Published:Updated:

`மூன்று சக்கர வாகனத்தில் அனைத்து வசதிகளுடன் நடமாடும் வீடு!’ - அசத்திய நாமக்கல் இளைஞர்

எங்கு செல்ல திட்டமிடுகிறார்களோ அங்கேயே வீட்டை ஓட்டிச் செல்லும் வகையிலும் குறைந்த செலவில் நிறைவான வீடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முடிவெடுத்து வடிவமைத்துள்ளேன்.

நடமாடும் வீடு
நடமாடும் வீடு ( எம். விஜயகுமார் )

``சிறு வியாபாரிகள் இனி ஒவ்வொரு நாளும் வீட்டுக்குச் சென்று வர முடியவில்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை. எங்கு செல்ல திட்டமிடுகிறார்களோ அங்கேயே வீட்டை ஓட்டிச் செல்லாம்'' என்கிறார் இளம் கட்டடக் கலை வல்லுநர் அருண்பிரபு.

முன்புறம்
முன்புறம்
எம். விஜயகுமார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த பி.ஆர்க் படித்த அருண் பிரபு என்ற 23 வயது இளைஞர் மூன்று சக்கர ஆட்டோவில் ஒரு லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் வீடு ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த வீட்டைப் பொதுமக்களும் கட்டடக்கலை வல்லுநர்களும் பார்த்து பரவசம் அடைந்துள்ளதோடு அருண்பிரபுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுபற்றி அருண்பிரபு, ''என் தந்தை குணசேகரன் வேலூரில் எலெக்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அம்மா கோமதி. தங்கை அக்‌ஷய லக்‌ஷ்மி சட்டக் கல்லூரி பயின்று வருகிறார். நான் சென்னையில் பி.ஆர்க் படித்து முடித்துவிட்டு பெங்களூருவில் பில் போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

வீட்டுக்குள்
வீட்டுக்குள்
எம். விஜயகுமார்

எனக்குச் சிறுவயதிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. பலபேர் நான்கு சக்கர வாகனங்களில் வீடுகள் அமைத்து உள்ளனர். ஆனால், மூன்று சக்கர வாகனத்தில் குறைந்த செலவில் வீடு யாரும் அமைத்ததில்லை. அதனால் எனக்கு 3 சக்கர வாகனத்தில் குறைந்த செலவில் வீடு அமைக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது.

அதையடுத்து பழைய மூன்று சக்கர ஆட்டோ ஒன்றை வாங்கினேன். அதன் பின்புறம் உள்ள பாடியை அகற்றிவிட்டு பழைய பஸ் பாகங்களைக் கொண்டு வீடு கட்டத் தொடங்கினேன். நாடோடிகளும் சிறு வியாபாரிகளும் இனி ஒவ்வொரு நாளும் வீட்டுக்குச் சென்று வர முடியவில்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை. எங்கு செல்ல திட்டமிடுகிறார்களோ அங்கேயே வீட்டை ஓட்டிச் செல்லும் வகையிலும் குறைந்த செலவில் நிறைவான வீடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முடிவெடுத்து வடிவமைத்துள்ளேன்.

அருண்பிரபு
அருண்பிரபு
எம். விஜயகுமார்

இந்த வீட்டுக்குள் படுக்கை அறை, குளியல் அறை, ரெடிமேட் கழிவறை, சமையல் செய்யும் இடம், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் இடம், மின் விளக்கு, மின் விசிறி, சமையல் பாத்திரங்கள் வைப்பதற்கான இடம், துணி காய வைப்பதற்கான இடம், தண்ணீரைச் சூடு செய்வதற்கான இடம், தண்ணீர் பயன்பாட்டுக்காக மேல் மாடிபோல அமைத்து அதில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி மேலே அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு எடுப்பதற்காக மேல் மாடியில் சாய்வு நாற்காலி அமைத்துள்ளேன். நிழலுக்காக 6 அடி சுற்றளவு கொண்ட குடையும் அமைத்துள்ளேன். நடமாடும் வீட்டில் உள்ளே தூங்கும்போது வெப்பம் தாக்காமல் இருக்கக் காற்று உள்ளே வரும்படி ஜன்னல்கள் அமைத்துள்ளேன்.

ரெடிமேட் கழிவறை
ரெடிமேட் கழிவறை
எம். விஜயகுமார்

மின்சாரம் பயன்பாட்டுக்காக 600 வாட்ஸ் சோலார் தகடு அமைத்துள்ளேன். மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்காக பேட்டரி உள்ளே வைத்துள்ளேன். இந்த வீட்டை உள்ளே வடிவமைத்து முழுமையாக முடிப்பதற்கு 5 மாதங்கள் ஆகின'' என்றார்.