திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஏழைக் குழந்தைகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 15 சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். ஆயுத பஜை விடுமுறையையொட்டி, ஒரு சிறுவன் மட்டும் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறான்.
இந்த நிலையில், விடுதியிலுள்ள குழந்தைகளுக்கு நேற்றைய தினம் (புதன்கிழமை) இரவு ரச சாதமும், லட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உணவை உட்கொண்ட சிறுவர்கள், காப்பாளருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அனைவரும் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிறுவர்கள் பாபு (10), ஆதீஸ் (8) ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், சிறுவன் மாதேஸ் (14) திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கடுமையான உடல்நல பாதிப்புடன சிறுவர்கள் தரணீஸ் (12), கெளதம் (18), சபரீஷ் (10), சதீஷ் (9), குணா (8), ஹர்ஷத் (9), ரித்தீஷ் (8), பிரகாஷ் (12), ஸ்ரீகாந்த் (13), மணிகண்டன் (17), கவின்குமார் (13) ஆகிய 11 பேரும், காப்பாளர் ஜெயராமனும் (60) திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்வையிட்ட ஆட்சியர் வினித், ``கெட்டுப் போன உணவை உட்கொண்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மற்ற சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.