Published:Updated:

தூத்துக்குடி: `முழு லாக்டெளனில் அவசியமில்லாம சுற்றினால் எப்படி?’ - எச்சரித்த எஸ்.பி

கபசுரக்குடிநீர் வழங்கும் எஸ்.பி ஜெயகுமார்
கபசுரக்குடிநீர் வழங்கும் எஸ்.பி ஜெயகுமார்

``உங்க நல்லதுக்குதான் முழு லாக்டெளன் போட்டிருக்கு. பொறுப்பில்லாமலும் அவசியமில்லாமலும் வெளியில சுத்துனா எப்படி?” எனத் தூத்துக்குடியில் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்குதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு, இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூலை மாதத்தைப் போலவே, இம்மாதமும் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அறிவுரை கூறும் எஸ்.பி ஜெயகுமார்
அறிவுரை கூறும் எஸ்.பி ஜெயகுமார்

இம்மாதத்தின் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு, இன்று அமல்படுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவசியமில்லாமல் சாலைகளில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 32 பேரை நிறுத்தினார். பின்னர், அனைவரையும் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து அறிவுரை கூறினார்.

அதில் பேசிய அவர், ``கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இம்மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளில்லாத பொது ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. உங்களின் நலனுக்காகதான் அரசும், காவல்துறையும் உழைத்துக் கொண்டிருக்கிறது.

அறிவுரை கூறும் எஸ்.பி ஜெயகுமார்
அறிவுரை கூறும் எஸ்.பி ஜெயகுமார்

இந்தநிலையில் அவசியம் இல்லாமலும், தேவையில்லாமலும் சாலைகளில் பைக், கார்களில் சுற்றித்திரிந்தால் எப்படி? உங்கள் ஒவ்வொருவரின் உடல்நலத்தில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. கொரோனா பாதிப்பை உணராமல் இப்படி அலட்சியமாக ஏன் வெளியில் சுற்றுகிறீர்கள்? வாரத்தில் ஒருநாள் வெளியில் சுற்றாமல் வீடுகளில் இருந்து ஓய்வெடுங்கள். வெளியில் சென்று வந்தால் கைகளை சோப்பாலும், சானிடைசராலும் சுத்தமாகக் கழுவ வேண்டும். வாரத்தில் 3 நாள்களாவது கபசுரக்குடிநீர் குடிக்க வேண்டும்” எனச் சொல்லி அறிவுரை கூறியதுடன் எச்சரித்தார்.

ஊரடங்கு நீட்டிப்பு: EPSக்கு உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்! |The Imperfect Show 27/7/2020

அதில், முகக்கவசம் அணியாத சிலரை அழைத்து, ``ஏன் மாஸ்க் போடவில்லை?” எனக் கேட்டதுடன் உடனே அவர்களுக்கு மாஸ்குகளை வழங்கினார். பின்னர், அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டதுடன், கூடுதலாக ஒரு மாஸ்கும் வழங்கப்பட்டது.

வாகன தணிக்கையில் போலீஸார்
வாகன தணிக்கையில் போலீஸார்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி ஜெயகுமார், ``தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி, 200 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படுகிறது. ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட 7,000 வழக்குகளில் 3,590 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், 3,400 வாகனங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 190 வாகனங்கள் மட்டுமே ஒப்படைக்க வேண்டியுள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு