Published:Updated:

பாலாற்று மணலில் பொங்கிய சாராய ஊற்று! - பள்ளம் பறித்துக் குடித்த மூவர் கவலைக்கிடம்

பாலாற்று மணலில் வேகவேகமாக பள்ளம் எடுக்க ஆரம்பித்ததும், சில அடி ஆழத்திலேயே சாராயம் ஊற்றெடுத்துள்ளது. இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மூவரும் சாராயத்தை அள்ளி அள்ளிக் குடிக்க ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில், தேவைக்கு அதிகமான சாராயத்தைக் குடித்ததால் போதையில் அங்கேயே மயங்கி விழுந்தார்கள்.

சாராயம் குடித்ததால் சிகிச்சையில் இருப்பவர்கள்
சாராயம் குடித்ததால் சிகிச்சையில் இருப்பவர்கள்

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், கடந்த வாரம் சிறிய ரக லாரியில் எரிசாராயம் பிடிபட்டது. காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 லிட்டர் எரிசாராயத்தை காஞ்சிபுரம் அருகே, வளர்தோட்டம் பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் பள்ளம் தோண்டி ஊற்றி அழித்துவிட்டு போலீஸார் சென்றனர். இதை அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அவர்கள் இதைத் தெரிவித்திருக்கிறார்கள்.

Hospital
Hospital

இதைக் கேள்விப்பட்ட பக்கத்து ஊரான தூசி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், வெங்கடேசன், சேட்டு ஆகிய மூவரும் பாலாற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். ஒருவழியாக சாராய வாசனையை மோப்பம்பிடித்த அவர்கள், அந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். சாராயம் ஊற்றிய இடத்தில் அதற்கான தடம் தெரிந்ததையடுத்து, வேகவேகமாகப் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். சில அடி ஆழம் தோண்டியதும் சாராய ஊற்று எடுத்துள்ளது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மூவரும் சாராயத்தை அள்ளி அள்ளிக் குடித்திருக்கிறார்கள். சாராயமும் சுரந்துகொண்டே இருந்ததால் ஒருகட்டத்தில் தேவைக்கு அதிகமான சாராயத்தைக் குடித்து, போதையில் அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார்கள். இதனால் அவர்களின் நிலை மோசமானது.

அந்த வழியாகச் சென்ற சிலர், மூவரும் மயங்கிக்கிடந்ததைப் பார்த்துள்ளனர். மூவரும் உயிரோடு இருந்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாததால் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், 108 ஆம்புலென்ஸ் மூலம் அவர்களைக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினார்கள்.

Treatment
Treatment

பிடிபட்ட சாராயத்தை காவல்துறையினர் ஊற்றி எரிப்பது வழக்கம். ஆனால், காவல்துறையினர் மணலில் ஊற்றி அழித்திருக்கிறார்கள். கோடைக்காலமாக இருந்தால் ஆற்று மணலில் சாராயம் வற்றிப்போயிருக்கும். மழைக்காலம் என்பதாலேயே சாராயம் பூமிக்கடியில் அப்படியே தேங்கி இருந்திருக்கிறது. கால்நடைகளுக்கு ஆபத்து இல்லாமல் சாராய ஊற்றை அடைக்க வேண்டும் என ஆடு மேய்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.