Published:Updated:

வாழை விவசாயிகளுக்கு உதவ தூத்துக்குடி மாநகராட்சியின் `ஸ்மார்ட் பிளான்’ - குவியும் பாராட்டுகள்

பணியாளர்களுக்கு வாழைப்பழம் வழங்கும்  ஆணையர்
பணியாளர்களுக்கு வாழைப்பழம் வழங்கும் ஆணையர்

தூத்துக்குடியில் வாழை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், 2,000 மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா 2 வாழைப்பழம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகால், தென்கால், மேலக்கால், கீழக்கால் பாசனம் மூலமாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல், வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஸ்ரீவைகுண்டம், குலையன்கரிசல், சாயர்புரம், சிவகளை, ஏரல், குரும்பூர், திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஏத்தன், நாடான், பூவன், கற்பூரவள்ளி, பச்சை, பூலாஞ்செண்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாழைப்பழம்
பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாழைப்பழம்

தற்போது வாழை அறுவடை நிலையை எட்டியுள்ள நிலையில், ஏத்தன் ரக வாழை மட்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திற்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஊரடங்கால் கடந்த 30 நாள்களுக்கும் மேலாகக் கடைகள் அடைக்கப்பட்டதாலும் போக்குவரத்திற்கு இரண்டு மடங்கு வாடகை அளிக்க வேண்டியதிருப்பதாலும், அதிக தேவை இல்லாததாலும் மற்ற ரக வாழைக்குலைகளை வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

குலைகள் வெட்டாமல் விடப்பட்டதால் மரத்திலேயே பழுத்தும், அழுகியும் காணப்படுகின்றன. இதனால், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பழங்களைச் சாப்பிட்டு பசியைப் போக்கியும், கிராமங்களுக்குள் மக்களுக்குச் சாப்பிடக் கொடுத்தும் வந்தனர். சில விவசாயிகள் கிடைத்த விலை போதும் என்று கருதி, வாழைக் குலைகளை வெட்டி ஏலக்கூடங்களுக்குக் கொண்டு வந்தாலும், அதிக தேவை இல்லாததால் உள்ளூர் வியாபாரிகளே வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டவில்லை.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன்
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன்

இதனால், ஏலக்கூடத்திலும் வாழைத்தார்கள் அழுகியே காணப்படுகின்றன. இதுகுறித்து கடந்த 30-ம் தேதி, ``பழத்தை மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்குறோம்!”- கலங்கும் வாழை விவசாயிகள்” என்ற தலைப்பில் முதலில் நாம் செய்தி வெளிட்டோம்.

இந்நிலையில், வாழை விவசாயிகளின் நிலைகுறித்தும், ஏலக்கூடத்தில் விற்பனையாகாமல் விவசாயிகள் அவதிப்படுவதையும் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன், நலன் காக்கும் வகையிலும், மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு தினமும் வாழைப்பழம் வழங்கிட முடிவெடுத்து இத்திட்டத்தை வகுத்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன்
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன்

இன்று தொடங்கிய இந்நிகழ்வில் பணியாளர்களுக்கு தலா இரண்டு வாழைப்பழங்கள் கொடுத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.ஜெயசீலனிடம் பேசினோம்,``ஊரடங்கால் வாழைக்குலைகளுக்கு தேவையும், விலையும் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் என்ற விவசாயிகளின் நிலை குறித்து விகடன் உள்ளிட்ட சில ஊடகங்களில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும், பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவில் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்கு உதவிடும் வகையிலும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தினம் இரண்டு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் 4 மண்டங்களில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தம் 2,000 பேருக்கு வழங்கப்படும்.

வாழைப்பழம் எடுத்துக் கொள்ளும் ஊழியர்
வாழைப்பழம் எடுத்துக் கொள்ளும் ஊழியர்

தினமும் காலை அலுவலகத்திற்குள் நுழையும் போது பழங்களை எடுத்துச் செல்லலாம். நாடு, பச்சை, செவ்வாழை, கற்பூரவள்ளி, பூவன் என தினம் ஒரு ரக பழம் வழங்கப்படும். விவசாயிகளிடமிருந்து வாழைக்குலைகளைக் கொள்முதல் செய்வதற்காக நான்கு ஊழியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்களுக்குக் கூடுதல் சத்தாகவும், தற்போதைய கோடையில் குளிர்ச்சியாகவும் இருக்கும்” என்றார். தூத்துக்குடி மாநகராட்சியில் இந்த முயற்சி பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு