Published:Updated:

கறுப்பு பூஞ்சைத் தொற்றால் இறந்தாரா தூத்துக்குடி தொழிலாளி? - மருத்துவமனை சொல்வது என்ன?

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி

தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறைத் தொழிலாளி கறுப்பு பூஞ்சை நோய்த் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செளந்தரராஜன். இவருக்கு வயது 58. இவர், வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். கடந்த 17-ம் தேதி முதல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த செளந்தரராஜன், கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்குவதாகச் சொல்லப்படும் கறுப்பு பூஞ்சை நோய்த் தாக்கியதால்தான் உயிரிழந்தார் என்ற தகவல் காட்டுத்தீயாய்ப் பரவியது. இது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மியூகோமிகோசிஸ் - Representational Image
மியூகோமிகோசிஸ் - Representational Image

`தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு பலியான முதல் நபர்’ எனவும் கூறப்பட்டதால், பூஞ்சை நோய் பற்றிய பயம் தூத்துக்குடி மக்களிடையே தொற்றிக்கொண்டது. உயிரிழந்த செளந்தரராஜனின் மகன் விஜயராஜிடம் பேசினோம்.

``எங்க அப்பாவுக்கு சளி, மூச்சுவிடுறதுல சிரமம் இருந்ததுனால ட்ரீட்மென்டுக்காக போன 10-ம் தேதி கோவில்பட்டியில ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்டுக்காக அனுமதிச்சோம். ஏழு நாளு அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டது. அப்பாவோட கண்ணு வீக்கமாச்சு. கண்ணுல இருந்து தானாகவே நீர் வடிய ஆரம்பிச்சது. பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சது. ஸ்கேன், சி.டி. எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தோம்.

`இது கணிக்க முடியாத வைரஸ் நோயா இருக்கலாம். இதற்கான சிகிச்சைகள் இங்க தர முடியாது. அதுக்கான வசதிகளும் இல்ல’ன்னு சொல்லி தூத்துக்குடி பெரியாஸ்பத்திரிக்கு (தூத்துக்குடி அரசு மருத்துவமனை) அனுப்பி வச்சாங்க. 17-ம் தேதியில இருந்து இங்க ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தோம். கொரோனா டெஸ்ட் எடுத்ததுல `நெகட்டிவ்’னு சொன்னாங்க. ஆனா, கண்ணு பிரச்னைக்காக ட்ரீட்மென்ட் நடந்துச்சு. `நெகட்டிவ்’ ரிசல்ட் வந்த பிறகும், கொரோனா சிகிச்சை வார்டுலதான் அப்பாவை தங்க வச்சு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. கண் பிரச்னையை சரி செய்ய டாக்டருங்க பெருசா அக்கறை காட்டல. நேத்து வரைக்கும் அப்பாவோட கண் கருவிழியைச் சுத்தி கறுப்பு நிறமா படிஞ்சிருந்தது” என்றார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலனிடம் பேசினோம். ``கொரோனா அறிகுறியால் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த செளந்தரராஜன், கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் இறக்கவில்லை. அவர் கொரோனா எதிர்வினை பாதிப்பு காரணமாகவே இறந்தார். அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதல் கண் மருத்துவத்துறையின் சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அரசு விதிமுறைகளின்படி அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டிருந்தாலும், உருமாறிய கொரோனாவால் அவரது நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், மருந்து ஏற்பு திறனின்றி அவர் உயிரிழந்தார். அவர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்படுவது தவறான தகவல். கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டாலும், உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு இங்கு அதற்கான மருத்துவ வசதிகள் உள்ளன” என்றார்.

இந்நிலையில், `கறுப்புப் பூஞ்சை நோய்த்தாக்குதலுக்கு தூத்துக்குடியில் முதல் பலி' என ஊடகங்களில் செய்திகள் பரவ ஆரம்பிக்க, 'தமிழகத்தில் கொரோனாவால் மீண்ட நீரழிவு நோயாளிகள் 7 பேர் உட்பட 9 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை கறுப்பு பூஞ்சை நோயால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

கறுப்பு பூஞ்சை நோய் என்பது ஏற்கெனவே இருப்பதுதான். அது புதிய நோய் கிடையாது. அது குணப்படுத்தக்கூடிய நோய்தான். இது குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம்” என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், `ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதால் கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது’ என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், ``கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் `மியூகோர் மைகோசிஸ்’ என்ற கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதன் பாதிப்பால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்குப் புதியதல்ல. ஏற்கெனவே காற்றில் இருப்பதுதான். ஆனால், கொரோனா வைரல் தொற்றால் ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது அது எளிதாக மனிதர்களைத் தாக்குகிறது. காற்று, மண், உணவில் கூட இந்தக் கறுப்பு பூஞ்சை நோய் பாக்டீரியா இருக்கும். ஆனால், இதன் தீவிரத்தன்மை மிகக் குறைவுதான். ஆதலால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும். குறிப்பாக, இது ஏற்பட தூசு காரணமாக இருப்பதால் கட்டுமானப் பகுதிகளுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.

ரன்தீப் குலேரியா- எய்ம்ஸ் இயக்குனர்
ரன்தீப் குலேரியா- எய்ம்ஸ் இயக்குனர்

2003-ம் ஆண்டு `சார்ஸ்’ தொற்று உருவான போதுகூட இதே கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றும் ஏற்பட்டது. கொரோனா பாதிப்பின்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்தை அதிகம் எடுத்துக்கொண்டவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மூளை, மூக்கு, கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பூஞ்சை நோயால் சில நேரங்களில் பார்வையை இழக்க நேரிடும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இந்நோய் தாக்கியவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு