Published:Updated:

`10,000 கோடி ரூபாய் நஷ்டம்தான்...ஆனாலும்?' -ஊரடங்கிலும் தொழிலாளர்களின் துயர்துடைக்கும் டாலர் சிட்டி

திருப்பூர் பனியன் கம்பெனி
திருப்பூர் பனியன் கம்பெனி

தனிப்பட்ட பெயர், புகழ் பெறுவதை எதிர்பார்க்காமல் தொழிலாளர்களுக்காக எல்லோரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் பேருக்கு `திருப்பூர் கொரோனா ஃபைட்டர்ஸ்’ மூலம் உதவிகள் சென்றடைந்திருக்கின்றன.

தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி வந்த மனிதர்களால் நிரம்பியிருக்கும் ஊர் திருப்பூர். `அங்க போனா ஏதாவது ஒரு வேலை செஞ்சு பொழச்சுக்கலாம்’ என்ற நம்பிக்கையோடு வந்து இறங்குபவர்களை ஒருபோதும் இந்நகரம் கைவிட்டதில்லை. வாழ வழி தேடி வருபவர்களை வாஞ்சையாக வாரி அணைத்துக் கொள்ளும் ஊராகத்தான் எப்போதுமே இது இருக்கிறது. குறுகிய காலத்திலேயே திருப்பூரின் புகழ் உலக நாடுகளுக்குப் பரவ, இந்நகரம் கொடுத்த உழைப்பும் சிந்தப்பட்ட வியர்வைகளும் ஏராளம். கடற்கரையில் கட்டப்பட்ட மணல் வீட்டை எட்டி உதைத்தாற்போல், கொரோனா இந்நகரின் பொருளாதாரத்தை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டிருக்கிறது. ஆனால், `இதையெல்லாம் கடந்து நாங்கள் மேலெழுவோம்’ என்ற திருப்பூரின் டிரேட்மார்க் நம்பிக்கையை மட்டும் எதுவாலும் அசைக்க முடியவில்லை.

பனியன் தொழிலாளர்கள்
பனியன் தொழிலாளர்கள்

திருப்பூர் மாநகரப் பகுதியின் மொத்த மக்கள் தொகை சுமார் 10 லட்சம். இதில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினர் திருப்பூரின் பிரதானமான பனியன் தொழிலை மட்டுமே நம்பியிருக்கின்றனர். இப்படி பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்துக்கு வழியாய் இருந்த பனியன் கம்பெனிகள் அனைத்தும் கொரோனாவால் மூடப்பட்டுக் கிடக்கின்றன. பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் திருப்பூரில் ஒரு வாரத்தைக்கூட தாண்ட முடியாது என லாக்டெளன் அறிவித்த உடனேயே சொந்த ஊருக்குக் கிளம்பிவிட்டனர்.

கையிலிருக்கும் சேமிப்பு, அரசின் நிவாரணம் மற்றும் ரேஷன் பொருள்களை வைத்து பலரின் வீடுகளில் பசியாற்றப்பட்டு வருகிறது. கம்பெனி ஹாஸ்டல்களில் எவ்வித கவலைகளுமின்றி சுமார் 60,000 வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்க, அதற்கு நிகரான வட மாநிலத் தொழிலாளர்கள் நகரின் வேறு பகுதிகளில் பசியால் வாடுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கொடுக்க யாரேனும் வர மாட்டார்களா... என ஒருகூட்டம் சாலையோரங்களில் காத்துக் கிடக்கிறது.

இப்படியான சூழலில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தோடு 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒரே அமைப்பாக இணைந்து, `திருப்பூர் கொரோனா ஃபைட்டர்ஸ்’ என்ற பெயரில் களமிறங்கி பசியால் வாடுபவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர். தொழிலாளர்களின் உழைப்பில்தான் திருப்பூரின் உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்த முதலாளிகள், பெரும் செல்வந்தர்கள், தன்னார்வ அமைப்புகள் பணத்தையும், பொருள்களையும் கொடுத்து உதவி வருகின்றனர். அரசின் உதவிகள் போதாத, கிடைக்காத, பசியால் வாடும் பலரையும் தேடித் தேடி உதவி வருகின்றனர்.

வெறிச்சோடிக் கிடக்கும் திருப்பூர் சாலை
வெறிச்சோடிக் கிடக்கும் திருப்பூர் சாலை

தனிப்பட்ட பெயர், புகழ் பெறுவதை எதிர்பார்க்காமல் தொழிலாளர்களுக்காக எல்லோரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் பேருக்கு இந்த `திருப்பூர் கொரோனா ஃபைட்டர்ஸ்’ மூலம் உதவிகள் சென்றடைந்திருக்கின்றன.

இந்த நகரத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு இருக்கிறது. இந்த உறவு நிச்சயமாகத் தொடர வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

இதுபோக பல தனிநபர்கள், செல்வந்தர்கள், சின்னச் சின்ன அமைப்புகளும் அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் உணவின்றி சொந்த ஊர் நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் இறங்கி நடையைக் கட்டிய சோகக் காட்சிகள் பலவற்றை நாம் டி.வி-யில் பார்த்தோம். கிட்டத்தட்ட 3 லட்சம் வட மாநிலத்தவர்கள் வசிப்பதாகச் சொல்லப்படும் திருப்பூரில் அப்படியான நிகழ்வுகள் எதுவும் அரங்கேறவில்லை.

`` இந்த நகரத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு இருக்கிறது. இந்த உறவு நிச்சயமாகத் தொடர வேண்டும். அதற்காக அரசின் மூலமாக என்னென்ன செய்ய முடியுமோ அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும். ஏனென்றால் தொழிலாளர்களின் உழைப்பாலேயே இந்நகரம் பொலிவு பெற்றிருக்கிறது” என்கிறார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்.

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்

‘ திருப்பூர் கொரோனா ஃபைட்டர்ஸ்’ குழுவின் முக்கிய செயல்பாட்டாளரான குமார் துரைசாமி நம்மிடம் பேசுகையில், ``சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய பலர், இன்றைக்குத் திருப்பூரின் பெரு முதலாளிகளாக இருக்கின்றனர். தொழிலாளர்களின் உன்னதத்தை அவர்கள் முழுதாக உணர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

தொழிலாளர்கள் இருந்தால்தான் திருப்பூரின் தொழில் நன்றாக இருக்குமென முதலாளிகள் இன்றும் திட்டவட்டமாக நம்புகின்றனர். அதற்காக இந்தச் சூழலில் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அரசுக்கு உதவியாக, நிறுவன முதலாளிகளும் களமிறங்கி தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய சூழலைத் திருப்பூரைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

என்ன ஆகும் திருப்பூரின் எதிர்காலம்? - தவிக்கும் டாலர் சிட்டி!

கிட்டத்தட்ட 10,000 கோடிகளுக்கு மேலான பாதிப்பில் திருப்பூர் பனியன் நிறுவன முதலாளிகளும் நொடிந்து போய்த்தான் கிடக்கின்றனர். தொழிலாளிகள் நாளை பிழைப்பு தேடி வேறு ஊர் செல்லலாம். பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கலாம். ஆனால், பல கோடி கடனில் இருக்கும் முதலாளிகளின் நிலையைத் தொழிலாளர்களும் உணராமல் இல்லை. கொரோனா தொற்று மக்களுக்கிடையே ஒரு பெரும் புரிதலைக் கொண்டு வந்திருக்கிறது.

இன்னும் வீரியமாக எழ வேண்டுமென்கின்ற உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. திருப்பூர்வாசிகளின் குருதியோடு கலந்திருக்கும் உழைப்பின் சூடு கொஞ்சம்கூட குறைந்ததாய்த் தெரியவில்லை.

`கொரோனா தாக்கம்' - எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

திருப்பூர் சாலைகளில் எதிரில் வரும் தொழிலாளர்களின் முகங்களில் `நாங்க திரும்ப வருவோமுன்னு சொல்லுங்க சார்!’ என்ற நம்பிக்கைப் பிரவாகம் தெளிவாகத் தெரிகிறது. லாக்டௌன் நீக்கப்பட்டதும் திருப்பூர் நகரம் முன்பைவிட வேகமாக இயங்கும். தொழிலாளர்களின் வியர்வை, திருப்பூரின் வளர்ச்சியை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும். பல லட்சம் தொழிலாளர்களை தூக்கிச் சுமக்கும் இப்பெரும் நகருக்கு அரசும் சிறப்புக் கவனம் செலுத்தி நேசக்கரம் நீட்ட வேண்டும்.

`இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' எனச் சொன்ன பிரபஞ்சனைப் போல, இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவேயும் நாளைக்கான நம்பிக்கையை ஒருபோதும் இழக்காமல் மௌனப் புன்னகையை வீசியபடி கடந்து செல்கிறார்கள் திருப்பூர்வாசிகள்.

அடுத்த கட்டுரைக்கு