Published:Updated:

LockDown: மீன்பிடித் திருவிழாவில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்! கலங்கிய பெரம்பலூர் போலீஸ்

பெரம்பலூர் மீன் பிடித்திருவிழா
பெரம்பலூர் மீன் பிடித்திருவிழா

`அரியலூர் மாவட்டத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அங்கு போலீஸார் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இங்கும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் ஏரியில் இறங்கியிருக்கிறார்கள்'

ஊரடங்கு உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கொரானோ- பாதிப்பு பற்றியெல்லாம் யோசிக்காமல் தடையை மீறி 1000-க்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டத்தைக் கலைக்கக் குன்னம் போலீஸார் படாதபாடு பட்டிருக்கிறார்கள்.

பெரம்பலூர் மீன் பிடித்திருவிழா
பெரம்பலூர் மீன் பிடித்திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வேப்பூரில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 50,000 மீன் குஞ்சுகள் விட்டு வளர்த்தார்கள். இந்நிலையில் வேப்பூர் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரானோ பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், மீன்பிடித் திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், திடீரென தடையை மீறி இந்த ஏரியில் வேப்பூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் வலை, வேட்டி மற்றும் சேலையைப் பயன்படுத்தி மீன்பிடித் திருவிழாவை நடத்தினர். இதில் வேப்பூர், ஓலைப்பாடி, கீரனூர், பரவாய், ஆண்டி குரும்பலூர், நமையூர், பெருமத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, ஏரியில் இறங்கி மீன்களைப் பிடித்தனர். இதில் அவர்கள் கிலோ கணக்கில் மீன்களைப் பிடித்து அள்ளிச்சென்றனர்.

குளத்தில் மீன் பிடித்த மக்கள்
குளத்தில் மீன் பிடித்த மக்கள்

சமூக இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டு மீன்பிடித் திருவிழா நடத்தியது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மீன்பிடித் திருவிழா பற்றித் தகவல் அறிந்த குன்னம் எஸ்.ஐ பாலு தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களைக் கலைந்து போகச் சொல்லி வலியுறுத்தினார். ஆனால், பொதுமக்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆளுக்கு ஒருபக்கமாக ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பலமணிநேரம் போலீஸார் திணறினர்.

`சுடு தண்ணீர்... மாஸ்க் தாங்க!' -போராட்டத்தில் இறங்கிய ராமநாதபுரம் கொரோனா நோயாளிகள்

இதுகுறித்து சமூக ஆர்வலர் மகேந்திரனிடம் பேசினோம். ``தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் தாக்கத்தால் இறப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன,. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 148 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவும் என்ற அச்சம் கொஞ்சமும் இன்றி 1000 பேருக்கும் மேல் ஒரு இடத்தில் கூடியிருக்கிறார்கள்.

அரியலூரில் நடந்த மீன்பிடித் திருவிழா
அரியலூரில் நடந்த மீன்பிடித் திருவிழா

இதனை யார் மீது தவறாக எடுத்துக்கொள்ள முடியும். ஊரடங்கு உத்தரவை மீறி ஏரியில் இறங்கி மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்குக் கொரானோவின் பயம் கொஞ்சம்கூட இல்லையென்று தானே அர்த்தம். இதற்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அங்கும் போலீஸார் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இங்கும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் ஏரியில் இறங்கியிருக்கிறார்கள்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

இம்மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவேண்டும். மீண்டும் இதுபோல் செய்தால் காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பயம் வரும். சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் அப்படிச் செய்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும் இல்லையேல் கேள்விக்குறிதான்’’ என முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு