Election bannerElection banner
Published:Updated:

`குமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்றுபேர் ஒரே நாளில் பலி’ -என்ன காரணம்?

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தமிழக சுகாதாரத்துறையும் குமரியில் பலியான மூன்று பேர் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று இரவு பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே பலியான மூவருக்கும் கொரோனா இருந்ததா இல்லையா என்பது தெரிய வரும்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 66 வயது மீனவர் கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஊருக்குத் திரும்பியுள்ளார்.

கொரோனா
கொரோனா

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவியுள்ளதால் அந்த மீனவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இதற்கிடையில் சவுதி அரேபிய நாட்டில் பணிபுரிந்துவந்த அவரது மகன் கடந்த 13-ம் தேதி ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில் 66 வயது மீனவருக்குக் காய்ச்சல், இருமல் இருந்துள்ளது.

இதையடுத்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை கொரோனா தனிமை வார்டில் வைத்து மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில் இன்று திடீரென அவர் மரணமடைந்தார். மேலும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முட்டம் பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, திருவட்டார் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

இவர்கள் மூவரது மாதிரிகளும் திருநெல்வேலி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று இரவு ரிசல்ட் வரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் இதுவரை 50 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 33 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தனர். அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 26-ம் தேதி கொரோனா வார்டில் இருந்த குளச்சலை அடுத்த கோடிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மரணமடைந்தார். அதற்கு முன் ஒருவர் இறந்துள்ளார். கொரோனா வார்டில் இதுவரை ஆறுபேர் இறந்துள்ளனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கூறுகையில், "கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவருக்குச் சிறுநீரக நோய் இருந்ததால் மரணமடைந்துள்ளார்.

டீன் சுகந்தி ராஜகுமாரி
டீன் சுகந்தி ராஜகுமாரி

இரண்டு வயது குழந்தைக்குப் பிறவியிலேயே எலும்பு நோய் இருந்துள்ளது. 24 வயது இளைஞருக்கு நிமோனியா காரணமாக ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இறந்துள்ளார். இவர்களது மாதிரிகளின் சோதனை முடிவு இன்று இரவு கிடைக்கப்பெறும். குமரி மாவட்டத்தில் கொரோனா காரணமாக யாரும் இறக்கவில்லை. கொரோனா பாசிட்டிவ் யாருக்கும் கண்டறியப்படவில்லை" என்றார்.

சுகாதாரத்துறை அறிக்கை
சுகாதாரத்துறை அறிக்கை

இதனிடையே தமிழக சுகாதாரத்துறையும் குமரியில் பலியான மூன்று பேர் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று இரவு பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே பலியான மூவருக்கும் கொரோனா இருந்ததா இல்லையா என்பது தெரிய வரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு