Published:Updated:

`ஒரு மீட்டர் தனிமனித இடைவெளி; குடையுடன் வந்தால்தான் மதுபானம்!’ - திருப்பூர் கலெக்டர் அதிரடி

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்

சமூக இடைவெளியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் பொருட்டு இப்படியான உத்தரவை திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பிறப்பித்திருக்கிறார்.

மே 7-ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற செய்தி குடிமகன்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், ‘மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கச் சொல்லும் அரசு, டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டுப் பிரச்னையைப் பெரிதாக்கலாமா’ எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் கடைப்பிடிக்க வழிமுறை ஒன்றை திருப்பூர் கலெக்டர் பிறப்பித்திருக்கிறார்.

கலெக்டர் விஜயகார்த்திகேயன் ட்வீட்
கலெக்டர் விஜயகார்த்திகேயன் ட்வீட்

இது தொடர்பாக ட்விட்டர் மற்றும் முகநூலில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘திருப்பூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் பொருட்டு மதுபானக் கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வந்து, குடைப்பிடித்து நின்று மதுபானங்களைப் பெற்றுச் செல்ல வேண்டும். குடையுடன் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட மாட்டாது’ எனக் கூறியிருக்கிறார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி சுரங்கத்தை தமிழகத்திலேயே முதலாக அமைத்தது, வட மாநிலத் தொழிலாளர்களின் பிரச்னைகளைக் களைய பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை என திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட,`வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க, குடை எடுத்து வர வேண்டும். இதனால் தானாகவே ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி உண்டாகும்’ எனக் கூறியிருந்தார். அதே குடையை இப்போது டாஸ்மாக் கடைப் பக்கம் திருப்பியிருக்கிறார்.

`கொஞ்சம் ஆம்புலன்ஸ்ல ஏறுங்க சார்!' -திருப்பூர் இளைஞர்களைத் திகிலில் ஆழ்த்திய போலீஸார்

வழக்கமாக கலெக்டர் விஜயகார்த்திகேயனின் சோஷியல் மீடியா பதிவுகளுக்கு, திருப்பூர் மக்கள் பலத்த வரவேற்பு கொடுப்பார்கள். ஆனால், இந்தப் பதிவு பலத்த எதிர்வினையைச் சந்தித்திருக்கிறது.`திருப்பூரில் பனியன் கம்பெனிகளைத் திறக்கக்கூடாது; டாஸ்மாக்கை மட்டும் திறக்கலாமா?’ எனப் பலரும் எதிர்ப்புக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு