Published:Updated:

`காஷ்மீர் விவகாரம்; பயங்கரவாத எச்சரிக்கை!’ - தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் போலீஸார்

தமிழகம் முழுவதும் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை
சோதனை

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 35 ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான நிலை நீடித்துவருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் கைதுசெய்யப்பட்டுவருகிறார்கள். இந்த நிலையில், நாடு முழுவதும் பயங்கரவாத அசம்பாவித சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், சேலம் நகரங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் ஆயுதப் படை ஏ.டி.ஜி.பி சங்கர் ஜிவால் தலைமையிலும், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் எல்லைகளை உள்ளடக்கிய பகுதியில் ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் தலைமையிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை
சோதனை

திருச்சி நகரை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் தலைமையிலும், காஞ்சீபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு வடக்கு மண்டலத்தில் ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தலைமையிலும், திருநெல்வேலி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள் எனப் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இரவு முதல் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண், பெண், திருநங்கைகள் என அனைத்து தரப்பினரையும் போலீஸார் கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுப்புகிறார்கள். உடைமைகளை சல்லடைப் போட்டு அலசுகிறார்கள்.

சோதனை
சோதனை

திரையரங்குக்கு வரும் ரசிகர்களிடமும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களைப் பிடித்துச் சென்று கிடுக்கிப் பிடியாக விசாரணை நடத்திவருகிறார்கள். போலீஸாரின் திடீர் சோதனை எதற்கு என்று புரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். எனினும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவே இந்தச் சோதனை என்றும் பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுவருகிறது.