Published:Updated:

`கிருமி நாசினி சுரங்கம்’ - திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

கிருமி நாசினி சுரங்கம்
கிருமி நாசினி சுரங்கம்

அரசின் உத்தரவுகளை மீறி சந்தைப் பகுதியில் மக்கள் கூடுவதால் ஆட்சியர் மக்கள் மீது தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில்தான் இந்தச் சுரங்கத்தை நிறுவியுள்ளதாக வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் 1,500-க்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர். மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் `கிருமி நாசினி சுரங்கம்’ என்ற புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க வீட்டைவிட்டு வெளியே வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சந்தை மற்றும் பலசரக்கு கடைகளில் மக்கள் அதிகமாகக் கூடி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள சந்தைப் பகுதிக்கு முன்பாக `கிருமி நாசினி சுரங்கம்’ என்பதை அம்மாவட்ட நிர்வாகம் தனியார் அமைப்புடன் இணைந்து அமைத்துள்ளது. தமிழகத்தில் இதுமாதிரியான கிருமி நாசினி சுரங்கம் வைப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உதவியோடு தனியார் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இந்தக் கிருமி நாசினி சுரங்கத்தை நிறுவியுள்ளார். பல பகுதிகளிலிருந்து வரும் மக்கள் 3 முதல் 5 விநாடிகள் சுரங்கத்துக்குள் சென்ற பின்புதான் சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். `கிருமி நாசினி சுரங்கம்’ செயல்படும் விதத்தை அம்மாவட்ட ஆட்சியர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். சிறிய துகள்களைப்போல இந்தக் கிருமி நாசினிகள் சுரங்கத்துக்குள் தெளிக்கப்படுகிறது. மக்கள் உள்ளே சென்று வெளியேறும்போது உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், மக்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்றும் பாதுகாப்பான முறையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசின் உத்தரவுகளை மீறி சந்தைப் பகுதியில் மக்கள் கூடுவதால் ஆட்சியர் மக்கள் மீது தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில்தான் இந்தச் சுரங்கத்தை நிறுவியுள்ளதாக வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இந்தக் கிருமி நாசினி சுரங்கம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தனியார் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`கொரோனா தொற்றிலிருந்து மருத்துவர்களைக் காக்கும் கவசம்!' -களமிறங்கிய DRDO
அடுத்த கட்டுரைக்கு