Published:Updated:

தூத்துக்குடி:`இந்த தையல் மிஷினால மகன்களை கவனிச்சுக்குவேன்!’ - நெகிழ்ந்த நம்பி நாச்சியார்

மகன்களுடன் திருமலை நம்பிநாச்சியார்
மகன்களுடன் திருமலை நம்பிநாச்சியார்

”தூத்துக்குடி ஜோயல் தம்பியின் உதவியால் எங்களுக்குப் புதிய தையல் மிஷின் கிடைச்சுருக்கு. என் மகள் துணி தைப்பது மூலமா கிடைக்குற வருமானம் என் மகன்களை கவனிப்பதற்கு ரொம்ப உதவியா இருக்கும்” என மனமுருகி கண்ணீர் விட்டார் திருமலை நம்பிநாச்சியார் பாட்டி.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகிலுள்ள கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் - திருமலைநம்பி நாச்சியார் ஆகிய வயதான தம்பதிக்கு சின்னத்துரை, முருகன் என்ற இரண்டு மகன்களும் முத்துலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இரண்டு மகன்களும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையில் இருக்கின்றனர். தாங்கள் வாழும் காலம் வரை மகன்களைப் பராமரிக்க வேண்டும் என்ற தவிப்பில் தங்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை, மகன்களுக்கு கிடைக்கும் உதவித்தொகையை வைத்தும் பராமரித்து வருகின்றனர்.

தையல் மிஷின் வழங்கிய ஜோயல்
தையல் மிஷின் வழங்கிய ஜோயல்

குடிப்பழக்கத்தால் கணவனைப் பிரிந்த மகளும் தற்போது அம்மா, அப்பாவுடன் இணைந்து அண்ணன், தம்பியைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து கடந்த ஜூன் 23-ம் தேதி, விகடன் இணையதளத்தில், “பசங்க உட்கார்ந்து ஒருவாய்ச் சோறு சாப்பிட்டாக்கூட போதும்! - ஒரு தாயின் பாசப்போராட்டம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், ”எனக்கு 60 வயதாகிறது. என் கணவருக்கு வயது 70 வயதாகிவிட்டது. அவருக்கு சரியாகக் காதும் கேட்காது.

அவரால் இனி எந்த வேலைக்கும் செல்லவும் முடியாது. மகன்களை எந்நேரமும் பக்கத்துல இருந்து பார்த்துக்கொள்வதால் என்னாலும் மகளாலும் எந்த வேலைக்கும் செல்ல முடியிறதில்லை. என் மகளுக்கு தையல் தைக்கத் தெரியும். யாராவது ஒரு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்தால்கூட, வீட்டுல இருந்தபடியே துணி தைத்தால் அதுல கொஞ்சம் வருமானம் கிடைக்கும். எங்களுக்கும் ஒத்தாசையா இருக்கும்” என ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார் தாயார் திருமலை நம்பிநாச்சியார்.

நிதி உதவி அளித்த ஜோயல்
நிதி உதவி அளித்த ஜோயல்

இக்கட்டுரையால் இக்குடும்பத்திற்கு பல உதவிகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜோயல் நம்மைத் தொடர்பு கொண்டு, ``அந்தக் கட்டுரையைப் படிச்சேன் சார். தள்ளாத வயசுலயும், எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக இருக்கும் 40 வயது, 36 வயதுடைய மகன்களை அரசின் உதவித்தொகையை மட்டும் வைத்துக்கொண்டு வைராக்கியமாக காப்பாற்றி வரும் தாய், தந்தையின் பாசப்போராட்டத்தைப் படித்து கலங்கிவிட்டேன்.

இந்த நிலைமையிலும் குடிபோதைக்கு அடிமையான கணவனை பிரிந்த முத்துலெட்சுமியும் அம்மா, அப்பாவுடன் சகோதரர்களை தன் குழந்தையைப் போல நினைத்து பராமரித்து வருகிறார். இரண்டு மகன்களுக்கும் சேர்த்துக் கிடைக்கும் அரசின் உதவித்தொகை 2,000 ரூபாயை அவர்கள் குடியிருக்கும் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட வாடகை வீட்டிற்கு வாடகையைக் கொடுத்துவிட்டு அம்மா, அப்பாவின் முதியோர் உதவித்தொகையிலும், ரேஷன் பொருள்களை வைத்தும் வாழ்க்கை ஓட்டி வருகிறார்கள் என்ற தகவலைப் படித்தும் மேலும் கலங்கிப் போனேன். அக்கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும்போதே இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென நினைத்தேன்.

பெற்றோர், சகோதரர்களுடன் முத்துலெட்சுமி
பெற்றோர், சகோதரர்களுடன் முத்துலெட்சுமி

கட்டுரையின் நிறைவில், `தையல்மிஷின் கிடைத்தால் உதவியாக இருக்கும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் கேட்டபடியே தையல்மிஷின் வாங்கித்தர தயாராக இருக்கிறேன்” எனச் சொல்லி, திருமலைநம்பி நாச்சியாரின் தொலைபேசி எண், முகவரியைக் கேட்டு குறித்துக்கொண்டார். அன்று மாலையே 6 மணி நேரத்திற்குள் தையல்மிஷின் அவர்களின் வீடு சென்று சேர்ந்துவிட்டது. மறுநாள் நேரில் சென்று ரூ.5,000 நிதி உதவியையும் அளித்துள்ளார் ஜோயல். உதவிக்குப் பின்னும் நம்மை அழைத்த அவர், “ரொம்ப மனநிறைவா இருக்கு சார்” எனச் சொன்னார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருமலைநம்பி நாச்சியார், ”விகடன் செய்தியால் எங்களுக்குப் புதிய தையல் மிஷின் கிடைச்சுருக்கு. என் மகள் துணி தைப்பது மூலமா கிடைக்குற வருமானம் என் மகன்களை கவனிப்பதற்கு ரொம்ப உதவியா இருக்கும்” என மனமுருகி கண்ணீர் விட்டார்.

அவர் மகள் முத்துலெட்சுமி, “விகடன் கட்டுரையைப் படிச்சிட்டு பல இடங்களில் இருந்து போன் செஞ்சு உதவிகள் செய்துட்டு இருக்காங்க. ஆனாலும், தையல் மிஷின் கிடைத்தால் பிழைப்பிற்கு நிரந்தர வழி கிடைத்துவிடும் என நினைத்தேன். நினைத்தபடியே ஜோயல் அண்ணன் போன் செஞ்சு ரொம்ப அக்கறையாப் பேசினார். அண்ணன், தம்பிக்கு எலும்புருக்கி நோய் தாக்கப்பட்டது குறித்தும் கேட்டார். ’நீங்க கேட்ட தையல்மிஷினை நான் வாங்கித் தர்றேன்மா” என்றார்.

மகன்களுடன் கிருஷ்ணன் – திருமலைநம்பி நாச்சியார்
மகன்களுடன் கிருஷ்ணன் – திருமலைநம்பி நாச்சியார்

அவர் பேசின 5 மணிநேரத்துக்குள்ள மோட்டருடன்கூடிய தையல்மிஷின் வீட்டுக்கு வந்துடுச்சு. மறுநாள் நேரிலும் வந்தவர், அம்மாவின் கைகளைப் பற்றி, ”எதுக்கும் கலங்காதீங்கம்மா. மூத்தமகனா இருந்து உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். என்ன உதவின்னாலும் தயங்காமக் கேளுங்க” எனச் சொன்னார். இதே ஊர்ல இருக்குற சொந்தபந்தகளே வீட்டுப்பக்கம் எட்டிப்பாக்காத நிலையில், முகம் தெரியாத பல சொந்தங்கள் உதவிக்கரம் நீட்டுறதை நினைச்சு ஆறுதலாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு. நாளையில இருந்து தையல் வேலையை ஆரம்பிச்சுடுவேன். விகடனுக்கு ரொம்ப நன்றி” என்றார் மகிழ்ச்சி பொங்க.

`பசங்க உட்கார்ந்து ஒருவாய் சோறு சாப்பிட்டாக்கூட போதும்!’- ஒரு தாயின் பாசப்போராட்டம்
அடுத்த கட்டுரைக்கு