Published:Updated:

இரண்டு நாள் மழைக்கே மிதக்கும் தூத்துக்குடி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் செந்தில்ராஜ்
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி, கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால் குளம்போலக் காட்சியளிக்கிறது. நீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். மாவட்டத்தில் அதிகபட்சமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பகுதியில் 166 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் 800.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

குடியிருப்பில்  குளம்போல தேங்கிய மழை நீர்
குடியிருப்பில் குளம்போல தேங்கிய மழை நீர்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் குளம்போலக் காட்சியளிக்கிறது. சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோல, அரசு மருத்துவமனை, நீதிபதிகள் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது.

இதனால், உப்பு உற்பத்தித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையால் மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.இந்தநிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிக கனமழை பெய்யும் என எனக் கூறி தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று காலையில் பெய்த மழையால் மேலும் தண்ணீர் தேங்கியது. சத்யநகர் பகுதியில் மழையால் இரண்டு வீடுகள் இடிந்தன. பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் பழைமையான மரம் விழுந்தது.

மழைநீரில் நாற்று நடும் கிராமத்தினர்
மழைநீரில் நாற்று நடும் கிராமத்தினர்

தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி, பல இடங்களில் கிராம மக்கள் தேங்கிய நீரில் கப்பல்விட்டும், நாற்று நட்டும், ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டியும் நூதன முறையில் போராட்டங்களை நடத்தினர். தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜாபாளையம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி அருகிலுள்ள குப்பைத்தொட்டி அருகில் தேங்கிய மழை நீரில் சுமார் 50 ஆதார் அட்டைகள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தலைமை தபால் நிலையத்தில் அந்தப் பகுதியினர் தகவல் சொல்ல, கடந்த மாதம் காணாமல்போன தபால் பைகளில் இருந்தவை அவை என, அந்த கவர்களிலுள்ள சீலை வைத்துக் கண்டுபிடித்தனர்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், ``தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் மழை பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.தூத்துக்குடியில் 36 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் 42 பம்புகள் மூலமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு, பக்கிள் ஓடை வழியாக நீர் கடலுக்குச் செல்லும் வகையில் வெளியேற்றப்பட்டுவருகிறது.

அரசு மருத்துவமனைக்குள் தேங்கிய மழைநீர்
அரசு மருத்துவமனைக்குள் தேங்கிய மழைநீர்

தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்ப் மூலம் மழைநீரை அகற்ற முடியாத இடங்களில் ஆறு தண்ணீர் லாரிகள் மூலம் அகற்றிவருகிறோம். மேலும், 120 பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும் பழைமையான, இடியும் நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களைத் தங்கவைக்க 20 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழை வந்தால் அரசும், மக்களும் செய்ய வேண்டியது இதுதான்! ரமணன் Exclusive Interview | SR Ramanan

மழை வெள்ளம் பாதிப்பு குறித்த அவசரத் தேவைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0461- 2340101, வாட்ஸ்அப் எண் 96864-54714 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

மூழ்கிய உப்பளங்கள்
மூழ்கிய உப்பளங்கள்

இந்தநிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சிக் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என அறிவித்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். இதனால், குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு