Published:Updated:

`ஆர்டர் செய்தால் மளிகைப் பொருள்கள் ரெடி!’ - திருப்பூர் கலெக்டரின் புது ஐடியா #SocialDistancing

கலெக்டர் விஜய கார்த்திகேயன்
கலெக்டர் விஜய கார்த்திகேயன்

கொரோனா அச்சத்தால் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக புது யோசனையை அறிவித்துள்ளார் திருப்பூர் கலெக்டர்.

கொரோனா தொற்றால் மொத்த உலகமும் ஸ்தம்பித்துப்போயுள்ளது. அனைத்து நாடுகளிலும் வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 600-க்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி
சமூக இடைவெளி

இருந்தும் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் அரசின் அறிவுறுத்தலையும் தாண்டி வெளியில் நடமாடிக்கொண்டே உள்ளனர். தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர மற்றவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது கடைக்கு வெளியில் அடையாளம் குறிக்கப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.

`செல்லாத நோட்டுகளாக மாறிய சேமிப்புப் பணம்!' -கலங்கிய மூதாட்டிகளுக்கு கரம்கொடுத்த திருப்பூர் கலெக்டர்

இருந்தும் பெரும்பாலான ஊர்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தியேன் ஒரு புது யோசனையை அறிவித்துள்ளார். அதாவது திருப்பூர் பகுதியில் இயங்கும் மளிகைக்கடைகளின் பெயர்களுடன் அந்தக் கடையின் போன் நம்பரும் வெளியிட்டுள்ளார்.

#திருப்பூர் மக்களே ! கீழே உள்ள கடைகளுக்கு phone பண்ணி உங்களுக்குத் தேவையான பொருட்களை order செய்து கொள்ளலாம் ! பின்...

Posted by Vijayakarthikeyan K on Wednesday, March 25, 2020

அத்தியாவசியப் பொருள்கள் வாங்க நினைப்பவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைக்கு போன் செய்து ஆர்டர் செய்தால் அவர்கள் அனைத்துப் பொருள்களையும் ரெடி செய்து தயாராக வைத்திருப்பார்கள்.

பின்னர் கடைக்காரர்கள் போன் செய்யும்போது நாம் சென்று அதைப் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படும். அதனுடன் பொதுமக்கள் கூடுவதும் குறையும். இதேபோல அந்தந்தப் பகுதிகளுக்கான தொலைபேசி எண்களை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கலெக்டர் விஜயகார்த்திகேயன். இவரது அறிவிப்பு திருப்பூர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

`WHO ஃபார்முலா; மலிவு விலை’ - உள்ளூரிலேயே சானிடைஸர் தயாரித்து அசத்திய திருப்பூர் கலெக்டர் #Corona
அடுத்த கட்டுரைக்கு