திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு கிழக்குப் பகுதியிலிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ரெட்டியூர் கிராமம். இந்தக் கிராமத்தில், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு தலைமையிலான மாணவர்கள் தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய மிகப்பெரிய ஈமக்காடு ஒன்றினைக் கண்டுபிடித்தனர்.
இது குறித்து, பேராசிரியர் பிரபு கூறுகையில், ‘‘ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வன்னிய பெருமாள் கொடுத்த தகவலின் பேரில்தான் அங்கு சென்று ஆய்வு செய்தோம். ஏலகிரி மலையின் பின்புற சரிவில் நீலிக்கொல்லி என்ற பகுதியில், 15-க்கும் மேற்பட்ட கற்குவைகளைக் கண்டுபிடித்தோம்.

அவற்றில், 3 கற்குவைகள் கல் வட்டத்துக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்குவையும் 15 மீட்டர் சுற்றளவில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கின்றன. ஒரு கற்குவைக்கு நடுவில் மட்டும் கற்திட்டை அமைப்பும் காணப்படுகின்றன. இங்குள்ள கற்குவைகளுக்கு அருகில் 3 இரும்பு உருக்கும் ஆலைகள் இருந்ததற்கான தடயங்களும் காணப்படுகின்றன. இரும்பு உலைக்குள் காற்றினைச் செலுத்த பயன்படுத்தப்படும் ஊது குழாய்கள் நிறைய சிதறிக் கிடக்கின்றன. செவ்வகம் வடிவிலான இரும்பு உருக்கும் உலை இருந்ததற்கான அடித்தளம், இன்னும் அதே நிலையில் இங்கு காணப்படுகின்றன. இவை பெருங்கற்கால மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான உறுதியான தடயங்களாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கற்குவைகள் என்பவை பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் ஆகும். அன்றைய காலத்து மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு அந்த இடத்தை அடையாளம் காண்பதற்காகப் பல குறியீடுகளை அமைத்திருந்தனர். அவை, கல்வட்டம், கற்திட்டை, கற்பதுக்கை, நெடுங்கல் போன்ற சொல்லில் அடங்கும். இந்த வரிசையில்தான் கற்குவை என்ற அமைப்பும் அடங்குகிறது. இதன் பொருளைப் புரியும்படி சொன்னால், இறந்தவரை அடக்கம் செய்தப் பின்னர், அதற்கு மேலே பல கற்களை குவியலாக குவித்துவைத்து, அந்த இடத்தை அக்கால மக்கள் அடையாளப்படுத்தியிருந்தனர்.

இப்படிப்பட்ட கற்குவைகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 15-க்கும் மேற்பட்டவையாக கிடைத்திருப்பது கவனத்துக்குரியதாகும். குண்டுரெட்டியூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் இதுபோன்ற இரும்பு உருக்கும் ஆலை இருந்ததையும், அங்கேயும் கற்கால மக்கள் வாழ்ந்ததையும் அடையாளப்படுத்தியிருந்தோம். அதைத்தொடர்ந்து, இப்பகுதியில் கிடைத்திருப்பதையும் தொல்லியல் துறைக்குக் கவனப்படுத்துகிறோம். பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய இந்த ஈமக்காட்டினை தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்யும்போது, இங்கு மேலும் பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கிடைக்கக்கூடும்’’ என்கிறார் பேராசிரியர் பிரபு.