Published:Updated:

`உயிருள்ளவரை மறக்கமாட்டேன்!’ - அயர்லாந்தில் சிக்கிய கர்ப்பிணி செவிலியருக்கு உதவிய கனிமொழி எம்.பி

கனிமொழிக்கு நன்றி தெரிவித்த செவிலியர் டீனு
கனிமொழிக்கு நன்றி தெரிவித்த செவிலியர் டீனு

அயர்லாந்தில் செவிலியர் பணிக்குச் சென்று தூத்துக்குடிக்குத் திரும்ப முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணிப் பெண், சொந்த ஊருக்குத் திரும்ப உதவிய எம்.பி கனிமொழியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையைச் சேர்ந்த டீனு அயர்லாந்து நாட்டில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குக் கடந்த 25.8.19-ல் ரொசில்டன் என்பவருடன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் ஒன்றாகப் பணி செய்யும் நோக்கத்துடன் கடந்த 12.9.19-ல் கணவரையும் சுற்றுலா விசாவில் அயர்லாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். மூன்று மாத சுற்றுலா விசாவில் சென்ற கணவருக்கு குறித்த நேரத்தில் வேலை கிடாக்காததாலும், விசா காலாவதியான காரணத்தினாலும் அவர் கடந்த‌ டிசம்பர் மாத இறுதியில் இந்தியாவிற்குத் திரும்பினார்.

கனிமொழிக்கு நன்றி தெரிவித்த செவிலியர் டீனு
கனிமொழிக்கு நன்றி தெரிவித்த செவிலியர் டீனு

டீனு மட்டும் அயர்லாந்தில் தொடர்ந்து பணி செய்து வந்தார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் டீனு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மகப்பேறுக்காக கடந்த 19.4.19 அன்று தேதி நாடு திரும்பிட பதிவு செய்துள்ளார். ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் டீனுவால் இந்தியாவிற்கு வர முடியவில்லை. இந்நிலையில் டீனுவின் தந்தை லூர்துசாமியும், தாயார் பியூலாவும் தன் மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழிக்குக் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்தனர்.

கடிதத்தைப் படித்த கனிமொழி, உடனடியாக எடுத்த நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்ட செவிலியர் டீனு நேற்று இரவு (17.05.20) தூத்துக்குடி வந்தடைந்தார். சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், தன் கணவருடன் இன்று தன்னை மீட்ட கனிமொழியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறினார். இதுகுறித்து செவிலியரான டீனுவிடம் பேசினோம், ``மகப்பேறுக்காக சொந்த ஊருக்கு வரணும்னு போன மாதமே முடிவு செஞ்சேன். ஆனா, கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கால் விமான சேவை முடங்கிப் போச்சு. எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல.

செவிலியர் டீனுவின் பெற்றோர் அனுப்பிய கடிதம்
செவிலியர் டீனுவின் பெற்றோர் அனுப்பிய கடிதம்

அயர்லாந்துலயும் எனக்கு எந்த உதவியோ ஆதரவோ கிடைக்காம தவிச்சிட்டு இருந்தேன். என் பிள்ளைய எந்த நாட்டுல பெத்து எடுக்கப்போறேன்னு தினமும் புலம்பினேன். அந்த நேரத்துலதான் எனக்கு கனிமொழியம்மா ஞாபகம் வந்துச்சு. உடனே எங்க வீட்டுக்கு போன் செஞ்சு,`கனிமொழியம்மாவுக்கு என் நிலைமையைச் சொல்லி மனு கொடுங்கம்மா.. நிச்சயம் அவுங்க எனக்கு உதவி செய்வாங்க”ன்னு சொன்னேன்.

ஊரடங்கால் பஸ்ஸும் ஓடாததுனால கோரிக்கை மனுவை கடிதமா அனுப்பி வச்சோம். நானும் எம்.பி அம்மாவுக்கு மெயில் அனுப்பினேன். இ.மெயில் கடிதம் கிடைச்ச உடனேயே இந்தியத் தூதுரகத்திற்குக் கடிதம் அனுப்பி நான் சொந்த ஊருக்குத் திரும்ப நடவடிக்கை எடுத்தாங்க. அயர்லாந்திலிருந்து காரில் லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டிற்கு வந்தேன்.

கனிமொழிக்கு நன்றி தெரிவித்த செவிலியர் டீனு
கனிமொழிக்கு நன்றி தெரிவித்த செவிலியர் டீனு

அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு வந்தேன். அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தேன். சென்னையிலிருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்தேன். வந்தவுடனேயே அந்தம்மாவப் பார்த்து நன்றி சொல்ல நேர்ல சந்திச்சேன். அவங்களைப் பார்த்ததுமே கையெடுத்துக் கும்பிட்டேன். சந்தோஷத்துல கண்ணீர் சிந்தினேன். என்னிடம் அக்கறையா நலம் விசாரிச்சாங்க. குழந்தை பொறந்ததும் பார்க்க வர்றேன்னு சொல்லிருக்காங்க. அவங்களோட உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு