Published:Updated:

` உங்களுக்காகவே நான் எழுதுகிறேன்!' - அரசுப் பள்ளி மாணவியை நெகிழ வைத்த திருப்பூர் கலெக்டர்

Students meet Vijaya karthikeyan IAS
Students meet Vijaya karthikeyan IAS

திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயனின் புத்தகத்தைப் படித்துவிட்டு அவரைப் பாராட்டி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநராகக் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, நகரியல் பயிற்சி மைய இயக்குநராக இருந்த கே.விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

Vijayakarthikeyan IAS
Vijayakarthikeyan IAS

`` பொதுப் பிரச்னைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் மக்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசலாம். பொதுமக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படும். அரசு அறிவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதவியேற்ற அன்றே திருப்பூர் மாவட்ட மக்களை ஆச்சர்யப்படுத்தினார் விஜய கார்த்திகேயன்.

வெறும் வார்த்தைகளோடு மட்டும் நிற்காமல், அதைத் தினம்தோறும் நேரடியாகச் செயல்படுத்தியும் வருகிறார். ரேஷன் கடைகளில் ஆய்வு, அரசு மருத்துவமனைக்குத் திடீர் விசிட், குறைதீர்க்கும் கூட்டம், மாற்றுத் திறனாளிகளின் மனுக்களுக்கு உடனடி உதவித் தொகை எனப் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

Students meet Vijayakarthikeyan IAS
Students meet Vijayakarthikeyan IAS

மாவட்ட ஆட்சியர் பணி ஒருபுறம் இருந்தாலும், எழுத்தாளராகவும் வலம் வருகிறார் விஜய கார்த்திகேயன். `அதுவும் இதுவும்', `எட்டும் தூரத்தில் IAS', `ஒரே கல்லில் 13 மாங்காய்', சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையான Heart quake என ஏராளமான புத்தங்களை எழுதியிருப்பது இவரது ஸ்பெஷல். இதில், Heart quake புத்தகம், அதிகம் விற்பனையான புத்தகங்களின் வரிசையில் இடம்பிடித்தது.

மாவட்ட ஆட்சியர் எழுதிய புத்தகம் ஒன்றைப் படித்திருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாநகராட்சிப் பள்ளி மாணவி கனிகா. இதுகுறித்து ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. சிறுமியின் கடிதத்தைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இணைத்து, `இதற்காகவே எழுதுகிறேன்’ என நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய கார்த்திகேயன்.

மாணவி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், `நீங்கள் திருப்பூருக்கு கலெக்டராக வந்ததற்கு வாழ்த்துகள். நீங்கள் எழுதிய ’ஒரே கல்லில் 13 மாங்காய்’ என்ற புத்தகத்தை என் அப்பா வாங்கிக் கொடுத்தார். உங்களின் புத்தகத்தைப் படித்து அதில் மூழ்கிப்போய்விட்டேன். அந்த அளவுக்கு உங்கள் புத்தகம் எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் பேச்சு வழக்கில் எழுதியிருந்தீர்கள். அதனால் எனக்குப் படிக்கக் கடினமாக உள்ளது. மற்றபடி நீங்கள் சொல்ல வரும் கருத்து எனக்குப் புரிகிறது.

Student's Letter
Student's Letter

உங்கள் புத்தகத்தில் நிறைய பொது அறிவு விஷயங்கள் உள்ளன. அதில் நீங்கள் வரைந்திருக்கும் ஓவியங்களும் அதன்கீழே எழுதியிருக்கும் வாக்கியத்தையும் படித்தாலே நீங்கள் சொல்ல வரும் கருத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் புத்தகம் மிக எளிமையாக உள்ளது. இனி நீங்கள் எழுதும் ஒவ்வொரு புத்தகமும் முதலில் எங்கள் வீட்டில்தான் இருக்கும். நானும் உங்களைப்போல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முயற்சி மேற்கொண்டிருக்கிறேன். நானும் நாட்டு மக்களுக்காகச் சேவை செய்ய விரும்புகிறேன்' எனத் தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார் மாணவி கனிகா.

Vikatan

மேலும், `இப்போது எனக்குப் பள்ளி விடுமுறை. அதனால் உங்களை நேரில் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அனுமதித்தால் அலுவலகம் வந்து சந்திப்பேன்' எனக் குறிப்பிட்டிருந்தார் மாணவி. அதைப் படித்த ஆட்சியர், மாணவி கனிகா மற்றும் அவரின் சக நண்பர்களையும் நேரில் வரவழைத்துப் பேசினார். மாணவிகளும் கலெக்டருக்குப் பரிசுகள், கடிதம் போன்றவற்றைக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர். அவற்றை விஜய கார்த்திகேயன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று சந்தித்த பள்ளி மாணவியரின் சிறுகதைகள் மற்றும் ஓவியம். “செல் போன்”ன்னுக்கு பதில் இவர்களை சிறுகதைகளையும்...

Posted by Vijayakarthikeyan K on Tuesday, October 1, 2019

மாணவியின் கடிதம் குறித்து ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் பேசினோம். ``மாணவி கனிகா, என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கடிதம் எழுதியிருந்தார், அதைப் பார்த்ததும் அவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்துப் பேசினேன். அப்போது நான் எழுதிய புத்தகத்தைப் பற்றிக் கூறினார். சிறுமி எழுதிய சில சிறுகதைகள், ஓவியங்கள் ஆகியவற்றைக் காட்டினார். மிக ஆச்சர்யமாக இருந்தது. அவரது எதிர்காலம் சிறப்பதற்கு சில வழிகாட்டுதல்களையும் வழங்கினேன்" என்றார் இயல்பாக.

மனிதன் - யானை மோதலுக்குத் தீர்வு கண்டுபிடித்த 9-ம் வகுப்பு மாணவன்! #CelebrateElephants

மாணவி கனிகாவின் தந்தை ராம்குமாரிடம் பேசினோம். ``திருப்பூரில் கார்மென்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறேன். என் மகள் படிப்பில் மட்டுமல்லாது, பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களையும் விரும்பிப் படிப்பாள்.

Students
Students

மேலும் சிறுகதைகள் எழுதுவதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம். அவள் படிக்கும் பள்ளியில் நடக்கும் விழாக்களில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள். அவர்களைப் பார்த்துதான், நானும் கலெக்டராக வேண்டும் என எங்களிடம் கூறுவாள்.

திருப்பூருக்குப் புது கலெக்டர் வரவிருக்கிறார் எனக் கேள்விப்பட்டதும், அவர் எழுதிய புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படித்தாள். கலெக்டரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது” என நெகிழ்ந்தார்.

இதையடுத்து, நம்மிடம் பேசிய கனிகா, ``புத்தகம் படிக்கும் ஆர்வத்துக்கு என் அப்பாதான் முக்கியமான காரணம். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே நிறைய புத்தகங்களை வாங்கித் தருவார். அப்படி, அப்பா வாங்கித் தந்த புத்தகம்தான் ஐ.ஏ.எஸ் விஜய கார்த்திகேயன் சார் எழுதியது. அதில்,`புத்தகம் தொடர்பாக விமர்சனம் எழுதலாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Students meet Vijayakarthikeyan IAS
Students meet Vijayakarthikeyan IAS

நானும் கலெக்டருக்குக் கடிதம் எழுதினேன். நான் எழுதிய கடிதத்தைப் பார்த்துவிட்டு என்னை நேரில் அழைத்துப் பேசினார். கல்வி தொடர்பாக நிறைய அறிவுரைகளை வழங்கினார். ’செல்போனைப் பார்க்காமல் என்னுடைய புத்தகத்தைப் படித்ததற்கு நன்றி. அதிலும், என் புத்தகத்தை உங்களைப் போன்ற மாணவி படித்ததில் மிகவும் பெருமையாக உள்ளது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள்' என வாழ்த்தி அனுப்பினார். அவரது வாழ்த்து, அதிகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது" என்றார் உற்சாகக் குரலில்.

அடுத்த கட்டுரைக்கு