Published:Updated:

`குடும்பப் பிரச்னை.. பழிவாங்குகிறார்!’- டி.எஸ்.பி-க்கு எதிராக பொதுக்குறிப்பேட்டில் எழுதிய ஆய்வாளர்

செய்துங்கநல்லூர்  காவல் நிலையம்
செய்துங்கநல்லூர் காவல் நிலையம்

டி.எஸ்.பி அவதூறாகப் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான ஆய்வாளர், காவல்நிலைய பொதுக் குறிப்பேட்டில் தன் ஆதங்கத்தைப் பதிவுசெய்துள்ள சம்பவம் தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல்நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ரெகுராஜன். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார் காவல் நிலைய பொதுக் குறிப்பேட்டில், ``ஆய்வுக்கு வந்தபோது ஆய்வாளர் ரெகுராஜன் பணியில் இல்லை என்றும், அவர் சரிவர பணி செய்வதில்லை” என்றும் எழுதிச் சென்றாராம். இதற்குப் பதிலடியாக அதே குறிப்பேட்டில், ``கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தைச் சேர்ந்தவர்தான் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார். இவர், என் மாமியாருக்கு நெருங்கிய சித்தப்பா மகன்.

டி.எஸ்.பி சுரேஷ்குமார் - ஆய்வாளர் ரெகுராஜன்
டி.எஸ்.பி சுரேஷ்குமார் - ஆய்வாளர் ரெகுராஜன்

அவர்களுக்குள் குடும்பப் பிரச்னை இருந்து வருகிறது. அதனால், என்னைப் பல வழிகளில் நேரிலும், தொலைபேசியிலும் தகாத வார்த்தைகளால் மனம் வருந்தும்படி பேசி வருகிறார். இருப்பினும் நான் பொறுமையுடன் பணியாற்றுவது என்னுடன் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும். கருங்குளம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைப்பதற்கும் ஆதிச்சநல்லூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கவும் நன்கொடையாளர்களைத் தேடித்தருமாறு வற்புறுத்துகிறார். இதனால், ஸ்பான்சர்களைத் தேடி அலைய வேண்டியதுள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

காலை 6.50 மணிக்கு பணிக்கு வந்த என்னை, காலை 7.15 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி முகாம் அலுவலகத்திலிருந்து வாக்கிடாக்கியில் அழைத்து, குறிப்பிட்ட வழக்கின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து வருமாறு அறுவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் மணக்கரைப் பகுதிக்குச் சென்றதால் நாள்குறிப்பில் பதிவு செய்யவில்லை. தான் காவல் நிலையத்தில் இல்லை என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு காவல்நிலையத்துக்கு ஆய்வுக்கு வருவதுபோல வந்துள்ளார்.

ஆய்வாளின் பதிவேட்டுக் குறிப்பு
ஆய்வாளின் பதிவேட்டுக் குறிப்பு

கடந்த 2014-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றி வருகிறேன். பணியில் இதுவரை எந்தவித தண்டனையும் பெறாத என் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை குறித்து வைத்துள்ளார். டி.எஸ்.பியால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் சிகிச்சைக்குச் செல்கிறேன்” எனப் பதிவு செய்துள்ளார்.

``இரண்டு பேருக்கும் குடும்பப் பிரச்னைகள் இருப்பது உண்மைதான். பொது நிகழ்ச்சியிலேயே இருவரும் வாய்ப் பேச்சால் மோதிக்கொள்வார்கள். ஸ்டேஷனுக்கு திடீரென இன்ஸ்பெக்‌ஷன் வந்த டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர எங்கன்னு கேட்டார்.. வெளியில் சென்றுள்ளார் என்றோம். குறிப்பேட்டில் இல்லை என எழுதி வைத்துவிட்டு, உடனே, வாக்கிடாக்கியில் இன்ஸ்பெக்டரை அழைத்தார். அதற்கு அவர், தூதுகுழி பகுதியைத் தாண்டி மணக்கரைக்கு குற்றவாளியைத் தேடிச் செல்வாதாகச் சொன்னார். அதற்கு, சற்று கடுமையாகப் பேசிவிட்டு டி.எஸ்.பி கிளம்பிவிட்டார்.

செய்துங்கநல்லூர்  காவல் நிலையம்
செய்துங்கநல்லூர் காவல் நிலையம்

சிறிதுநேரம் கழித்து வந்த இன்ஸ்பெக்டர் பொதுக் குறிப்பேட்டில் இவ்வாறு எழுதிவிட்டு எதுவும் பேசாமல் கிளம்பினார்” என்றனர் காவல் நிலைய போலீஸார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலனிடம் பேசினோம், ``இருவருக்கும் குடும்ப ரீதியாக பிரச்னை இருப்பதுபோல தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார். டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரெகுராஜன் எழுதிய பொதுக்குறிப்பேட்டு பக்கங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல