Published:Updated:

`2,000 ஸ்கெட்ச் பேனாக்கள்; டாப் விவகாரங்கள்!'- கவனம் ஈர்த்த தூத்துக்குடி `கிறிஸ்துமஸ் குடில்'

`உலக சமாதானம்’,’ பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்துதல்’ மற்றும் `இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம்’ ஆகியவை குறித்து விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் அமைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் இசிடோர்.

ஓவிய ஆசிரியர் இசிடோர்
ஓவிய ஆசிரியர் இசிடோர்

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதியை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். தங்களது வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இசிடோர், தன் வீட்டில், உலக சமாதானம், சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்துதல், இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றை சித்திரிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் கருத்துச் சித்திரங்கள் மூலம் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

கிறிஸ்துமல் குடில்
கிறிஸ்துமல் குடில்

இதுகுறித்து ஓவிய ஆசிரியர் இசிடோரிடம் பேசினோம், ``இயேசு பாலன் பிறப்பை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் குடிலை அந்தந்த ஆண்டு நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களின் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளாக அமைத்து வருகிறேன். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் நாட்டில் நடைபெற்ற முக்கியச் சம்பவங்களின் அடிப்படையில் இந்த கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி என்றாலே பாபர் மசூதி இடிப்பு தினமும், அதையொட்டி கோயில்கள், சுற்றுலா, வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள் என முக்கிய இடங்களில் போலீஸார் சோதனை செய்து பாதுகாப்பில் ஈடுபடுவதும் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இந்த ஆண்டில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பினால் எவ்வித பிரச்னையும் இல்லாமல் இந்து, இஸ்லாம் சகோதரத்துவம் தொடர்ந்து வருகிறது.

கிறிஸ்துமஸ் குடில்
கிறிஸ்துமஸ் குடில்

அது குறித்து விளக்கும் வகையிலும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும் வரைபடங்கள் அமைத்துள்ளேன். பாபர் மசூதி தீர்ப்பு பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரு குறிப்பிட்ட சமூகம், அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரினும் மேலான `குடியுரிமை’ இன்று ஆபத்தாகியுள்ளதால், இதற்கு எதிரான போராட்டங்களும் வலுத்துள்ளன.

இது குறித்து கருத்துக்களைச் சித்திரிக்கும் வகையிலும் கருத்துச் சித்திரங்கள் அமைத்துள்ளேன். மூன்றாவதாக, நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிறுத்தப்படவேண்டும். பெண்கள் போற்றப்பட வேண்டும், உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் விதமாகவும் கருத்து சித்திரங்களைக் கொண்டு இந்த கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளோம்.

2,000 ஸ்கெட்ச் பேனாவால் அமைக்கப்பட்ட குடில்
2,000 ஸ்கெட்ச் பேனாவால் அமைக்கப்பட்ட குடில்

கடந்த ஆண்டு `கஜா புயல் பாதிப்பு' குறித்த விழிப்புணர்வு குடில் அமைத்தேன். இந்த ஆண்டு, பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் குறித்தும் அமைத்துள்ளேன்.

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் மாதத்தில் அந்த ஆண்டில் நடந்த முக்கியச் சம்பங்களை நினைவு கூர்ந்து அதன் அடிப்படையில் தலைப்புகளை உருவாக்குவோம். அதே போல, குடிலின் அமைப்பும் வித்தியாசமாக இருக்கும். கடந்த ஆண்டு முட்டை ஓடுகளால் அமைத்தோம். இந்த ஆண்டு மாணவர்கள் பயன்படுத்திய 2,000 ஸ்கெட்ச் பேனாக்கள் மூலம் அமைத்துள்ளோம். நான் ஓவிய ஆசிரியர் என்பதால் கருத்து சித்திரங்களை வரைந்துள்ளேன்.

பெண்கள் பாதுகாப்பு கருத்து சித்திரம்
பெண்கள் பாதுகாப்பு கருத்து சித்திரம்

ஸ்கெட்ச் பேனா மூலம் என் மனைவி ஆசிரியை பெர்லின் குடில் அமைத்தார். பேப்பர் கட்டிங்குகளை என் மகள் அர்ச்சனா ஒட்டி வடிவமைத்தார். நான் 35 ஆண்டுக்கால விகடனின் தொடர் வாசகன் என்பதால் பெரும்பாலான பேப்பர் கட்டிங்குகளை, `ஜூனியர் விகடன்’, `ஆனந்த விகடன்’ அட்டைப்படங்களிலும், கட்டுரைகளிலும் இடம்பெற்ற படங்களைப் பயன்படுத்தியுள்ளோம்” என்றார்.