Published:Updated:

`கலர் கலர் முகக்கவசத்துக்கு நாங்க எங்க போறது?’ -பனைஓலையை கவசமாக்கிய தூத்துக்குடி பனைத்தொழிலாளி

பனை ஓலையில் மாஸ்க்
பனை ஓலையில் மாஸ்க்

``மாஸ்கைத் தேடியெல்லாம் நாங்க எங்கய்யா போறது? பனை ஓலைதான் எங்களுக்கு முகக் கவசம்” எனச் சொல்லி தூத்துக்குடியில் பனை ஓலையால் முகக்கவசம் தயாரித்து பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் வயதான தம்பதி.

தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டகளில்தான் பனை மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் வேம்பார், குளத்தூர், தருவைக்குளம், ஆறுமுகநேரி, வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத், சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், பெரியதாழை வரையிலான கடலோரப் பகுதிகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

பனை ஓலையில் மாஸ்க் அணிந்த தம்பதிகள்
பனை ஓலையில் மாஸ்க் அணிந்த தம்பதிகள்

இதில், உடன்குடிதான் கருப்பட்டி உற்பத்திக்கு சிறப்பு பிரசித்தி பெற்றது. வீட்டுமனைகள் அதிகரிப்பு, செங்கல்சூளைகள், வீடு கட்டுமானம் ஆகிய தேவைகளுக்காக வெட்டப்பட்டதால் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால், பனைத்தொழிலும் நசியத் தொடங்கியது. இருப்பினும், தொழிலை விடக் கூடாது என்பதால் சிலர் தொடர்ந்து பனைத்தொழிலைச் செய்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் நாட்டையே ஆட்டிப்படைக்கிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். காய்கறிகள், பால், மளிகைப் பொருள்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வந்தாலும், முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டே வெளியே வந்து செல்கிறார்கள்.

பனை ஏறும் குணசேகரன்
பனை ஏறும் குணசேகரன்

இந்த நிலையில், பனைத்தொழில் செய்பவர்கள் துணியாலான மாஸ்க்-ஐ அணியாமல், `வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பது போல பனை ஒலையால் மாஸ்க் செய்து அதையே மூகக்கவசமாக்கி வழக்கம்போல பனைத்தொழிலைச் செய்கிறார்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த பனைத்தொழில் செய்யும் வயதான தம்பதி குணசேகரன் -முருகலெட்சுமி.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகிலுள்ள கு.சுப்பிரமணியபுரத்தில் உள்ள பனந்தோட்டத்தில் பனைத்தொழில் செய்து வருகிறார்கள். இதுகுறித்து குணசேகரனிடம் பேசினோம், ``வருசத்துல மார்ச் மாசம் முதல் ஆகஸ்ட் வரை ஆறுமாசம்தான் இந்த பனைத்தொழில் நடக்கும். மார்ச் மாசமே பனைமரத்துல தேவையில்லாத மட்டைகளைக் கழிச்சுட்டு பாளைகளை பக்குவப்படுத்தி இடுக்கி சீவிவிட்டு பதநீர் இறக்கி விற்போம்.

பனைத்தொழிலாளி குணசேகரன்
பனைத்தொழிலாளி குணசேகரன்

கருப்பட்டியாவும் காய்ச்சுவோம். பதநீர் சீசன் ஆரம்பிச்சுருக்குற இந்த நேரத்துல ஏதோ கொரோனா வைரஸ் பரவுதுன்னு சொல்லி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு அரசாங்கம் தடை உத்தரவு போட்டிருக்காம். அதனால், பதநீர் குடிக்க ஆளுகளே வர்றதில்ல. கிராமத்துக்குள மட்டும் ஒன்னு ரெண்டு பேரு வாங்கிக் குடிக்கிறாங்க.

மூணு நாளுக்கு முன்னால பனை ஏறிக்கிட்டிருக்கும்போது பைக்குல வந்த ஒரு போலீஸ்காரர், ``ஏன்யா.. முகத்துல மாஸ்க் கட்ட மாட்டியா?”ன்னு கேட்டு சத்தம் போட்டுட்டுப் போனாரு. படிப்பறிவில்லாத எனக்கு மாஸ்க்குன்னா என்னனு தெரியல. ரோட்டுல முகத்துல வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா நிறங்கள்ல ஒருதுணியைக் கட்டிக்கிட்டும், ஒருசிலர் கைக்குட்டையை கட்டிக்கிட்டும் போனதைப் பார்த்தேன். ஓஹோ இதுதான் மாஸ்க்கா.. இந்தக் கலர் கலர் மாஸ்குகளுக்கு நாம எங்க போறதுன்னு யோசிச்சேன். பதநீர் ஊத்திக் குடிக்குற ஓலையை அவங்க சொன்ன மாஸ்க் போல வடிவமைச்சு நானும் என் மனைவியும் முகத்துல கட்டி வேலையைப் பார்க்குறோம்.

பனை ஓலையில் மாஸ்க் அணிந்த தம்பதி
பனை ஓலையில் மாஸ்க் அணிந்த தம்பதி

இதைக் கட்டுறதுனால சுவாசிக்கும் காற்றுல பனை வாசனைதான் அடிக்குது. இதைப் பார்க்குறவங்க எங்களுக்கும் செய்து தரமுடியுமான்னு கேட்குறாங்க. இந்தத் தடை உத்தரவால பதநீரை விற்க முடியாம கருப்பட்டியாக் காய்ச்சுறோம். அந்தக் கருப்பட்டியையும் விற்க முடியலை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு