் உள்நபர்களை வெளிச்செல்லாமலும், வெளி நபர்களை உள்ளே நுழைய விடாமலும் தடுத்து கண்காணித்து வந்தனர். இதற்காக, மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 41 குழுக்கள் ஏற்படுத்தி கண்காணித்தோம். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள், குறிப்பாக டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மாவட்டம் முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் ரத்த பரிசோதனை மையம் ஏற்படுத்தி ரத்தமாதிரிகளை சேகரித்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பழக்கூடை வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
பழக்கூடை வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பும் இருந்ததால்தான், தூத்துக்குடியில் கொரோனா பரவலைத் தடுக்க முடிந்தது. தொடர்ந்தும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு