Election bannerElection banner
Published:Updated:

`அப்துல் கலாமின் லட்சியங்களைக் கடைபிடிப்போம்!' - நினைவுநாளில் உறுதியேற்ற மாணவர்கள்

கலாம் நினைவிடத்தில் உள்ள வெண்கல சிலை.
கலாம் நினைவிடத்தில் உள்ள வெண்கல சிலை.

இன்று (ஜூலை 27) டாக்டர் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. கலாமின் மூத்த சகோதரர் முத்துமுகம்மது மீரா மரைக்காயர் தலைமையில் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரகணக்கானோர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.
கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.

ராமேஸ்வரம் தீவில் பிறந்து விஞ்ஞானியாக வளர்ந்து நாட்டின் வின்வெளி துறையில் வியக்கத்தகு கண்டுபிடிப்புகளை தந்தவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். அக்னி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்த கலாம் நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்தார். ஜனாதிபதி பதவியில் இருந்த போதும் மக்களுடனும், மாணவர்களுடனும் நெருக்கத்தை கைவிடாமல் தொடர்ந்தவர். இதனால் மக்களின் ஜனாதிபதி என போற்றப்பட்டவர். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் உயிர் பிரிந்தது.

இதையடுத்து ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்ட அவரது உடல் லட்சகணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தேசிய நினைவகம் உருவாக்கப்பட்டது. சுமார் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த நினைவகத்தினை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கலாமின் குடும்பத்தினர்
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கலாமின் குடும்பத்தினர்

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கலாம் நினைவிடத்திற்கு சுமார் 68 லட்சம் பேர் வருகை தந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 27) டாக்டர் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. கலாமின் மூத்த சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயர் தலைமையில் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கலாமின் அண்ணன் மகள் நஸீமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தென்மண்டல பொறுப்பாளர் பாலமுருகன், நினைவிட பொறுப்பாளர்கள் கவுஸ், அன்பழகன், தாய் தமிழ் அறக்கட்டளை நிர்வாகி கராத்தே பழனிச்சாமி, நடிகர் தாமு உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செய்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிபாளர் ஓம்பிரகாஷ் மீனா, கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ், வேல்ஸ் பல்கலைக்கழகம் ஐசரி கணேஷ், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்மா கார்த்தி ஆகியோர் கலாம் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கலாம் நினைவிடத்தில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு
கலாம் நினைவிடத்தில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

இதன் பின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும், அங்கு இடம் பெற்றுள்ள கலாமின் வாழ்க்கை சித்திரங்கள், அவர் பெற்ற பட்டங்கள், பரிசுகள், அவரது கண்டுபிடிப்பின் மாதிரிகள், பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு சென்றதுடன், கலாமின் லட்சியங்களை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதாக உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாக்டர் அப்துல் கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அப்துல் கலாம் இண்டர் நேஷனல் பவுண்டேஷன் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ள உள்ள ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தினை விளக்கும் ஊர்தியினையும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்துல்கலாம் நினைவிடம்
அப்துல்கலாம் நினைவிடம்

மேலும் கலாம் உருவத்தினால் ஆன மணல் சிற்பம், பூசணிக்காய், மற்றும் பெண்சில், காய்ந்த சருகு போன்றவற்றில் வடிக்கப்பட்ட கலாமின் உருவம் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு நிறுவனங்களின் சார்பில் உருவாக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்புகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு