Published:Updated:

ஒன்பது மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; அசத்திய பிரியதர்ஷினி!

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் பிரியதர்ஷினி ஞானவேலனுக்குக் கிடைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றுள்ளது. 140 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 13 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. இவற்றில் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரியதர்ஷினி ஞானவேலன்
பிரியதர்ஷினி ஞானவேலன்
அக்கா ஊராட்சித் தலைவர், தங்கை ஒன்றியக் கவுன்சிலர்; தந்தை மறைவால் எடுத்த சபதம்; நிறைவேற்றிய மகள்கள்!

வி.சி.க வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் திருப்பத்தூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய 8-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகலா மாதனூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய 2-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு `கை’ சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மற்ற வார்டு 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் தி.மு.க வேட்பாளர்களே நேரடியாகக் களமிறக்கப்பட்டனர். அ.தி.மு.க கூட்டணி ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியைக்கூட கைப்பற்றவில்லை.

இதில், சுவாரஸ்யம் என்னவெனில் ஆலங்காயம் ஒன்றியத்தை உள்ளடக்கிய மூன்றாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பிரியதர்ஷினி ஞானவேலன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

பிரியதர்ஷினி ஞானவேலன்
பிரியதர்ஷினி ஞானவேலன்

பிரியதர்ஷினி ஞானவேலன் பெற்ற மொத்த வாக்குகள் 33,844. அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் வளர்மதி அசோகன் 5,458 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவரைக் காட்டிலும் 28,386 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பிரியதர்ஷினி ஞானவேலன்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகன்யா 2,666 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், தே.மு.தி.க வேட்பாளர் தனலட்சுமி 1,338 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தனர். பா.ம.க போட்டியிடவில்லை.

எம்.எஸ்ஸி, எம்.ஃபில், எம்.எட் பட்டங்களைப் பெற்றவர் பிரியதர்ஷினி ஞானவேலன். இவரின் கணவர் ஞானவேலன் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளராக தி.மு.க-வில் பொறுப்பு வகிக்கிறார்.

மாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்; ஓட்டுக்கேட்டு ஜெயிக்க வைத்த வி.ஐ.பி-க்கள்!

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் பிரியதர்ஷினி ஞானவேலனுக்குக் கிடைத்துள்ளது. இதனால், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியைப் பிடிக்கவும் முயன்று வருகிறார் பிரியதர்ஷினி ஞானவேலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு